top of page

அத்தியாயம்11 – யாக்கோபு

12 கோத்திரங்களுக்கு. நமக்கும்தான்!

நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். வாரந்தோறும் சபை கூடுகையிலும் வேதபாட கூட்டத்திலும் (பலர் நாள்தோறும் யூ டியூப் மற்றும் டி‌வி சேனல்கள் மூலமாகவும்) வசனம் கேட்டுக் கேட்டு காதுகள் செவிடானதுதான் மிச்சம். கேட்ட வசனத்தின்படி செய்வது அல்லது வாழ்க்கையில் அப்பியாசிப்பது என்பது இல்லவே இல்லை. சொல்லப்படும் வசனம் அதோ அவனுக்குத்தான் இதோ இவளுக்குத்தான் என்றும் ‘நல்லா சொல்லுங்க,, கரக்ட்’ என்றும் சொல்லவே பழகிவிட்டோம். எனக்குத்தான் என்று எடுத்துக் கொள்பவர்கள் ஓரிருவர் தான். மற்றவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்களே.

மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக. நமக்குப் வசதியாயிருந்தால் வசனத்தை ஏற்றுக்கொள்வதும், கண்டிப்பதாக இருந்தால் புறக்கணித்து தள்ளிவிடுவதும் இது மற்றவர்களுக்குத்தான் பொருந்தும் என்று தட்டிவிடுவதும் நம்முடைய வழக்கமாக்கிவிட்டிருக்கிறோம். எல்லாமே முதலாவது எனக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்வதுதானே யதார்த்தம்? ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள விசுவாசம் உண்டு. அர்ப்பணிக்கவும், பாடுகள் படவும், உபத்திரவம் அனுபவிக்கவும் விசுவாசம் – ஐயோ , வேண்டாம்.

விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். அப்படிபட்ட வெத்துவேட்டு விசுவாசத்தினால் யாருக்கு என்ன பலன்? விசுவாசிக்கிறேன் என்று அறிக்கையிடுபவரின் அடுத்த செயலே கீழ்ப்படிதல்தான். அதனால்தான் ‘விசுவாசம்’ உள்ளவனாகி ‘ஞானஸ்நானம் பெற்றவனே’ இரட்சிக்கப்படுவான். நாம் உலகத்தார் அல்ல என்று விசுவாசிக்கிர நாம் உலகத்தார் அல்ல என்பதை செயலில் காண்பிக்க வேண்டியது அவசியம். ஊரோடு ஒத்து வாழ்ந்தால், உலகத்தார் போல் உண்டால், உடுத்தினால், நேரம் கழித்தால், வெறிகொண்டால், பொய் சொன்னால், ஏமாற்றினால், நடித்தால், மாயுமாலம் செய்தால், நம்முடைய விசுவாசம் செத்ததே. இதற்கு பதிலாக நாம் விசுவாசிகள் என்று பீற்றிக்கொள்வதை நிறுத்திக்கொள்வதே மேல்.

இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான். மெய்தேவன் மீது 99% விசுவாசமும் 1% சந்தேகமும் இருப்பது 100% சந்தேகப்படுவதற்கு சமம். இன்று அனேகருக்கு மெய்தேவன் மீது கொஞ்சம் விசுவாசமும், தங்கள் மீதும் தங்களுக்கு போதிக்கிறவர்கள் மீதும் மீதி விசுவாசமும்தான் காணக் கிடைக்கிறது. சபை கூடி வரு ம்போது அதீத விசுவாசியாகவும், அந்த இரண்டு மணி நேரம் போக மற்ற நேரமெல்லாம் உலகத்தார் போலவும் வாழ்பவர் இருமனமுள்ளவரே. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் விசுவாசப் பயணத்தில் ஒத்து வராது.

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல. அவர் வார்த்தைகளே சத்தியம். இந்த அவருடைய வேத வார்த்தைகளை ஏற்காத எதுவும் பொய்யே; ஏற்காத எவரும் பொய்யரே.

ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும். தேவபக்தி உள்ளவர் எவரும் வாய்தவறிக்கூட பொய் பேசமாட்டார்கள். கெட்ட வார்த்தை ஒன்றும் அவர்கள் வாயிலிருந்து வராது. புரணி பேச மாட்டார்கள். சக மனுஷரை தூஷிக்க மாட்டார்கள். வஞ்சனையான வார்த்தைகள் கக்க மாட்டார்கள்.. சும்மாதானே சொன்னேன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். நாவை அடக்காதவர்கள் வீண் பக்தியுடையவர்களே.

நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது! நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது. யாக்கோபு சொல்லுவது உரைக்கிறதா?

மனுஷருக்குள்ளே பேதகம்பண்ணி, தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்கள் முகதாட்சணியம் செய்கிறவர்களாவார்கள். பணக்காரர்களையும், அரசியல்வாதிகளையும் சமுதாயத்தில் பேர் புகழ் அதிகாரம் பெற்றவர்களையும் உயர்வாகவும் தரித்திரரையும் வரியவரையும் கனவீனம் பண்ணி தாழ்வாக கருதி நடத்துகிறவர்கள் விசுவாசிககளாக இருக்க முடியாது. ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயம் தீர்க்கப்படுவீர்கள். சுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப்போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்.

அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. இன்று படிப்பு ஏறாதவர்களும், சோம்பேரிகளும், வேலை இல்லாதவர்களும், உலக வேலைக்குத் தகுதி அற்றவர்களும், அப்பனுடைய புருஷனுடைய ஊழியத்தை தன் சொத்தாக ஆக்கிக் கொள்ள அலைபவர்களும் சுலபமாக சம்பாதிக்க போதகர்கள் ஆகிவிடுகிறார்கள். இவர்கள் யாருமே மற்றவர்களுக்கு போதிக்க தகுதி அற்றவர்கள். இவர்களில் பலர் இரட்சிக்கப்படக்கூட இல்லை. ஆக்கினை கொஞ்சநஞ்சம் அல்ல இவர்களுக்கு!

உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள். உலகத்தார் மீது நம்முடைய மனப்பான்மை இப்படி இருந்தால், அவர்களிடம் சுவிசேஷம் பகிர்ந்து கொள்ளவோ, அவர்களுடைய இரட்சிப்புக்காக ஜெபிக்கவோ முடியாது. பாவம் செய்கிற விசுவாசிகளாய் இருந்தால், அவர்களை ஓரிரு முறை கண்டித்து திருத்த முயற்சிக்கலாம். திருந்தாத பட்சத்தில் அவர்களை விட்டு விலகி, அவர்களை அன்னியராக கறுதவேண்டும். அவ்வளவே. வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.

சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள். பிசாசுதான் பொய்க்குப் பிதா. உங்கள் வேலை, வருமானம், படிப்பு, வசதி, சொத்து, பழக்க வழக்கங்கள், வரி கட்டதாதற்கு அல்லது குறைத்துக் கட்டுவதற்கான காரணம், தாமதமாக வந்ததற்கான, அல்லது வராததற்கான காரணம், விடுப்பு எடுக்க அல்லது கொடுக்கப்பட்ட வேலை முடிக்காததற்கான காரணம், ஹெல்மெட் போடாததற்கு அல்லது சிக்னலில் நிற்காததற்கு, இப்படிப் போல பல தருணங்களில் பொய் சொல்லி, சாத்தானுக்கு பிள்ளைகளாகாதிருங்கள். இருப்பதற்கும் மிஞ்சியோ, குறைத்தோ சொல்லுவதும் நடிப்பதும் பொய்யே. பவுலைக் கேளுங்கள்: ‘நான் இவ்வளவுதான்’.

விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். தேவனை நேசிக்கிறேன் என்று சொல்லும் நீங்கள் உலகத்தையும் சிநேகித்தால் இது விபசாரமல்லாமல் வேறென்ன? தேவனுக்கு அர்ப்பணித்து ஊழியம் செய்யும் வேலைக்காரராகிய அவருடைய அடிமைகள் உலகம் விரும்பித் தொடரும் பட்டம், பதவி, பணம், புகழ், அதிகாரம், அங்கீகாரம், இவைகளைத் தேடி ஓடினால் இது வேசித்தனம்தானே? மினிஸ்டர் என்றால் தேவனுக்கு பணிவிடை செய்பவர் என்றல்லவா பொருள்?

நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறீர்கள். இன்றைக்கு அநேகர் ஜெபிப்பதெல்லாம் இம்மைக்குரிய நன்மைகளுக்காகவே. மற்றவர்களைப் போலவே தாங்களும் மாடி வீடு கட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும், வசதியை பெருக்கிக் கொள்ள வேண்டும், உயர்ரக உணவு உண்ண வேண்டும். (படிப்பு, வேலை, ஞானம், அறிவு ஞாபக சக்தி, மனித தயவு இதெல்லாமே மேற் சொன்னவைகளுக்காகத்தான்).

தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்,. உங்கள் படிப்பு, திறமை, பணம், சொத்து, வேலை, பதவி, ஜாதி, சமுதாய அந்தஸ்து, உங்கள் தோலின் நிறம், தலை முடியின் நீளம், அழகு, உடற்கட்டு, உங்கள் தொடர்புகள், சபை (?) – எதைக் குறித்து பெருமைப்படுகிறீர்கள்? உங்களை எதிர்த்து நிற்பது யார் பார்த்தீர்களா?

பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது. யாக்கோபு ஏன் இப்படி சபிக்க வேண்டும்? பொல்லாத காரியங்களில் ஈடுபடுவதினாலும் பொல்லாதவர்களோடு கைகொர்ப்பதினாலுமல்லவா? வெளிப்படையாக தெரியாவிட்டாலும், இருதயத்திலே அசுத்தம் உள்ளதால் அல்லவா?

இப்பொழுது உங்கள் வீம்புகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மைபாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது. ஈகோ (ego) என்கிற தற்பெருமை இன்று உலகத்தார் வெளிப்படுத்தும் சுபாவம் என்றல்லாதபடி விசுவாசிகளும் ஊழியர்களும் காண்பிக்கும் ஒரு பொதுவான துற்குணம் ஆகிவிட்டது. மற்றவர்களுக்கு முன்பாக தன்னை மென்மைப் படுத்த எதையும் செய்யும் மனப்பான்மை (வெட்டிப் பெருமை), தவறு என்றாலும் பின்வாங்காமல், தொடர்ந்து பிறர் முகத்துக்காக செய்தல் (பார்க்கிறவர்கள் நம்மை பெலவீனர் என்று நினைத்து விடுவார்களோ? எரோது இராஜா யோவான் ஸ்நானகனின் தலையைக் கொண்டுவரச் சொன்னது இதனால்தான்), மன்னிப்பு கேட்க மறுப்பது, நான் ஒன்றும் உனக்குக் குறைச்சல் இல்லை என்று காண்பிப்பது, குற்றம் என்று தெரிந்தாலும் அதை ஒத்துக்கொள்ள மறுப்பது, (இவ்வளவு நாள் இந்த தவறான கருத்தையே பிரசங்கித்து விட்டேன், இனி இதை மாற்றி பிரசங்கித்தால் காலம்காலமாக என்னைக் கேட்டுக்கொண்டிருப்பவர்கள் என்னை கேள்வி கேட்க மாட்டார்களா?), நீ யார் எனக்குச் சொல்லித்தர / கேள்வி கேட்க? எங்கேயோ இடிக்கிறதா?

ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள். உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும். கடைசி நாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள். பூமியிலே நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் நடக்கிறதுபோல உங்கள் இருதயங்களைப் போஷித்தீர்கள். யாக்கோபுக்கு செல்வந்தர்கள் மீது ஏன் இவ்வளவு கடுப்பு? தேவனுடைய கோபத்தின் வெளிப்பாடோ? ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று இயேசு சொன்னதுதான் ஞாபகம் வருகிறது.

ஊழியக்காரனுக்கு அரைக்கோடி ரூபாய்க்கு கல்லறை கட்ட முயற்சிக்கும் மக்களைப்பற்றி கர்த்தர் என்ன சொல்லுவார்? விசுவாசிகள் பணத்தில் குறைந்தபட்சம் நாற்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள BMW சொகுசு காரில் வலம் வரும் தலைமைப்போதகர் ஐசுவரியவான் அல்லவோ? தனிவிமானமும் ஹெலிகாப்டரும் சொகுசு பங்களாவுடன் இணைந்த ஆலயக்கட்டிடமும், பண்ணை வீடும், உயர் ஜாதி நாய்களும், ஐஃபோனும் ஆப்பிள் வாச்சும் மைனர் சங்கிலியும் ஏழைகளிடம் இருப்பதில்லையே. KFC, பீட்ஸா, பர்கர், பிரியாணி, 5 ஸ்டார் ஹோட்டலில் Buffet இதுவே அன்றாட உணவு என்று எளிமையாய் (?) வாழும் தேவப்பிள்ளைகள் இன்று மலிந்து கிடக்கின்றனர். (இவ்வளவு இருந்தும், காணிக்கை தாருங்கள் என்று பிச்சை எடுப்பது மட்டுமே இவர்களை காட்டிக் கொடுக்கும் தரித்திரப்பண்பு).

இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது. ஞாயமாய் உழைத்து சம்பாதிப்பவனுடைய பணத்தை தசமபாகம் காணிக்கை கட்டிட நிதி என்று அபகரித்து தங்களுடைய வசதிகளையும் சொத்துக்களையும் பெருக்கிக்கொள்ளும் நபர்களைப் பற்றிதான் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. பணத்தை காணிக்கை என்ற பெயரில் பறிகொடுத்தவர்கள் தாங்கள் சிக்கிக் கொண்டு தவிக்கும் கடனைக் குறித்து அங்கலாய்த்து கூக்குரலிட்டு தவிக்கும் சத்தம் கர்த்தருக்கு கேட்காமல் போய் விடுமா? அவர்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவர்களை அவர் சும்மா விடுவாரா?

நீதிமானை நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக் கொலைசெய்தீர்கள்; அவன் உங்களோடே எதிர்த்து நிற்கவில்லை. இயேசு கிறிஸ்துவை இப்படி செய்தார்கள் அன்று. “தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்”. இன்றும் இப்படித்தான். பொய்க்குற்றம் சாட்டி, தங்களுடைய பதவிக்கும் பெயருக்கும் உலை வைப்பவர்கள் மீது வீண் பழி சுமத்தி கொலை கூட செய்யத் தயங்காத ஆட்கள் இன்றும் இருக்கத்தானே செய்கிறார்கள்? பணபலம் அதிகார பலத்திற்கு முன்னாக அப்பாவிகளாகிய இவர்களுடைய அமைதி எடுபடுவதில்லையே.

bottom of page