top of page

முகவுரை

Zeal. Jealousy. Wrath. வைராக்கியம். எரிச்சல். உக்கிரகோபம்.

“அய்யய்யோ, கெட்டவார்த்தைகள்! கிறிஸ்தவ குணாதிசயங்களே அல்லவே! விசுவாசிகள் ஆவியின் கனியைக் காண்பிக்கவேண்டியவர்கள் அல்லவா? அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் – இவைகளில் வைராக்கியம் வரவே இல்லையே? அதுவுமல்லாமல் இது புதிய எற்பாட்டுக் காலம் ஆயிற்றே! நாம் எல்லோரிடமும் அன்பாகவும் பொறுமையாகவுமே இருக்கும்படியாக அல்லவா கர்த்தராகிய இயேசு கற்றுக்கொடுத்தார்?

மாம்சத்தின் கிரியைகள் என்கிற பட்டியலில் வருவதல்லவா வெளியரங்கமாயிருக்கின்ற வைராக்கியங்கள், கோபங்கள் போன்றவைகள்? விசுவாசிகளுக்கு இந்த சுபாவங்கள் இருக்கக் கூடாதே!”

“உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்”. இது பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல; “நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே” என்று புதிய ஏற்பாட்டிலும் சுட்டிக்காட்டப்படும் வசனம்தான். கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாள் ஒன்று வெகு சீக்கிரம் வருகிறதே!

இந்த தேவனின் ஒரேபேறாயிருந்து முதர்பேறானவர் இயேசு கிறிஸ்து. அன்பே உருவான அவர், அப்பாவி மக்களின் மீது கொண்டிருந்த அன்பின் நிமித்தமாக, இப்பூமியில் வாழ்ந்த நாட்களில் தன்னுடைய பிதாவின் சுபாவத்தை வெளிப்படுத்தினார். ஒருமுறையல்ல; இருமுறையல்ல; அவசியப்பட்டபோதெல்லாம் எரிச்சலையும் கோபத்தையும் தேவ வைராக்கியத்தையும் வெளியரங்கமாகவே காண்பித்தார்.

தேவனுக்கு பயந்தவன் என்று மக்களை ஏமாற்றி, துன்மார்க்கத்தையும், மாயுமாலத்தையும், கபடத்தையும் வஞ்சகத்தையும் வாரி இரைக்கும் மதவாதிகளைக் கண்டால் நீங்கள் எப்படி சும்மா இருக்கிறீர்கள்? தெய்வீக சுபாவமாகிய தேவவைராக்கியம் இல்லாதவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்க முடியாது. நீங்கள் எப்படி?

bottom of page