top of page

முன்னுரை

“உங்களுக்குள்ளே குறைசொல்லும் ஆவி இருக்கிறது! குற்றம் கண்டுபிடிப்பதே உங்கள் வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்!“

ஓஹோ? பரிசேயர், சதுசேயர், வேதபாரகர், ஞாயசாஸ்திரிகள், ஆசாரியர் போன்ற மதவாதிகள், வெறும் வாய்ப்பேச்சினால் மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்த இவர்களுடைய மாயுமாலத்தை சுட்டிக் காட்டிய இயேசுவிடம் என்ன ஆவி இருந்தது? குறைசொல்லும் ஆவியா?
“உன்பேரில் எனக்குக் குறை உண்டு”. என்று ஆவியானவர் வெளிப்படுத்தின விசேஷத்தில் சபைகளைக்குறித்துச் சொல்லும்போது அவர் குறை சொல்லுகிற ஆவியா? ஏழு சபைகளில் ஆறு சபைகளிலுமே அவர் குறைகளை சுட்டிக்காட்டினாரே? குற்றம் கண்டுபிடிப்பதே அவர் வழக்கமோ?

அப்போஸ்தல நடபடிகளிலும் நிருபங்களிலும் பேதுருவும், பவுலும், எபிரேயருக்கு எழுதினவரும், யாக்கோபும், யூதாவும், சபையினரின் குற்றங்களை எடுத்துச் சொல்லும்போது அவர்கள் எந்த ஆவியினாலே இதைச் செய்தார்கள்? பவுல் கலாத்தியாவில் வந்தபோது பேதுருவை எந்த ஆவியினாலே கடிந்துகொண்டான்? பரிசுத்த ஆவியானவரால் அல்லவா? கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனுக்கு விரோதமாக பவுல் பேசியிருக்கக் கூடாதோ? திருத்தம் கொண்டுவர விரும்பின பவுலுக்கு விரோதமாக பேதுரு எதிர்த்துப் பேசவில்லையே! (இன்று விசுவாசிகளை வஞ்சித்துக்கொண்டு ஊழியர்கள் என்ற பெயரில் பணம், பேர், புகழ் அதிகாரம், மனுஷ அங்கீகாரம் இவைகளின்பின்னே அலையும் பெரும்பாலான பிரசங்கிகள் அபிஷேகம் பெற்றவர்களே அல்ல; ஆட்டுத்தோல் போர்த்தின ஓநாய்களே!)

ஆவிக்குரிய சபையில் இருப்பவர்கள் மாமசத்துக்குரியவைகளை துணிந்து செய்துகொண்டிருந்தால், பரிசுத்தாவியானவர் ஆவிகளைப் பகுத்தறியும் வரம் மூலமாக போலிகளை அடையாளம் காட்டுவார் என்று கொரிந்து சபையிலிருந்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னது அதே ஆவியானவராலே ஏவப்பட்டல்லவா?
எல்லா ஆவிகளையும் சோதித்தறியுங்கள் என்று அப்போஸ்தலனாகிய யோவான் சொன்னது தனி நபர் நன்மைக்காகவா? எல்லா விசுவாசிகளும் பயன்பெறவேண்டும் என்பதற்காகவல்லவா?

பாவங்கள் மன்னிக்கப்பட்ட விசுவாச சகோதரரை அந்த பழைய பாவங்களை சுட்டிக்காட்டி குற்றம்சாட்டுவது சாத்தானுடைய வேலை. ஆனால் அக்கிரமத்திலும் துன்மார்க்கத்திலும் அப்பாவி மக்களை வஞ்சிக்கிரதிலும் தொடர்ந்து ஈடுபடும் கள்ள‘சகோதரர்’களை அடையாளப்படுத்துவதுதான் அக்கறையுள்ள எந்த விசுவாசியும் மெய்சகோதரருக்கு செய்யவேண்டிய மிகப்பெரும் கடமை.

ஜீவனுக்கு அழைத்துச் செல்லும் நல்வழி காட்டுவது எந்த அளவுக்கு மிகமுக்கியமோ அதே அளவுக்கு முக்கியம் துருபதேசத்தை கொப்பளிக்கும் இன்றைய பண ஆசைபிடித்த பிரசங்கியார்கள் இழுத்துச் செல்லும் வழி அழிவுக்கானது என்று அதில் போகும் ஏமாந்த மக்களை எச்சரிப்பது. அல்லவா?பூமியதிர்ச்சியும் காட்டுத்தீயும் சுனாமியும் வரும்போது “ஆபத்து! டேக் டைவர்ஷன்!” என்று பதாகை வைப்பது உயிர்களைக் காப்பாற்றும் அவசியமான ஒரு மனிதநேய செயல்தானே?

உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். இந்தப் புத்தகமும் இதற்கான ஒரு முயற்சியே.

இந்த முன்னுரையை வாசிக்கும்பொழுதே என் மேல் உங்களுக்கு கோபம் வருமானால், ஸ்தேவான் அன்று அவனை பொய் குற்றம் சாட்டி கொலை செய்யும்படியாக விசாரணைக்கு உட்படுத்திய யூத அதிகாரிகளையும் வேடிக்கைபார்த்த பொதுஜனங்களையும் பார்த்து, ‘வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்தஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்’ என்று சொன்னதுதான் இங்கும் எனக்கு சொல்லத் தோன்றுகிறது.

குற்றங்களை சுட்டிக்காட்டும்போது குற்றம் செய்கிறவர்களுடைய குற்றத்தை ஒத்துக்கொள்ளாமல் அதை மறுத்து, மறைத்து, அதை செய்கிறவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ‘விசுவாசிகள்’ குற்றவாளிகளுக்கு துணை போகிறவர்களே. இப்படிப்பட்டவர்கள் எண்ணிக்கை கூடும்போது குற்றவாளிகள் துணிந்து இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரிக்குமல்லவா? யோசியுங்கள்.

bottom of page