top of page

அத்தியாயம்10 – எபிரேயர்

நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும். இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். இன்றைய சபைகளில் போதகர்கள் பிரசங்கிப்பதிலும்,, விசுவாசிகள் பிரசங்கங்கள் கேட்பதிலுமேயொழிய, (அத்தேனே பட்டணத்தார் போல நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய) வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை. கேட்கிறவைகளை அனுபவத்தில் கொள்ளவேண்டும் என்கிற வாஞ்சை கேட்கிறவர்களுக்கும் இல்லை, போதிக்கிறவர்களுக்கும் இல்லை. ‘ஆஹா, என்ன அருமையான பிரசங்கம்? பத்து பாயிண்ட் சொன்னார் தெரியுமா? அத்தனையும் எழுதி வச்சிருக்கேன் – நோட்டு புக்கில’. ‘எங்கே, ஒண்ணு ரெண்டு சொல்லுங்க பாப்போம்?’. ‘இரு, இரு, பாத்து சொல்றேன்’. தங்கள் இரட்சிப்பைக் குறித்தும் கவலை இல்லை. மற்றவர்கள் இரட்சிக்கப் படவேண்டும் என்கிற பாரமும் இல்லை. உண்ணுகிறதோ பெருந்தீனி. செரிக்கிறதும் இல்லை. செரித்தாலும், சத்தாக மாறுகிறதும் இல்லை. ஆவிக்குரிய டயாபேடிஸ் வந்ததுதான் மிச்சம். தண்டனைக்கு தப்ப முடியாதாமே?

தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கு ஏற்றதாயுமிருக்கிறது; மற்றவர்களுக்கு வேதனை உண்டாக்கும் செயல்களை செய்தலும், கெட்ட வார்த்தையில் சுருக்கென்று திட்டுதலும், பயனற்றவர்களாக வாழ்தலும், தங்கள் சம்பாத்தியத்துக்காக, வசதி பெருக்கத்துக்காக, மற்றவர்களுடைய வாழ்வாதாரத்தை உறிஞ்சுதலும் இதில் அடங்கும். சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.

ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான். ஒருவருடைய வீம்பின் நிமித்தம் அவரை பின்பற்றுகிற அநேகர் தங்கள் நித்திய நன்மைகளை இழக்கவும், தற்காலிக லாபங்களுக்காக இழக்கக்கூடாத நித்திய மேன்மைகளை தொலைக்கவும் தயங்காத சீர்கெட்ட மக்கள் அநேகர் இன்று நம் மத்தியில் உண்டே. ஒருமுறை இழந்துபோனால் திரும்பக் கிடைக்காது. ஜாக்கிரதை!

இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள். அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள். ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி; என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். ஒன்றல்ல, இரண்டல்ல. நாற்பது வருஷம்! விசுவாசிகளுக்கு தேவனுடைய கிரியைகள்தான் தெரிகிறது. அவர் ஏன் இப்படி செய்கிறார் என்பது அன்று மோசேவுக்காவது தெரிந்திருந்தது. இன்று பிரசங்கிக்கிறவருக்கும் தெரிவதில்லை. தேவன் கொடுத்தால் நல்லவர். எடுத்தால் பொல்லாதவர் ஆகிவிடுகிறார். ‘ஏன் இப்படி செய்தீர் ஆண்டவரே?, ‘எனக்கு ஏன் இப்படி செய்தீர் ஆண்டவரே?’ (‘அவனுக்கு மட்டும் ஏன் இப்படி செய்யவில்லை ஆண்டவரே?). இப்படிப்பட்ட கடின இருதயமுள்ளவர்கள் தேவனுடைய ஆணைப்படி அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையாமே? எகிப்தை விட்டு வெளிய வந்தவர்கள்தான். கானானுக்குள் பிரவேசிக்க முடியவில்லை. உலகத்தை விட்டு ஒரு நாள் வெளியே வந்தவர்கள்தான். பாவஞ்செய்தால், கீழ்ப்படியாமாற்போனால், அவிசுவாசிக்களானால். நித்தியத்தில் பிரவேசிக்க முடியாது. ஒருமுறை இரட்சிக்கப்பட்டாலே பரலோகத்துக்கு கன்ஃபார்ம்ட் டிக்கெட் என்று கிடையாது. பாதியிலே இறங்கிவிட்டால் போக வேண்டிய இடம் போய் சேர முடியாது. வேறு வண்டியும் கிடையாது. அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்.

சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.

பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம். ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே.

ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். ‘விசுவாசத்தையெல்லாம் ஒரு மூட்டை கட்டி வச்சிட்டு வந்திருவேன். ஒரு கை பாப்போமா?’. “இயேசுவின் பின்னே போகத்துணிந்தேன். பின் நோக்கேன் நான். பின் நோக்கேன் நான்” என்பது வேறு பாடல் வரிகளாக இருக்கக் கூடாது. ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். ‘பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது’ என்று சொல்லியிருக்கிறாரே!

உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். ஒருவருக்கொருவாரா? போதகர் ஒருவர்தானே புத்தி சொல்ல வேண்டும்? நாங்கள் எல்லாம் உட்கார்ந்து கேட்கதானே சபைகூடி வருகிறோம்? ஆதி சபையிலே ஊழியருக்கு ஒரு மேடை அல்லது பலிபீடம், விசுவாசிகளுக்கு கேளிக்கையையும் வேடிக்கையையும் பார்க்க ஒரு அரங்கமும் இருந்ததில்லை. இது அத்தேனே பட்டணத்தில் உலகத்தார் உருவாக்கின மாதிரி. பெந்தெகோஸ்தே நாளன்று அநேகர் பேசினார்கள். ஒருவருக்கு அடுத்து ஒருவராக பேசியிருக்க வேண்டும். மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்களே! பல வருடங்களுக்குப் பின், எருசலேம் சபையில் யாக்கோபு என்கிற மூப்பர் தவிர பேதுருவும், பவுலும் பர்னபாவும் அடுத்தடுத்து பேசினார்களே!. முக்கியமான தீர்மானம் நிறைவேற்றினார்களே. கொரிந்து சபையில் பலர் பேசலாம் என்றும் அடுத்தடுத்து பேசவேண்டும் என்றும் பவுல் அறிவுறுத்தினாரே? இன்று போதகர்கள் மற்றவர்கள் சொல்லும் ஆலோசனைகளையோ புத்தியையோ கேட்கும் நிலையில் இல்லை. Accountability இல்லை. ‘எனக்குச் சொல்ல நீ யார்?’. இவர்கள் உயரமான சிம்மாசனத்திலே உட்கார்ந்திருக்கிறார்கள். மற்ற யாவரும் தங்களுக்குக் கீழானவர்களே!

மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து, சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.

ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை. இப்படி ஒரு வசனம் வேதாகமத்தில் இருக்கிறதா என்ன? காளான் போல தானாய் முளைத்தெழும்பின ஊழியர்களும் ஊழியங்களும் இன்று எண்ணற்றவை. இப்படி எழும்பினவர்கள் பலர் இன்னும் இரட்சிக்கப்படக்கூட இல்லை. இது மாத்திரமல்ல, ஆரோனின் பிள்ளைகள் ஆசாரியரானது பழைய ஏற்பாடு. ஊழியத்தை வாரிசுரிமை கொண்டாடுவது புதிய ஏற்பாட்டு வழக்கம் அல்ல. இயேசு ஆரோனின் லீவை கோத்திரமல்லவே?திருமணமான பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் தங்கள் ஊழியங்களுக்கு மனைவி பிள்ளைகளை வாரிசுகளாக ஏற்படுத்தவில்லை. பவுல் தன்னுடைய சகோதரியின் மகனை அல்ல, லோவிசாளின் பேரனும் ஐனிக்கேயாளின் மகனுமான விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவையும், தனக்கு எந்தவிதத்திலும் உறவுக்காரனல்லாத தீத்துவையும் அல்லவா தனக்குப் பின் ஊழியர்களாக நியமித்தான்?

காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். இன்னும் குழந்தைகளாகவே இருந்துகொண்டிருக்கிறீர்கள். நரைத்த தாடி வளர்ந்த ஆனாலும் தொட்டிலில் உறங்கும் பாப்பாவோ? தான்க்கு எத்தனை பொம்மைகள் இருந்தாலும், அடுத்த பாப்பா கையில் இருக்கும் பொம்மைதான் வேண்டுமோ? நம் பொம்மையை மற்ற பாப்பாக்கள் விளையாட கொடுக்கவே மாட்டோமோ? கையில் கிடைப்பதை எல்லாம் பிய்த்து எறிவோமோ? எனக்கு இதுதான் வேண்டும் என்றும் அடம் பிடிப்போமோ? சின்னச் சின்ன வலிகளுக்கெல்லாம் கூக்குரலிடுவோமோ? ஊரைக் கூட்டுவோமோ? மற்றவர்களுக்கு ஏதாவது கிடைத்துவிட்டால் பொறாமைப்படுவோமோ? யாராவது சொல்லிக்கொடுத்துக் கொண்டேதான் இருக்க வேண்டுமோ? சுய புத்தி வராதோ? எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாய் இருக்கிறோமோ? வேதாகமத்திலிருந்து கொஞ்சம் ஆவிக்குரியவைகளை கற்றுக்கொடுத்தால் புரிய மாட்டேன்கிறதோ? சீர்திருத்தல் உண்டாக்கும்படியாக போதித்தால் ஜீரணிக்க மாட்டேன்கிறதோ? நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களோ?

ஆசீர்வாதம், கண்ணீர் துடைத்தல், ஆறுதல் தறுதல், உற்சாகம் ஊட்டுதல், உசுப்பி விடுதல், ‘அல்லேலூயா சொல்லுங்கள்’, ‘ஆமென் சொல்லுங்கள்’, ‘ஆடுங்கள்’, ‘பாடுங்கள்’, ‘அற்புதம் வேண்டுமா? வாருங்கள்’, ‘கை தட்டுங்கள்’, ‘விசில் அடியுங்கள்’, ‘உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்’ – இவைகள்தான் ருசிக்கிறதோ?

பால்தான் குடிப்போமோ? NanPro, PediaSure போன்ற Pre-digested உணவுதான் பிடிக்கிறதோ? வேதாகமத்தை தேவ ஆவியானவருடைய உதவியோடு புரிந்துகொண்டு ஜீவன் பெற்றுக் கொள்ள முடியாமல், மனுஷர் எழுதின புத்தகங்களும், வேத வல்லுனர்கள் ஸ்டடி பைபிளிலும் யூடியூபிலும் அளிக்கும் (கலப்படமான,) உரைகளும்தான் உங்கள் விசுவாச ஜீவியத்திற்கு ஆதாரமாக (ஏற்கும் உணவாக) உள்ளதோ? ஆவிக்குரிய ஆகாரம் விஷம் நிறைந்த ஃபாஸ்ட் ஃபுட் ஆகிவிட்டதோ? அடிக்கடி ஆவிக்குரிய வியாதியில் விழுந்து விசுவாசத்தில் தளர்ந்து போவது இதனால்தானோ? சிறுபிள்ளைத்தனமாக இல்லை?

போதிக்கிற (பாடுகிற?) யாரைக் கண்டாலும் father என்று அழைக்கிறீர்களோ? நானும் நீங்களும் தன்னுடைய பிதாவை நம்முடைய பிதா என்று அழைக்க உரிமை கொடுத்த, உங்களையும் என்னையும் தன்னுடைய சகோதரர் என்று ஏற்றுக்கொண்ட, நம்முடைய மூத்த சகோதரனாகிய இயேசுவும் நமக்கு இயேசப்பா தானோ? வளரவே மாட்டோமா?

பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்? நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.

bottom of page