top of page

முடிவுரை

மறுபடியும் பிறந்த விசுவாசிகளாலான சபையை, அதின் அவயவங்களாகிய அங்கத்தினர்களை, வேசித்தனம் செய்ய தூண்டுவதிலிருந்து உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்கச் செய்து வீதிகளெங்கும் ஃபேஷன் ஷோ போல ஊர்வலம் இழுத்துச் செல்கிற இன்றைய பிரசங்கிமார்களைக் கண்டால் பரிசுத்தாவியானவர் நிச்சயமாக வைராக்கியம் கொள்ளுவார். கறைதிரையற்ற சபையாக தன் மணவாட்டியை இயேசு தனக்கு முன் நிறுத்திக் கொள்வதற்கு இடையூறாக என்ன இருந்தாலும், யார் இருந்தாலும் அதை, அவர்களை, அவர் அகற்றிப்போட தயங்கவே மாட்டார். ஆதி சபையிலே அனனியா சப்பீராள் தம்பதியினரை உடனே அடித்தாரே!

பரிசுத்தாவியானவர் இப்பொழுதுதெல்லாம் உடனடி ஞாயத்தீர்ப்பு செய்வதில்லையா? நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்! ஒருவேளை இன்று அவர் இப்படி செய்வாரானால், அடக்க ஆராதனை நடத்துபவர்களே செத்துக்கொண்டிருப்பார்கள். நம் வீடுகளில் பிரேதங்கள்தான் மிஞ்சும். தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும் அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருக்கிறாரோ?

கிறிஸ்தவத்தை வயிற்றுப்பிழைப்பாக மட்டுமல்லாது செல்வம் விளைவிக்கும் வியாபாரமாக ஆக்கிவிட்டிருக்கிற இன்றைய ஊழியர்கள் இப்படி அப்பாவி விசுவாசிகளை வஞ்சிக்கும்போது உங்களுக்குள் இருக்கும் ஆவியானவர் தேவவைராக்கியத்தைத் தூண்டுவார். நீங்கள் இக்காலத்து எலியாவாக இருந்தால் உங்களால் சும்மா இருக்கமுடியாது!

மாம்சத்துக்குரியவர்களாய் இருப்பீர்களானால் மனந்திரும்ப வேண்டியது அவசியம். அவசரம். ‘ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களாயிருந்தும் ஆவியின்படி நடவாமல் மாம்சத்தின்படி நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்புண்டு’. தேவகோபாக்கினை!

bottom of page