top of page

அத்தியாயம் 9 - பவுல் – கலாத்தியருக்கு

புத்தியில்லாத கலாத்தியரே!

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சம்தான் எங்களுக்கு சோறுபோடுகிறது. இவைகளுக்கடுத்தவைகளாகிய உணவு, உடை, உறைவிடம், வசதி, பட்டம், பதவி, புகழ், அதிகாரம், சமுதாய அங்கீகாரம், இவைகளல்லவா எங்களை இரவும் பகலும் ஓடவிடுகின்றன? இதிலிருந்து கிறிஸ்து விடிவு தருவாரென்றால் இவைகளெல்லாம் அடிமைத்தனமா?

நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். பவுலுக்குத்தான் ஏன் இவ்வளவு கோபம்? ஏன் ஒருமுறை அல்ல இரண்டுமுறை சாபமிடுகிறான்? சுவிசேஷம் என்கிற பெயரில் இன்று பிரசங்கிக்கப்படும் செய்திகள். பெரும்பாலும் வேதத்தின்படியானது அல்ல. பாவத்தின் தண்டனையிலிருந்தும், சாபத்தின் பிடியிலிருந்தும், பாவத்தின் அதிகாரத்திலிருந்தும் விடுதலை பெறும்படி அளிக்கப்படும் மனந்திரும்புதலுக்கேதுவான செய்திதான் சுவிசேஷம். மற்ற எல்லாமே மக்களை தங்கள்பக்கம் கவர்ந்திழுக்கும்படியாக சொல்லப்படும் துர்செய்திகளே! ஆசீர்வாதமும், செழிப்பும், சுகமும், கண்ணீர் துடைத்தலுமே நற்செய்தி அல்ல.

கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் “பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர்” என்று தன்னுடைய இனத்தாராகிய யூதர்களைக் குறித்துதான் சொல்கிறான். இன மொழி நிற ஜாதி வேறுபாடு பார்க்காத கிறிஸ்துவின் சபைக்குள்ளே இவர்கள் புகுந்துகொண்டவர்கள் இவர்கள் ‘இயேசுகிறிஸ்துவினால் உண்டான தேவகிருபையினாலே அவர்மீதுள்ள விசுவாசத்தைக் கொண்டு மாத்திரமே இரட்சிக்கப்படுகிறோம்’ என்பதை விட்டுவிட்டு ‘கிரியையினாலேதான் இரட்சிக்கப்பட முடியும்’ என்று போதித்தார்கள். இதை அந்த கலாத்தியா சபையினரும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். எனவேதான் பவுலுக்கு இவ்வளவு தேவவைராக்கியம்.

கிரியைகள்? வெள்ளை உடுத்தினால்தான் தேவன் பரிசுத்தம் என்று ஏற்றுக்கொள்ளுவாரோ? ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்திலே தங்களுடைய வஸ்திரங்களைத் தோய்த்தெடுத்தவர்கள் காவிநிற வஸ்திரம் தரிப்பார்களே? இவர்கள் ஒருவேளை ஒதுக்கப்படுவார்களோ? இரத்தாம்பரம் விற்ற லீதியாளை பவுல் ஏன் கண்டிக்காமல் விட்டார்? உடல் மறைக்க வெள்ளை உடுத்தி உள்ளமெல்லாம் காரிருள் சூழ்ந்துள்ள ‘விசுவாசிகளின்’ முகத்தை மட்டுமே தேவன் பார்ப்பாரோ? காதுகளிலும் கழுத்திலும் கைகளிலுமிருந்து நகையை கழற்றிப்போட்டவர்கள் இருதையத்திலே இன்னும் இவைகளை ஆசையோடு (இச்சையோடு) அணிந்துகொண்டிருந்தால், அணிந்திருக்கிறவர்களை பொறாமையோடு பார்த்தால், அணிவதைக் குறித்து குறைகூறினால், தேவன் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாரோ?

இந்த நாள் தேவசித்தம் நிறைவேறும் நாள் என்பதிவிட நல்ல நாளாகட்டும் என்பதற்காகவே ஜெபம் செய்கிறவர்களா நீங்கள்? வேதம் வாசிக்காவிட்டால் பரீட்சையில் ஃபெயில் ஆகிவிடுவோம் என்ற பயத்தினாலேயே ஒரு வசனமாவது வாசிக்க காலண்டரைத் தேடுபவரா நீங்கள்? நல்ல வரன் கிடையாமல் போய்விடுமோ என்றோ, பிள்ளைவரம் கிடைக்கவேண்டும் என்பதற்காகவோ, வியாபாரம் லாபகரமாக இருக்க வேண்டும் என்பதற்காகவோ ஞாயிற்றுக்கிழமைகள் தவறாமல் கோயிலுக்குப் போகும் பக்தரோ நீங்கள்? கடவுள் கண்ணை நோண்டிவிடுவார் என்பதினாலேயே சினிமா சீரியல்களைத் தவிர்ப்பவர்களோ நீங்கள்? பணரீதியான ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதை எதிர்பார்த்தே ஊழியம் செய்பவரா நீங்கள்?

புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் அன்பின் நிமித்தம் தேவனுக்கு கீழ்ப்படிபவர்கள். கட்டாயத்தின் நிமித்தமோ, கீழ்ப்படியாமல் போனால் வரும் தண்டனையை தவிர்க்கும்படியாகவோ, கீழ்ப்படிந்தால் அதினால் கிடைக்கும் ஆசீர்வாதத்துக்காகவோ அல்ல. இவர்கள் தேவனுடைய பிள்ளைகளே; மனுஷருக்கு அடிமைகளோ பழைய ஏற்பாட்டு பிரமாணங்களை மதிக்கும் உலகத்துக்குரிய இராஜ்ஜியத்துக் குடிமகன்களோ அல்லது கூலிக்காரரோ அல்லவே அல்ல.

பழைய ஏற்பாட்டின்படி தசமபாகம் தவறாமல் கொடுத்து தேவ தயவைப்பெறலாம் என்றெண்ணி சாபத்தைக் கூட்டிக் கொள்பவரா நீங்கள்? உலகப்பொருளை ஆசீர்வாதம் என்றெண்ணி அதை அடைந்துகொள்ள காணிக்கையை விதையாக விதைப்பவரா நீங்கள்? ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அடைந்துகொள்ள உங்களையே பலியாக ஒப்புக்கொடுக்க மறுப்பவரா நீங்கள்? உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?

நியாயப்பிரமாணம் அடிமைப்படுத்தும். கிருபையோ சுயாதீனமருளும். நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்;...கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். தேவனோடு நல்லுறவை வாஞ்சித்து அவருக்கு முதலிடம் கொடுப்பதை புறந்தள்ளி அதிகாலை நான்கரை மணிக்கு எழுந்து நெடுமுழங்காலில் நின்று கண்ணீரோடு ஜெபிப்பதினாலேயே தேவன் அந்த நாளை ஆசீர்வதிப்பார் என்பது கிரியைக்கு கூலி கேட்பதல்லாமல் வேறென்ன? திரும்பவும் சாபத்துக்குள்ளாக்கிக் கொள்வதல்லாமல் வேறென்ன? ஆவியிலிருந்து மாம்சத்துக்குரியவர்கள் ஆவதல்லாமல் வேறென்ன?

நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே! சுபகாரியங்களுக்கு சுபமுகூர்த்த நாள், நல்ல நேரம், புதன்கிழமை பார்க்கிற கிறிஸ்தவரா நீங்கள்? புதிய ஏற்பாட்டில் சொல்லப்படாத லெந்து நாட்கள் அனுசரித்து அசைவ உணவு தவிர்க்கும் பக்தார்களா நீங்கள்? வேதாகமத்தில் தேதி குறிப்பிட்டு சொல்லப்படாத கிறிஸ்மஸ், குட் ஃப்ரைடே, ஈஸ்டர் விமரிசையாகக் கொண்டாடுபவரா நீங்கள்?

கொலோசே சபைக்கு பவுல் சொல்வது போல, “நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல, மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன?” தேவன் சுத்தமாக்கினவைகளை நீங்கள் தீட்டாக எண்ணுவது ஏன்?

சரீரத்தில் செய்யப்படும் விருத்தசேதனம் மாம்சத்துக்குரியது. இருதையத்தில் செய்யப்படும் விருத்தசேதனமோ ஆவிக்குரியது. முந்தையது பழைய ஏற்பாடு; இப்பொழுது நடைமுறையில் உள்ளது புதிய ஏற்பாடு; புதிய உடன்படிக்கை. சுயாதீனம் அடைந்தவர்கள் திரும்ப அடிமைத்தனத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தால் புத்தியீனம்தானே? ஆவியில் ஆரம்பித்து மாம்சத்தில் முடிக்க எத்தனிக்கிறவர்கள் ‘இத்தனை புத்தியீனரே’!

ஆராதனை நடத்துவது, அற்புத சரீர சுகமளிக்கும் கூட்டம் நடத்துவது, இசைக்கருவிகள் வாசிப்பது, வேதப்பகுதி வாசிப்பது, பிரசங்கம் பண்ணுவது, அபிஷேகக் கூட்டம் நடத்துவது, இவையெல்லாம் தேவ ஆவியானவரில்லாமலேயே செய்து விட முடியும். செய்கிறார்களே!

பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ் சுமந்ததினால், பவுல் முகமுகமாய் அவனோடே எதிர்த்தான். எருசலேமிலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே பேதுரு புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, யூதருக்கு பயந்து, விலகிப் பிரிந்தான். மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான். இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை பவுல் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக அவன் பேதுருவை நோக்கி, “யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்துகொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்? நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே”.

மாயக்காரர் மாயுமாலம் அல்லது மாயம் பண்ணி மனுஷரை வேண்டுமானால் ஏமாற்றலாம். தேவனை அல்ல. பவுல் இன்னொரு இடத்தில் சொல்லும்போது தன்னைக் குறித்து யாரும் மிஞ்சி எண்ணவேண்டாம் என்று கூறுகிறான். மெய்யாலுமே ஒரு யதார்த்தவாதிதான்!

இடத்துக்கு தகுந்தாற்போல வேஷம் போடுவது விசுவாசிகளுக்கு அழகல்ல. பகுத்தறிவுவாதிகள், இந்து, இசுலாமிய, கத்தோலிக்க மதத் தலைவர்களோடு ஒரே மேடையில் நின்று கைகோர்ப்பது கிறிஸ்தவ போதகர்களுக்கு ஏற்றதல்ல. அரசியல்வாதிகளோடு பிரசங்கியார்களும் அமர்ந்து தங்களை சமமாக அடையாளப்படுத்துவது கண்டிக்கத்தக்கதே.
ஒரு மூத்த ஊழியன் நடிகனாகும்பொழுது சுற்றியிருக்கிற துணை ஊழியர்களும் நடிகராவது சாதாரணம்தானே? ஆபூஷணங்களும் அபிநயங்களும் கவர்ச்சிகரமாக உடை உடுத்தலும் கிறிஸ்தவ மேடைகளில் இன்று தண்ணீர் பட்ட பாடு. நாய் வேஷம் போட்டபின் குரைத்துத்தானே ஆகவேண்டும்? கேவலமெல்லாம் பார்க்கக் கூடாது. கீழ்த்தரமான ஈன இளிவான எந்த நிலைக்கும் போகத் தயங்கக்கூடாது!

விக்கிரக ஆராதனையை பாவம் என்று கண்டித்து போதித்தால் இந்துக்கள் கத்தோலிக்கரின் காணிக்கை வராதே என்று அதைப் பற்றி பேசுவதை தவிர்க்கும் ஊழியர்களை பவுல் கண்டித்திருக்க மாட்டானா? குடித்து வெறித்து வேசித்தனம் செய்துகொண்டிருக்கும் ‘விசுவாசிகளின்’ தர்மப்பணத்தை பவுல் வாங்கி பாக்கெட்டில் போட்டிருப்பானா? மேடையில் நிற்கும்போது பரிசுத்தவான்களாகவும் அங்கிருந்து இறங்கிய அடுத்த நொடியே வேஷம் கலைந்து அசல் அசுத்தவான்களாகவும் மாறிப்போகும் ‘தேவதாசர்கள்’ யாரை ஏமாற்ற நினைக்கிறார்கள்?

கொலை செய்யாதிருப்பாயாக, .விபசாரம் செய்யாதிருப்பாயாக. களவு செய்யாதிருப்பாயாக. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக” என்ற ஒழுக்க நெறிகள் தண்டனையிலிருந்து தப்பிக்கவோ, ஆசீர்வாதம் பெற்றிக்கொள்ளும் நோக்கோடோ, நற்கிரியைக்குக் கூலியாக தயவு சம்பாதித்துக்கொள்ளும் எதிர்பார்ப்போடோ கைக்கொள்ளாதபடி, அன்பிநிமித்தமாக செய்யப்படவேண்டும் என்பதற்காகவல்லவா அன்பை அடிப்படையாகக் கொண்ட இரண்டு பிரதான கற்பனைகளை நம் கர்த்தர் நமக்கருளினார்? உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். திரும்ப அடிமைத்தனத்துக்கு கொண்டு செல்லும் சட்டதிட்டங்களிலிருந்து நம்மை விடுவிக்க அல்லவா நமக்காக நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றி முடித்தார் நம் இரட்சகர்? இந்த இயேசுவே, தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார் அல்லவா?

இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக விசுவாசிகளுக்குள்ளே பிரத்தியட்சமாய் வெளிப்படுத்தப்பட்டிருந்தால் கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன் என்பதும் மெய்தானே? அவரை தரித்துக்கொண்டவர்கள் ஜாதி சமூக அந்தஸ்து வித்தியாசம் பார்க்க மாட்டார்கள். ஆண்கள் பெண்களை அடிமைகளாக நடத்தமாட்டார்கள். (மனைவிக்கு அடிமைகளான புருஷன்மார்களாக விசுவாசிகளும் பாஸ்டர்களும் இருக்க மாட்டார்கள்!).
சத்தியத்தை சொல்லுகிறவர்களை சத்துருவாகக் கருதுகிற விசுவாசிகளும் போதகர்களும் இன்று மலிந்து உள்ளார்கள். நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டாமல் அற்ப அனாவசிய உலக விஷயங்களுக்காக பகைமை பாராட்டுவார்கள்.

நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள். நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.
நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம். சுயநலமிக்க ஒரு விசுவாசி தனக்கு நற்பெயர் உண்டாக்கும்படியாக குற்றம்சுமராத மற்றவர்களை பொல்லாதவர்களாக சித்தரிக்க எத்தனிக்கும்பொழுது இது இழிசெயலேயல்லாமல் வேறென்ன? இதை தீர விசாரிக்காத மேய்ப்பர் இந்த பிராதுவை அப்படியாயே ஏற்றுக் கொள்வது ஏன்? தனக்கு சாதகமாக இருப்பதினாலேயா?

மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம் (ஒரு வாழ்க்கைத்துணை இருக்கும்போது வேறு ஆண்கள் / பெண்களோடு உறவு – மனதிலும் தான்), வேசித்தனம் (திருமாணமாகும் முன்பே எதிர்பாலினத்தாரோடு உடலுறவு), அசுத்தம் (மற்ற வகையான தவறான அசிங்கமான பாலியல் பழக்கங்கள்), காமவிகாரம் (ஓரினச்சேர்க்கை போன்ற இயற்கைக்கும் மாறான பாலியல் உறவுகள், லிங்கம் யோனி ஆராதனை), விக்கிரகாராதனை (மாதா இயேசு, அச்சிஸ்டர்கள் – இவர்களின் சிலைகள், படங்கள், கும்பிடும் இடங்கள், சிலுவை ஜெபமாலை, ஊழியர்கள், தீர்க்கதரிசிகள், தலைமை போதகர்கள், பணம், சொத்து, நகை, வேலை, தாய் தந்தை, மனைவி, பிள்ளைகள், மற்றும் மெய்தேவனின் இடத்தை பிடித்துக் கொள்ளும் ஏதுவாக யாராக இருந்தாலும்), பில்லிசூனியம் (யோகா, மந்திரம், மேஜிக், ஆருடம், ஜோசியம், ஜாதகம், நாள் நேரம் பார்த்தல், இன்று நாள் எப்படி), பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள் (மதப் பிரிவினைகளும் தான்), மார்க்கபேதங்கள் (சபைப் பிரிவினைகளும் தான்), பொறாமைகள், கொலைகள் (கருக்கலைப்பும் தான்), வெறிகள் (குடி, போதை வஸ்த்து, பார்ட்டி), களியாட்டுகள் (சூதாட்டம், சினிமா, சீரியல், பாட்டுக் கச்சேரி, பணத்தை முன்னிறுத்தும் விளையாட்டுக்கள், ரசிகர் மன்றம், எண்டர்டெயின்மெண்ட் என்கிற பெயரில் எதுவாக இருந்தாலும்) முதலானவைகளே (இன்னும் இதுபோல் பல); இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். சிலுவையில் அறைந்திருந்தால் மாம்சத்தின் கிரியைகள் வெளிப்படாது.

மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.

ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான். மேடைகளிலும் பொது இடங்களிலும் அங்கீகாரம் தேடும் ஊழியர் இன்று ஆயிரமாயிரம். இதற்காகத்தான் பாஸ்டர் தீர்க்கதரிசி ரெவரெண்ட் மட்டுமல்லாது டாக்டர் பட்டங்களும் பிஷப் பட்டங்களும். வீண் புகழ்ச்சியை விரும்பாமலும, இருக்கக்கடவோம். இவர்களுக்கு அடிப்படை வேத சத்தியங்கள்கூட தெரியாது. உதாரணத்துக்கு, இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்டால் ஆமாம் நான் ஞானஸ்நானம் எடுத்திருக்கிறேன் என்றுதான் பதில் சொல்லுகிறார்கள். இரண்டும் வெவ்வேறு என்பதே தெரிவதில்லை. அதனால் இதை போதிப்பதும் இல்லை. ஒரு பெருங்கூட்டத்தை நேரடியாக நரகத்துக்கு கூட இழுத்துச் செல்லுகிற அட்டூழியர்கள்தான் இவர்கள்.

உங்களைக் கலக்குகிறவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் தனக்கேற்ற ஆக்கினையை அடைவான். உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும். இது நான் சொல்வதல்ல. அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வதே.

bottom of page