top of page

அத்தியாயம் 8 – பவுல் கொரிந்துவில்

இதோ இன்னொரு சம்பவம். புதிய ஏற்பாட்டிலிருந்துதான். ஏறக்குறைய 1960 வருஷங்களுக்கு முன் நடந்தது.

கொரிந்து. மத்தியக் கிழக்கு ஆசியாவில் மிகவும் ஆரவாரமிக்க ஒரு தொழில்நகரம். உலகமே இங்குதான் குழுமினது. பல நாடுகளின் வியாபாரிகளும் கூடி பண்டங்கள் மாற்றுமிடம். வெகுவாக பணம் புழங்குமிடம்.

பவுல் இங்கு ஊழியம் செய்யப் போனான். பலர் இரட்சிக்கப்பட்டார்கள். விசுவாசிகளானார்கள். சிலர் ஆவியின் நிறைவைப்பெற்று உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை அவருடைய கட்டுப்பாட்டுக்குள் மூழ்கிப் போனார்கள். இதுதான் பரிசுத்தாவியின் அபிஷேகம். கிறிஸ்துவின் சபையின் ஒரு பகுதி இங்கு உருவானது. கொரிந்து சபை.

ஆனால் இங்குதான் நிறைய குழப்பங்களும்.

நான் அப்பல்லோவைச் சேர்ந்தவன், நான் பவுலைச் சேர்ந்தவன், நான் கேபாவைச் சேர்ந்தவன், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவன் என்று சபைக்குள் கட்சிகள் உருவாயின. பவுலுக்கு படுகோபம்.

பவுல்: “நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்”. அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.

உங்களுக்கும் கோபம் வருகிறதா? வரணும். தேவ வைராக்கியம் நல்லதுதான்.
“நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ?”

ஆவிக்குரியவர்கள், மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்தஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கும்பொழுது. ஜென்மசுபாவமான மனுஷர்களாகிய இவர்கள் தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவைகள் அவர்களுக்கு பைத்தியமாகத் தோன்றுகிறது. அவைகளை அறியவுமாட்டார்கள்.

கொரிந்து சபையில் அநேகர் மாம்சத்துக்குரியவர்களாகவும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளாகவும் இருந்தார்கள். மாம்சத்தின் கிரியைகளை வெளிப்படுத்தினவர்களாக வாழ்ந்தார்கள். ஆவியில் வளரவே இல்லை. தேவவசனம் ஏற்கவேயில்லை. பெலனில்லாதவர்களானதால், திட போஜனங்கொடுக்க முடியவில்லை. பாலைதான் குடிக்கிறார்கள். மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் இவர்களுக்கு பெலனில்லை. குழந்தைகளுக்குத்தான் பிரம்பு!

“அவன் வச்சிருக்கிற பொம்மை எனக்கு வேணும்; (அதே இல்லைன்னாலும் அதே மாதிரி வேணும்); என்கிட்ட ஒண்ணு எனக்கின்னு இருந்தாலும் அந்த வீட்டில இருக்கிற மனைவி, அந்த தட்டில இருக்கிற உணவு, அந்த ஊரில இருக்கிற வீடு நல்ல இருக்கும்போல இருக்கே; அவங்கிட்ட இருக்கிறது போலவே என்கிட்டையும் ஒண்ணும் இருக்கணும்; அவனோடதவிட பெரிசா இருக்கணும்; நான் ஒண்ணும் அவனுக்கு சளச்சவன் கிடையாது; அவன் பண்ணுவதைவிட நான் கொஞ்சமாவது அதிகமாப் பண்ணி நான் பெரிசுன்னு காண்பிச்சுக்குவேன் (வெட்டி பந்தான்னு நீங்க இத சொல்லுவீங்க, பரவாயில்ல); என்கிட்ட இல்லைன்னாலும் கடன வாங்கியாவது அவனுக்குப் போட்டியா செய்வேன்; நான்தான் எப்பவுமே (குறுக்கு வழியிலேயாவது) ஜெயிப்பேன்; அவனை ஜெயிக்க விடமாட்டேன்; அவனைவிட நான் புத்திசாலின்னு காண்பிச்சுக்கிட்டே இருப்பேன்; எனக்கு புத்தி சொல்ல ஒருவனுக்கும் தகுதி கிடையது; சொன்னால், அவனக் குறைசொல்லி வாய அடச்சிடுவேன்; பல வருஷங்களுக்கு முன்னாடி அவன் செஞ்ச தவற பொதுவுல எடுத்து சொல்லி அவன் மானத்த வாங்கிடுவேன். என் தவறை மறைப்பதற்காக மற்ற யாரை வேண்டுமானாலும் மாட்டிவிட்டு அதில் குளிர் காய்வேன்”. சிறுபிள்ளைத்தனமாக இல்லை?

விசுவாசி ஆவதற்கு முன்னிருந்த அதே முன்கோபம், காமம்வழியும் பார்வை, வஞ்சிக்கும் எண்ணம், பொய் நாவு, கெட்டவார்த்தை, திருட்டுக்குணம், புரணிபேசுதல், அருவருப்பை ரசித்தல் – இவைகளெல்லாம் அடிக்கடி என்னை அறியாமல் வெளிப்பட்டுவிடுகிறதே! சிலுவையில் அறையப்பட்ட பழையமனுஷன் அவ்வப்பொழுது இறங்கி வந்துவிடுகிறானோ?
இவர்களுக்கு போதிக்கிறவர்களும் வயதுசென்ற குழந்தைகளும் போலி சாமியார்களுமே. பாவம் இந்த கள்ளநோட்டுக்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அப்பாவி குழந்தைகள்!

இதோ, இவர்களைப்போலவே குழந்தைகளாக இருந்துகொண்டிருந்த எபிரேய விசுவாசிகளுக்கு: “காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்” என்று கர்த்தர் சொல்லுவது அவர்களை எச்சரிக்கத்தானே!

இவர்களுக்கு “கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்கள்”தான் ஏற்கும். செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு – இதையேதான் திரும்பத்திரும்ப பிரசங்கிக்கிறதும் பிரசங்கம் கேட்பதுமாகவே வருடங்கள் ஓடிப்போய்விடுகின்றன. இவைகள் பரிசுத்தாவியானவருடைய உதவியோடு செயலில், நடைமுறையில், அனுபவத்தில் கொண்டு, பின்பு இவைகளையும் தாண்டி பூரணராகும்படியாக கடந்துபோக இவர்களுக்கு விருப்பமில்லை.

மனந்திரும்புதலோடு நின்றுவிடுபவர்களே பெரும்பாலானோர். இதுகூட இரட்சிக்கப்படுவதற்கு அவசியம் என்பதை பிரசங்கிக்கிறவர்கள் அழுத்தம் திருத்தமாகச் சொல்லாததினால், அநேகர் மனந்திரும்புவது கூட இல்லை. பாவத்தைக்குறித்தும் நீதியைக்குறித்தும் வரப்போகும் நியாயத்தீர்ப்பைகுறித்தும் சொன்னால்தானே மனந்திரும்புதலின் அவசியம் பாவிகளுக்குத் தெரியும்? பாவிகளா? நோ, நோ, அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. மக்கள் கோபித்துக்கொண்டு போய்விடுவார்கள்!
இதற்கு உடனடியாக அடுத்துவரும் விசுவாசம் என்னும் கட்டத்திலேயே, தேவன் பேரில் வைக்கும் விசுவாசம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்கு அவசியம் என்று போதிப்பதைவிட, பூமிக்குரிய செழிப்பு செல்வங்களுக்காக என்று திரித்து போதித்து, மக்களை திசைமாறச் செய்துவிடும் பிரசங்கியார்களே அதிகம்.

பழைய வாழ்க்கையை அடக்கம் செய்துவிடுவதற்கு ஒப்பான தண்ணீரில் மூழ்கி எடுக்க அவசியமான ஞானஸ்நானம், மனந்திரும்பாதவருக்கும் கொடுக்கப்பட்டுவிடுவது கொடுமையே. விசுவாசியின் பிள்ளை 15 வயது ஆனதினாலேயோ, ஊழியக்காரனுடைய மகன் மகள் என்பதாலேயோ வாரிசு நியமிக்கும் எண்ணத்தோடு (சில சமயம் இவர்கள் விழுந்துபோயிருக்கிற கெட்ட பழக்க வழக்கங்களிலிருந்து விடுதலைபெரும் மருந்தாக) முக்கியெடுத்து விடுகிறார்கள். பணமுதலைகள் பெரிய காணிக்கை கொண்டுவருபவர்கள் என்பதால், இரட்சிக்கப்படாமலேயே ஞானஸ்நானம் கொடுத்து சபையில் அங்கத்தினராக சேர்த்துக்கொள்ளப்படுவது சகஜமாகிவிட்டிருக்கிறது.

பரிசுத்தாவியின் ஞானஸ்நானம் அல்லது அபிஷேகம் என்பது ஒரு விசுவாசியின் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தை உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை ஆவியானவர் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்பவர்களுக்கே என்பதை மறுத்து, அசுத்தாவிபிடித்த சிலரால் கற்றுக்கொடுக்கப்படும் ‘லபோ திபோ ஷங்க்கரபபபா ஷீக்கபா’பை கொஞ்சம் அப்படி கொஞ்சம் இப்படி மாற்றி உளறிக்கொட்டுபவர்களை ஆவியின் வரமாகிய அன்னியபாஷை பேசுவதாக அங்கீகரித்து உற்சாகப்படுத்துவதைக் கண்டால் பவுலுக்கு நிச்சயமாகக் கடுங்கோபம் வந்திருக்கும். உங்களுக்கு? இப்படிப் பேசினால்தான் மக்கள் நம்மை ஆவிக்குரியவர்களாக ஏற்றுக்கொள்வார்கள் என்று எண்ணி பாடவும் பிரசங்கம்பண்ணவும் சான்ஸ் வேண்டும் என்பவர்கள் பாஸ்டர் முன்பாக இப்படிப் படம் போடும் செயல் எரிச்சலுக்குரியதல்லவா? பிரசங்கிகளில் ஆரம்பித்து பாமர விசுவாசிகள் வரை எல்லாரும் தேவனுடைய கண்ணில் மண்ணைத்தூவும் இந்த முயற்சியில் ஈடுபடும்போது மெய் விசுவாசிகளாகிய நீங்கள் சும்மா இருந்தால் உங்களுக்குள் உள்ள ஆவியையே நீங்கள் பரிசோதிக்கவேண்டியது அவசியம் ஆகுமல்லவா?

உபத்திரவங்கள், பாடுகள், வேதனைகள், கஷ்டங்களால் ஒரு விசுவாசி ஞானஸ்நானம் பண்ணப்படுவான் என்பதை சொல்லக்கூட மறுக்கும் இக்கால சுவிசேஷகர்கள் ஊழியக்காரர்கள் இன்னும் அவர்களை ஆவியில் குழந்தைகளாகவே கொஞ்சிக்கொண்டிருப்பதில் சுகம் தேடுவதை என்ன சொல்வது? அப்படிச் சொன்னால் கூட்டமும் வராது, காணிக்கையும் வராது. அய்யய்யோ!

கைகளை வைக்குதல் என்பது பிரதிஷ்டை உடையவர்களை விசேஷமான ஊழியத்துக்கு பரிசுத்தாவியானவரே வேறுபிரிக்கும் செயல் என்பதை விடுத்து, தங்களுக்கு விருப்பம்போல தங்களுக்கு விருப்பமானவர்களை தங்களுக்கு பணிவிடை செய்ய நியமிக்கும் போதகர்களின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது என்று யாரும் குரல் எழுப்புவதே இல்லையே! சபையைவிட்டு பசையுள்ள பார்ட்டி எங்கே போய்விடுவார்களோ, என்கிற பயம்கூட இவர்களை இப்படி செய்யத் தூண்டுகிறதோ? இன்னும் பொது இடங்களில் விசேஷ ஆசீர்வாதம்பெற மேடைக்கு வந்து பிரசங்கியாரின் கைகள் தன்மீது படாதா என்ற அங்கலாய்ப்போடு ஏங்கி நிற்கும் பரிதாபமான ஜனங்களைக் கண்டால் உங்கள் இருதயம் கொதிக்கவில்லையா? இதற்கு மேலும் (?) ஒருபடி போய் சீ டீ, கோட்டு, கர்ச்சீஃப் போன்றவை ஆவியை கடத்தும் பொருட்களாக பயன்படுத்தப்படும்பொழுது உங்களால் எப்படி சும்மா உட்கார முடிகிறது?

மரித்தோரின் உயிர்த்தெழுதல் பற்றி மேடைகளில் பேசப்படுவதே இல்லை. பேசத் தெரியாது. நம்பிக்கை இல்லை. நித்திய நியாயத்தீர்ப்பு பற்றி பேசினால் தங்களுக்கே இது பாதிப்பாகிவிடும் என்கிற காரணத்தால் ஊழியர்கள் இதைப் பற்றிப் பேசி ரிஸ்க் எடுக்க விரும்புகிறதில்லை! இதைப் பற்றி நீங்களும் யோசிக்கவே இல்லையோ?

மனுஷரை மேன்மைப்படுத்துகிறார்கள். கிறிஸ்துவை ஓரங்கட்டி விடுகிறார்கள். எங்க பாஸ்டர், எங்க சகோதரன், எங்க பிஷப். எங்கே கர்த்தர்?

இயேசுகிறிஸ்து என்னும் அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல் மட்டுமல்லாது மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டுகிறார்கள். மனந்திரும்புதலே இல்லாதவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துவிடுகிறார்கள். இரட்சிக்கப்படாதவர்களை சாட்சிசொல்ல மேடையேற்றுகிறார்கள். குடிவெறியர்களை கமிட்டியில் சேர்க்கிறார்கள். நூதன சீஷர்களை சபைப் பொறுப்புகளில் நியமிக்கிறார்கள். திருப்பிப்போடாத அப்பங்களை ஊழியர்களாக அபிஷேகம் பண்ணுகிறார்கள். அறைவேக்காடுகளை ஆராதனை நடத்த முன்னிறுத்துகிறார்கள். சினிமா உலகத்தோடு சமரசம் செய்பவர்களை ம்யூசிக் வாசிக்க வைக்கிறார்கள். விசுவாசத்தில் குழந்தைகளை மூப்பராக்குகிறார்கள். பரிசுத்தஆவிக்கு தங்களை முற்றிலும் ஒப்புக்கொடுக்காதவர்களை முன்னே அழைத்து ஆவியின் வரங்களை அளிக்கிறார்கள். திருடர்களை காணிக்கை எடுக்கவும் எண்ணவும் வைக்கிறார்கள். மறுபடியும் பிறக்காத அரைகுறை ஆடை அணியும் பெண்களை கொயரில் சேர்த்துவிடுகிறார்கள். வீட்டில் பைபிளைத் தொடாதவர்களை எல்லாருக்கும் முன்பாக வேதப்பகுதி வாசிக்க வைக்கிறார்கள். பரிசுத்தவான்கள் போல நடிக்கிறவர்களை பொதுவில் ஜெபம் செய்ய வைக்கிறார்கள். உண்மையான பிரதிஷ்டை இல்லாதவர்களை திருவிருந்து பரிமாற வைக்கிறார்கள். கொள்ளை லாபத்திலும் வட்டிப்பணத்திலும் லஞ்சத்திலுமிருந்து காணிக்கை தசமபாகம் கொடுப்பவர்களிடம் வாங்கிக்கொள்ளுகிறார்கள். அர்த்தமில்லாமல் உளறுபவர்களை அன்னியபாஷையில் பேசுவதாக அங்கீகரிக்கிறார்கள். மனதில் தோன்றியதை சொல்லும்போது ஆவிக்குரிய தீர்க்கதரிசனமாக ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.

“நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்”.

அப்படியா? அப்போ ஆலயம் கட்ட நிதி வசூல் பண்றாங்களே? “இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம்பண்ணுவேன்”ன்னு எல்லாம் மேடையிலேயும் ஆல்ட்டரிலேயும் எழுதிபோடுராங்களே? நூறு கோடி ரூபாய் செலவுபண்ணி கட்ர கட்டடம் எல்லாம் எதுக்கு? “நாங்க கடன் வாங்கி பில்டிங் ஃபண்ட் குடுத்திருக்கோம். போச்சா?”

எங்க பாஸ்டரே பார்ட்டியில கொஞ்சம் குடிக்கிராரே? தம் அடிச்சாத்தான் அவருக்கு பிரசாங்கமே வருமே! புகையிலை எல்லாம் இல்லன்னாலும், கொஞ்சம் மூக்குப்பொடி மட்டும் போட்டுக்குவாரு. அது புகையிலையா? தினந்தோறும் பிரியாணி சாப்பிட்டா நம்முடைய உடலுக்கு கேடு விளைவிக்குமா? கே எஃப் ஸீ, பர்கர், பிட்ஸா ஜங்க் உணவு அடிக்கடி சாப்பிடக்கூடாதா?

“ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக”; அப்படீன எங்க அண்ணன், எங்க ஐயா, எங்க ஃபாதர்க்கெல்லாம் நாங்க கூட்டம் சேத்தக்கூடாதா? வக்காலத்து வாங்கக்கூடாதா?

“கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்”. அப்படீன்னா, உங்க புக்க படிக்காம அதப்பத்தியும், உங்களையே தெரிஞ்சுக்காம உங்களப்பத்தியும் பேசக்கூடாதுங்கறீங்க. கரக்ட்தானே?

“உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?” எல்லாமே பெற்றுக்கொண்டதுதான். வரும்போது கொண்டுவந்ததில்லை. அதனால், உரிமைகொண்டாட முடியாது. ஆனால், இது என்னுடையது, என் வீடு, என் சொத்து, என் செல்வம், என் சபை, என் சர்ச், என்று சொல்ல யாருக்கு என்ன அதிகாரம்?

“உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே. இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்”.

கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள்”. பாவத்தைக் குறித்துதான் சொல்கிறார்.

என்ன சொல்றீங்க? அவர் சமுதாயத்துல பெரிய பேர் உள்ளவர். அவரை எதுத்துக்கலாமா? அவர் யாருக்கும் தெரியாமதானே செய்யறாரு? கொஞ்சம் அடக்கி வாசிப்போம். அவரு நல்லா வெய்ட்டா குடுக்குறவரு. அதுமட்டுமில்ல. அரசியல் செல்வாக்கு இருக்கறதுனால நமக்கும் கொஞ்சம் அதிக சேஃப்டி தானே? அவர் எங்க சொந்தக்காரரு வேற.???

சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது (ஆராதனை பாட்டு பாடுகிற சகோதரி, பீஏ, மேனேஜர், மசாஜ் பண்ணுகிறவள் என்கிற பெயரில் வைப்பாட்டிகள் உள்ளவன், ஒரு மனைவி உயிரோடு இருக்கும்போது விவாகரத்து செய்தோ செய்யாமலோ மறுபடியும் மறுபடியும் திருமணம் செய்துகொண்டவன், எப்பொழுதுமே தன்னைச் சுற்றி ‘சகோதரிகளை’ ‘வைத்து’க்கொள்ளுபவன்), பொருளாசைக்காரனாயாவது (லஞ்சம் வாங்குகிறவன், கொள்ளை லாபம் அடிப்பவன், மது போதைப்பொருள் விற்பவன், பங்குசந்தையே வாழ்வென்றிருப்பவன், அடுத்தவன் சொத்தை, பணத்தை, வாழ்வாதாரத்தை வஞ்சித்து அபகரிப்பவன்), விக்கிரகாராதனைக்காரனாயாவது (ரோமன் கத்தோலிக்கன், சிலுவையைக் கும்பிடுகிறவன், வேதாகமத்தை வணங்குகிறவன், ஊழியனை சேவிக்கிறவன்), உதாசினனாயாவது (எதிர்வாதத்தை கேட்க மறுக்கிறவன், அறிவுரையை ஏற்றுக்கொள்ளாதவன், தூஷிக்கிறவன், புத்திக்கு செவிகொடுக்காதவன், ஒழுக்கநெறிகளை அவமதிக்கிறவன், சோம்பித்திரிபவன்), வெறியனாயாவது (குடிகாரன், பெருந்தீனிக்காரன், போதை வஸ்த்துக்கள் பயன்படுத்துகிறவன், பார்ட்டி விரும்பி), கொள்ளைக்காரனாயாவது (உருட்டி மிரட்டி திருடி பணம் பறிப்பவன், கட்டப் பஞ்சாயத்து பண்ணுபவன், ஏமாந்தவர்கள் காதில் பூ சுற்றி காணிக்கை தசமபாகம் வாங்குகிறவன்) இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; இப்படிப்பாத்தா சபையே காலி ஆயிடுமே? அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது. விருந்து சாப்பாடு அவ்வளவுதானா?

உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன? கிறிஸ்தவர்களுக்கு இடையிலேயே நீதிமன்றங்களில் எத்தனை வழக்குகள்! நீங்களே அநியாயஞ்செய்கிறீர்கள், நஷ்டப்படுத்துகிறீர்கள்; சகோதரருக்கும் அப்படிச் செய்கிறீர்களே. அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்.

வேசிமார்க்கத்தாரும் (திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்பவர்கள், மெய்தேவனை விட்டுவிட்டு விக்கிரகங்களையும், பணத்தையும், உலகப்பொருளையும், ஜோலியையும், ஓவர்ட்டைமையும், புகழையும், சமூக அங்கீகாரத்தையும், பதவியையும் நாடிப்போகிறவர்கள்), விக்கிரகாராதனைக்காரரும் (சிலை, படம், இயற்கை, விலங்குகள், பறவைகள், ஊரும் பிராணிகள், மனுஷர் இவைகளை பணிந்துகொள்ளுகிறவர்கள், தாய் தகப்பன், மனைவி, பிள்ளைகள், வளர்ப்பு நாய், வேலை இவைகளுக்கு முதலிடம்கொடுத்து, தேவனை ஓரம்கட்டி விடுபவர்கள்; புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுவதும் விக்கிரக ஆராதனை சம்பந்தப்பட்ட செயல்களே. பொருளாசையும் விக்கிரக ஆராதனையே!), விபசாரக்காரரும் (ஓரினச்சேர்க்கை LGBTQAIO+ BDSM போன்ற உறவுகள் கொள்ளும் கூட்டத்தினரும், இவர்களை அங்கீகரிக்கும் இங்க்லூஸிவ் inclusive கூட்டத்தாரும்), சுயபுணர்ச்சிக்காரரும் (அறைகுரை ஆடை அணிந்து மற்றவரை தங்கள்பக்கம் கவர்ந்திழுப்பவர்களும் சிறுவர்களைக் கொண்டு தங்கள் இச்சையை தீர்த்துக் கொள்பவர்களும்), ஆண்புணர்ச்சிக்காரரும் (கே gays லெஸ்பியன்), திருடரும் (பிறர் பொருளை அவர் அறியாமல் அபகரித்துக்கொள்ளுபவர்களும், பொய் அறிக்கை சமர்ப்பித்து அலுவலகத்தில் அலவன்ஸ் அரசு சலுகை வாங்குபவர்களும், அனுமதிக்கப்பட்டதற்கும் அதிகமாக எடுத்துக்கொள்ளுபவர்களும்) பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.

எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்துக்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர். வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்.

விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது. பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது. விவாகரத்து செய்யக்கூடாது. டைவர்ஸ் பணக்கூடாது. கூடாது? பிரிந்துபோனால் மறுமணம் செய்யக்கூடாது. கூடாது?

நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள். தேவனுக்கு உரிய விசுவாசிகள் தங்களைத் ஒரு தொழில் நிறுவனத்துக்கோ, அரசியல் கட்சிக்கோ, விளையாட்டு க்ளப்புக்கோ விற்றுப்போடக்கூடாது. பாண்ட் எழுதிக்கொடுத்துவிடக் கூடாது. பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.

இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள்போலவும், அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள்போலவும், இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே.

நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கக்கூடாது! “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்” என்று இயேசு அன்றைக்கே சொன்னாரல்லவா? புசிப்பதில், உடுத்துவதில், பேச்சில். அட, எல்லாவற்றிலேயுந்தான். இவர்களுக்கு மட்டுமல்ல, யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள். எல்லாருக்கும்தான்.

பொல்லாங்கானவைகளை இச்சியாதேயுங்கள்; கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருங்கள்; முறுமுறுக்காதிருங்கள்.

தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். அடிக்கடி தற்பரிசோதனை அவசியமே.

நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே. நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? கிறிஸ்துவுக்குள்ளும் ஒரு கால், உலகத்துக்குள்ளும் ஒரு கால் வைத்துக்கொண்டிருக்க முடியாதா?

ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே. தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும். முக்காடுபோடாமல் சபைக்கூடுகைக்குள் வரும் ஸ்த்ரீகளையும் மேடை ஏறும் ஊழியக்காரிகளையும் பாஸ்டர் மனைவிகளையும் பாட்டுக்காரிகளையும் காணும்போது எரிச்சல் வரவில்லையா?

புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும், ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? கற்பனையில் வரையப்பட்ட இயேசுநாதரைப்போல் தலை மயிரை நீளமாய் வளர்த்து தொலைகாட்சியில் தோன்றும் ‘சாது’க்களையும் பாடகர்களையும் குடுமிகளையும் கண்டு கோபம் வரவில்லையா? ஆண்களைப்போல் கிராப்பு வெட்டிக்கொண்டு ஆராதனை நடத்தி பாடல்கள் பாடும் பெண்களைக் கண்டால் நீங்கள் எப்படி பொறுத்துக்கொள்ளுகிறீர்கள்?

எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? ட்ரம் தட்டினால் சபையினர் எல்லாருமே ‘அன்னியபாஷை’ பேசுகிறார்களே! ட்ரம் ஓசை நின்றவுடன் கப்சிப். ஓ, இதுதான் “அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம்” என்பதோ? குறைவானதாகிய இது ஒழிந்துபோகும்படியாக நிறைவானது என்று பவுல் சொன்ன அன்பு வரவே வராதோ? அதனால்தானோ என்னவோ, சபைகூடுகையைவிட்டு வெளியே போனதுமே பகைமை, பொய், புரட்டு, கெட்ட வார்த்தை, புரணி போன்றவை திரும்ப வந்துவிடுகிறதோ?

அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. அன்பே பிரதானம். ஆனால் இன்று வம்பே பிரதானமாக இருக்கிறதே! பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் இவர்களுக்குள்ளே இருக்கிறதே, அப்போ நாங்கள் செய்யற ஊழியமெல்லாம் ஜீரோவா? உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது. வெறுப்போடே அல்ல. பெருமைக்காக அல்ல. மனுஷர் காணவேண்டும் என்பதற்காக அல்ல. கடமைக்காக அல்ல.

சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே. பெண்கள் சபையில் உபதேசிக்கக் கூடாதா? பாஸ்டர் மனைவி பிரசங்கம் பண்ணக்கூடாதா? அப்போ, அவர்களையும் ஏன் பாஸ்டர் என்று அழைக்கிறார்கள்? “பவுல் அந்தக்காலத்து மனிதர். அவருக்கு இந்தக்காலமும் இந்தக்கலாச்சாரமும் தெரியாது. அவர்மூலமாக பேசின ஆவியானவருக்கும் ஒண்ணும் தெரியாது!” மெய்யாகவா?

நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன். தசமபாகமெல்லாம் கிடையாதா? நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள். தசமபாகம் நியாயப்பிரமாணக்காலம். கிரியையினால் தேவனைப் பிரியப்படுத்தும் முயற்சி. நாம் கிருபையின் காலத்தில் இருக்கிறோம். சாபத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறோம். இப்போ “விசனமாயும் அல்ல, கட்டாயமாயுமல்ல, மனதில் நியமித்தபடியே”. ஒருவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும். எவ்வளவு தேவனுக்குக் கொடுதோம் என்பதல்ல, எவ்வளவு நமக்கு மீதி வைத்திருக்கிறோம் என்பதை கர்த்தர் பார்க்கிறார். “காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்”.

bottom of page