top of page

அத்தியாயம் 6 – இயேசு 33½ வயதில்

இதோ வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டிலிருந்து இன்னொரு சம்பவம். ஏறக்குறைய 2020 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.

(இப்பொழுது நடப்பதுதான் ஆனால் நிறைய கற்பனையும் சேர்த்து எழுதிவிட்டேன். இது எந்த கூட்டத்தையோ, குழுவையோ, சபையையோ தனிநபரையோ குறிப்பிட்டு எழுதியதுதான்!மரித்தவர்களோ, உயிரோடுள்ளவர்களோ யாரையாவது உங்களுக்கு இங்கு சொல்லப்பட்டவைகள் ஞாபகப்படுத்தினால், அதற்கு நான் பொறுப்பல்ல. அவர்களேதான் பொறுப்பு. இதை வாசிக்கும்போது உங்களுக்கு சிரிப்பு வரலாம். கோபம் வரவேண்டும். கொஞ்சம் நஞ்சமல்ல; கடும்கோபம் வரவேண்டும். தேவ வைராக்கியம் வரவேண்டும். இதுதான் இன்டென்ஷனே!)

இரண்டு வருடம் கழித்து மறுபடியும் பஸ்கா பண்டிகை. அதே எருசலேம்; அதே தேவாலயம்; விற்கிறவர்கள், கொள்ளுகிறவர்கள், காசுக்காரர், புறா விற்கிறவர்கள். மறுபடியுமா? நம்ப மக்கள் திருந்தவே மாட்டார்களோ?

ஐயா, நான் உங்களுக்கு இந்த இடத்தை சுத்திக் காண்பிக்கிறேன். இல்லன்னா நெறையா டீடெய்ல்ஸ் மிஸ் பண்ணிடுவீங்க. என்கூடயே வாங்க. போலாமா?

“வியாதியில் வாடும் என் ஜனமே, வியாதி இருக்கிற எடத்துல கைய்ய வச்சிக்குங்க. (பெரும்பாடுள்ள ஸ்த்ரீகளுக்கு கொஞ்சம் சங்கோஜமாகத்தான் இருக்கும்!). உங்களுக்காக இப்போவே ஜெபம் பண்ணுறோம். பக்கத்திலகூட வரவேண்டாம். (தொழுநோய்?). சமாரியாவில இருந்துட்டேகூட நீங்க இந்த ஜெபத்தினால சுகம் அடைய முடியும். தலைவலி, இடுப்புவலி, கைவலி இதெல்லாம் இப்பவே சுகமாயிரும். கொஞ்சம் தீவிரமான வியாதியா இருந்தா இப்பவே சுகமானமாதிரி ஃபீல் பண்ணுவீங்க, சம்டைம்ஸ் பாதி சுகமாயிரும். விசுவாசம் கொறஞ்சா சுகமான வியாதி திரும்ப வந்திரும். நாங்க கேரண்டீ இல்ல. எப்படியும் ஸ்தோத்திரக் காணிக்கையை மறந்துறாதீங்க”.

“தேவ ஜனமே, சமூக சேவை செய்யரதில எங்கள அடிச்சுக்க யாருமே இல்ல. எங்க விஷனே வியாதியற்ற படிப்பறிவுமிக்க பசியில்லாத சமுதாயம் அமைப்பதுதான். கடவுள்பேரச் சொல்லி ஃபண்ட் மட்டும் ரெய்ஸ் பண்ணிக்குவோம். நீங்களும் முடிஞ்சஅளவுக்கு நெறையா காண்ட்ரிப்யூட் பண்ணுங்க. 80CCல டேக்ஸ் சேவிங்வேர கெடைக்கும். சுவிசேஷம் சொல்லறதெல்லாம் மத்தவங்க பாத்துக்குவாங்க. (எங்கள்ள நெறையப்பேருக்கு சுவிசேஷம்னா என்னன்னே தெரியாது. கேட்டதுமில்ல, அதனால சொன்னதுமில்ல). எங்களப் போல சமூக சேவை செய்யறதா பல சுவிசேஷகர்களும் தீர்க்கதரிசிகளும் கெளம்பி இருக்காங்க. ஆனா ஃபண்ட் ரெய்ஸ் பண்ணி வீடு கட்டிக்குவாங்க, ரதம் வாங்கிக்குவாங்க, புள்ளைங்கள ரோமாபுரிக்கும் அத்தேனேக்கும் அனுப்பீருவாங்க. நம்பாதீங்க!”

“நாங்க வேதாகமத்த பல நகல்கள்பண்ணி பலருக்கு இலவசமாகவே விநியோகிக்கிறோம். மாணவர்களுக்கு ஒருமாதிரி, மருத்துவ சேவையில் இருக்கிறவங்களுக்கு ஒருமாதிரி. இப்படி ஒவ்வொரு செக்மெண்டுக்கு ஒரு கலர்ல. ஆனா, இத நாங்களே வாசிக்கிறதுக்கு நேரமில்லே. எங்கள்ல பலருக்கு வாசிச்சா இந்த வேதம் புரியவே மாட்டேங்குது. எங்கள்ல பலர் இன்னும் இரட்சிக்கப்படக்கூட இல்ல. இத விநியோகிச்சாலே ஊழியம் செஞ்சுமுடிச்சுட்டோம்னு ஒரு பெரிய திருப்தி வந்துருது. அதுக்காகவேதான் இத நாங்க தொடர்ந்து செய்யறோம். இந்த தேவவார்த்தை பலரால மிதிக்கப்படறதுக்கும் அவமதிக்கப்படறதுக்கும் நாங்க காரணமாயிருக்கோம்ங்கறது எங்கள்ல பலருக்கு உரைக்கரதில்ல. ஃபன்டிங் மட்டும் கொறைவில்லாம வந்துகிட்டே இருக்கறதுமட்டும் மறுக்கமுடியாத உண்மை. காண்ட்ரிபியூட் பண்ணரவங்க யாரு? நீதியா சம்பாதிக்கிறவங்களா? இதைப்பத்தி யாரு கவலைப்படுரா? ஓ? துன்மார்க்கனுடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானதோ? கண்டுக்காதீங்க”.

“எங்கள சிலபேரு பலநாடுகளிலிருந்து விசுவாசிகள எருசலேம் பாக்குறதுக்கு டூர் கூட்டிக்கிட்டுவர்ர ஊழியம் செய்யராங்க. இங்க வந்து யோர்தான்ல ஞானஸ்நானம் எடுத்துட்டா நேரடியா பரலோகம்தான். சிலுவையும் வேண்ணா கொஞ்ச தூரத்துக்கு தூக்கி சுமந்து பாவப் பரிகாரம் தேடிக்கலாம். கலிலேயா கடல்ல மீன் சாப்பிட்டா புண்ணியமுங்க. எங்க ஊரு தண்ணிய பாட்டல்ல அடச்சு எடுத் துட்டுப் போய் உங்க கெணத்துல ஊத்தீட்டா போதும். தண்ணீ திராட்சரசம்போல ருசிக்க ஆரம்பிச்சிடும். இதுக்கெல்லாம் எக்ஸ்ட்ரா செலவாகும்”.

“மனுஷர் கைகளால கட்டப்பட்ட தேவாலயத்துல தேவன் குடியிருக்கறது இல்லன்னு இங்க கொஞ்சம்பேறு சொல்லீட்டு இருக்காங்க. இந்த தேவாலயத்த இடீங்க. மூணு நாள்ல இத எழுப்புவேன்னுவேற ஒருத்தரு இங்க சொல்லீட்டு இருக்காரு. ஆனா அதெல்லாம் நம்பாதீங்க. அத விடுங்க. கட்டடம் கட்டினாத்தானே பில்டிங் ஃபண்ட் சேகரிக்க முடியும், (இரசீது எல்லாம் ஒழுங்கா குடுத்துருவோம்), அப்பத்தானே காண்ட்ராக்டர்கள் கிட்டஎல்லாம் கமிஷன் அடிக்க முடியும். எவனோ திருடரத, இந்த கோயிலுக்கு உரிய நாம எடுத்தா என்ன தப்பு? அவங்க பண்ற பாவமும் கொறையுமில்லியா?”

“தோத்திரப் பண்டிகை அன்னிக்கு இங்க ஒரே போட்டியும் பொறாமையுமா இருக்குமுங்க. பொருட்கள் ஏலம் எடுக்குறதில நீயா நானான்னு அமர்க்களந்தான். ஆசீர்வாதத் தட்ட ஏலத்தில எடுக்க ரெண்டு குடும்பங்க எப்பவுமே செல்லமா சண்டை போட்டுக்குவாங்க. அதனால இப்பெல்லாம் ரெண்டு தட்டு. ரெண்டுபக்கத்தையும் சமாதானமா வச்சுக்க ஐய்யரோட ஐடியா. எப்புடி?”.

“ஓய்வுநாள்ல ரெண்டு ஆராதனை நடத்துவோம். ஒரு ஆராதனைல யூதா கோத்திரத்தார் மட்டும்தான் வருவாங்க. லேடீஸ் தான் அதிகம். கடையில கொள்ளை லாபம் சம்பாதிக்கிறதில இருந்து நல்ல கனமான காணிக்கை வந்துரும். ரெண்டாவது ஆராதனைக்கு மத்த கீழ்ஜாதிக்காரங்க(?) வருவாங்க. நீங்க யூதா கோத்திரமா? அப்போ மொதல் ஆராதனைதான் ஓங்களுக்கு. சந்தா கவர் மறக்காம வாங்கிக்கங்க”.

“இருவது வருசத்துக்கு முன்னாடி இங்க, உள்ள, ஒரு பெரிய விவாத மேடையே நடந்ததுங்க. ஞாயசாஸ்திரிகளும் வேதபாரகரும் பரிசேயரும் ஒருபக்கம். ஒரு பண்ணண்டு வயசுப் புள்ள மறுபக்கம். உக்காந்து வாதாடுனவங்க எல்லாம் அவங்களுக்கு எல்லாமே தெரிஞ்ச மாதிரி படம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. ஆனா அந்தப் புள்ள நின்னுக்கிட்டே கேட்ட கேள்விகளுக்கு அவங்க ஒருத்தருகிட்டையும் பதிலே இல்ல. அவங்க கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அந்த புள்ள சொன்ன பதிலுகளையெல்லாம் கேட்டு எல்லாரும் வாயடச்சுப் போயிட்டாங்க. இத்தனைக்கும் அந்தப் புள்ள பள்ளிக்கூடம்கூட போனதில்லையாம். (நமக்கு எதப்பத்தியாவது தெரியல்லைனா அதப்பத்திப் பேசாம வாய மூடிக்கிட்டு இருக்கறதுதான் நல்லதுன்னு நெனைக்கத் தோணுதா? நோ நோ. அப்பறமா நமக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நெனச்சிருவாங்க. நம்மகிட்டையே வராமப் போயிருவாங்க. வருமானம் கொறஞ்சிரும்). அடுத்த நாள் அந்தப் புள்ளையோட அம்மா வந்து அதத் திட்டி இழுத்துக்கிட்டு போனாங்க. “எங்கப்பாவோட வேலையிலதான நான் இருந்தேன்”னு வேற அந்தப் புள்ள என்னமோ சொல்லிச்சி. இப்ப அந்த புள்ள எங்கேயோ? அதுக்கு இப்ப ஒரு முப்பது முப்பத்ரெண்டு வயசு இருக்கும்னு நெனைக்கிறேன்”.

“நாங்க கூட்டம் நடத்தும்போது விக்கிரகஆராதனை, விபச்சாரம், வேசித்தனம், காமவிகாரம், சினிமா, வீண்வேஷம், லஞ்சம், குடி, வெறி, இதப்பத்தியெல்லாம் பொதுவிலோ தனியாவோ பேசவே மாட்டோம். பேசினா இதச்செய்யரவங்கெல்லாம் நம்ம கூட்டத்துக்கு தொடர்ந்து வராமப் போயிருவாங்க. அவங்கசைடுல இருந்து வருமானம் வராமப் போயிடும். அப்பறம் நாங்க எப்படி ஊழியம் செய்யறது? மீனு வித்த காசு கவுச்சி அடிக்குமா என்ன? நாங்கதான் அத ஆண்டவர் ஆசீர்வதிக்கணும்னுவேற ஜெபம் பண்ணீர்றோமில்ல? குடுக்கரவங்க இந்த பாவங்கள்ளையே செத்து நரகத்துக்குதான் போவாங்கன்னு எங்களுக்குத் தெரியும். ஆனா சாவுக்கப்பறம் என்ன நடக்கும்ங்கறது நமக்கென்ன கவலை? இம்மைக்குரியது தானே நமக்கு முக்கியம்”.

“உங்க மகளுக்கு யூத மாப்பிள்ளை வேணுமா? உங்க மகனுக்கு உங்க கோத்திரத்திலேயே பணக்காரப் பொண்ணு வேணுமா? தொழிலதிபரா? ஆயத்துறையில் வேலை செய்பவனா? உட்கார்ந்தே பணம் சம்பாதிக்கும் ஆசாரியனா / லேவியனா? மருத்துவச்சியா? வியாபாரியா? இரத்தாம்பரம் விக்கிரவளா? தையற்கலை நிபுணரா? ஜோடிப் பொருத்தம் நல்லாப் பாப்போம். எங்க மேட்ரிமோனியலுக்கு சப்ஸ்க்ரைப் பண்ணுங்க”.

இந்த வருஷம் கல்யாணம் நடக்குமா? உங்கள் தொழில்ல நல்ல லாபம் வரும். (அந்த தொழில் என்ன கண்ராவியா இருந்தா எங்களுக்கென்ன?). நீங்க நெனைக்கிற கட்சி தேர்தல்ல ஜெயிக்கும். தீர்க்கதரிசனம் சொல்லுவோம். தீர்க்கதரிசனம் நிறைவேறினாலும் நிறைவேராவிட்டாலும் மொதல்ல எங்களை கவனிச்சிருங்க.

எங்ககிட்ட வாங்க. எங்க ஊழியத்தில பங்காளராயிருங்க. நாங்க உங்க காணிக்கையை வச்சு கட்டின எங்க பாடசாலையில உங்க புள்ளைக்கு சீட் ரிசர்வஷன் பண்ணிவச்சிருவோம். நம்ப புள்ளைங்களுக்கு இல்லனா வேற யாருக்கு? (அவங்களும் நெறையா ஃபீஸ் கட்டிதான் படிக்க வேணும்ங்கிரத புதுசா வர்ரவங்ககிட்ட சொல்லீறாதீங்க). சின்னதா ஒரு வேத கலாசாலையும் இருக்கு. தம்பிக்கு படிப்பு வரலைனா, அங்க சேத்துடலாம். நேரடியா எம் டீ ஹெச் படிக்கவச்சிரலாம். ஆசாரியனாகவும் தீர்க்கதரிசியாகவும் ஆக்கிடுவோம். ஆடினேஷன் பண்ணியே அனுப்பிவைப்போம். அழைப்பப் பத்தியெல்லாம் கவலப்படாதீங்க. (உழைக்காம நெறைய சம்பாதிக்கிற ஊழியக்காரனுக்கு சூப்பர் பொண்ணு கெடைக்கும் வேற).

ரோம அரசாங்கத்தில வேலை செஞ்சு ரிடயர் ஆனவங்ககூட நெறய பேரு எங்ககூட இருக்காங்க. இவங்கள எல்லாம் வச்சு நாங்க எங்க வருமானத்தை பெருக்கிக்குவோம். அவங்களுக்கு பென்ஷனோட நல்ல வருமானத்துக்கு ஒரு பொழப்பும் ஆச்சில்ல?

அதோ, அங்க நிக்குறார் பாருங்க இந்தக்காலத்து ஃபேஷன்க்கு சளைக்காம உடுத்தி அலங்கரிச்ச ரபீ. அவரப் பாக்குறதுக்கு நீங்க குடுத்துவச்சிருக்கணும். எத்தனையோ கோடிப் பேருக்குக் கிடைக்காத புண்ணியம் உங்களுக்குக் கெடாச்சிருக்கு. அவரு ரெண்டாம் தலைமுறை ஊழியக்காரர். (அரசியல்லதான் வாரிசு வரணுமா என்ன?). அவங்கெல்லாம் சேந்து ஜென்நெக்ஸ்ட் ன்னு ஒரு ஃபெல்லோஷிப் வச்சிருக்காங்க. பிஸ்னஸ் ஐடியாக்கள் பரிமாரிக்க. (அவங்கெல்லாம் சேந்து பாடின ரெண்டு மூணு பாட்டு மெட்லீ இருக்கு. சப்ஸ்க்ரைப் பண்ணி கேளுங்க.) இந்த ஹைக்ளாஸ் கிரூப்ல சேரமுடியாதவங்க B டீமா இன்னொரு அமைப்பு வச்சு திருப்திப்பட வேண்டியதாயிருச்சு.

அவரு பக்கத்தில ஃபுல் மேக்கப்போட நிக்கறது அவரோட ரெண்டாவது வொய்ஃப். (முதல் மனைவி இப்பெல்லாம் அவரோடு வர்றது இல்ல). இவங்க வொர்ஷிப் லீட் பண்ணுனா மொத்தக் கூட்டமும் ஒரு ஆவிக்குள்ளாயிடும். (சுத்தியிருக்கவங்க எல்லாம் வேடிக்க பாப்பாங்க). அவ்ளோ சூப்பரா இருக்கும். கூடவே முட்டிக்கு மேல மூணு இன்ச் வெட்டின ஃப்ராக் போட்ட இளம் சகோதரீங்க கொயர் இருக்கு. அப்பப்ப கோரியோ (டான்ஸ் இல்லீங்க) பண்ணும்போது இந்த டிரெஸ் தான் பொருத்தம்ன்னு ஸ்டேஜ் மேனேஜரும் ஆர்ட் டைரெக்டரும் சொலீட்டாங்க. இளம் விசுவாசிகளுக்கும் இதுதான் இப்பெல்லாம் புடிக்குது. கொஞ்சம் பேரு இவங்களப் பாக்கறதுக்குன்னே வருவாங்க. அட, ஊழியக்காரரோட நாய் மேடையில படுத்திருக்கே? சூ, போ.

வாரம் முழுசும் ஜெபஆலயத்திலயோ விசுவாசி வீட்டுலையோ கூட்டம் வச்சுக்கிட்டே இருப்போம். அப்பதான் மக்கள் நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள இருப்பாங்க. அதனால யாருக்கு பிரையோஜனமோ இல்லியோ, எங்களுக்கு பிரியாணி விருந்துதான். (இதுனாலயே எங்கள்ள கொஞ்சம்பெறு பீபி‌, சுகர், கொலெஸ்ட்ரால்னால ரொம்ப கஷ்டப் படுறாங்க). டெய்லி காணிக்கைவேற வந்திருமில்ல? பிறந்தநாள், திருமணநாள், மரணநாள் ஒண்ணையும் விட்டுவெக்க மாட்டோம்.

எங்க மெம்பர் குடும்பங்கள்ல பொறக்குற குழந்தைகளுக்கு குழந்தையிலேயே 'ஞான’ஸ்நானம் குடுத்துருவோம். தெளிச்சுதான். தண்ணிக்குள்ள முக்குனா புள்ளைக்கு மூச்சு தெணரீருமில்ல? 15 வயசுல மெம்பர்ஷிப் கன்ஃபர்மேஷன் பண்ணுவோம். மத்த கோயிலுக்கு போயிறக் கூடாதுங்கறதுக்காக, வேணுமின்னா தண்ணீல முக்கி எடுத்துறுவோம். சந்தா மட்டும் ஒழுங்கா கட்டீட்டா, கல்யாணம் பண்ணி வெப்போம். செத்தா கல்றைல பொதப்போம். எடைல விட்டுட்டா, மொத்தமா கணக்குப்போட்டு வாங்குவோம். அப்பத்தான் இந்த லாங் டேர்ம் பெனிஃபிட்ஸ்.

இங்க இருக்கிற பிரதான ஆசாரியர் மொதல்ல ஒரு சின்ன ஜெப ஆலயத்தில பொழப்ப நடத்திக்கிட்டு இருந்தவருதான். அப்பரமா எலெக்ஷன் அப்போ இவரோட கோத்திரத்து ஆளுக எல்லாம் சேந்து இவர தேர்ந்தெடுத்திட்டாங்க. நெரிய காசும் வெளையாடுச்சு. இப்போ இவர இங்க தவிர வேற ஜெபஆலயங்களுக்கோ இவங்க நடத்துர பள்ளிக்கூடங்களுக்கோ கூப்பிட்டா ஸ்பெஷலா கவனிக்கணும். இவரு கைக்கு மோதரமும் இவரு மனைவி கைக்கு வளயல் அல்லது கழுத்துக்கு ஆரம் சரப்பணி எல்லாம் போடணும். ஹெவியா காணிக்கைக் கவரும் கொடுக்கணும். இதெல்லாம் பாத்து இப்போ நெரயப்பேரு ஒரு நாலு அஞ்சு பாவப்பட்ட (?) குட்டி ஆசாரியர்கள அவங்கள சுத்தி சினாட்னு வச்சுக்கிட்டு இவங்க பிரதான ஆசாரியர் ஆயிடுறாங்க. என்ன வருமானம்!

இங்க கமாலியேல்னு ஒரு தேர்ந்த வேதபாரகன் ஆலோசனை சங்கத்தில இருக்காரு. அவருக்குக் கீழே நெறையப்பேறு பரிசேயர்க வந்து வேதம் ஓதக் கத்துக்குறாங்க. பெரும்பாலும், தங்களுடைய வாழ்க்கையில நடைமுறைப்படுத்த அல்ல. மத்தவங்களுக்கு திரும்ப போதிக்கத்தான். தர்ஸுப் பட்டணத்துல இருந்து சவுல்னு ஒரு பையன்கூட இங்க வந்து இவர்கிட்ட படிக்கிறான். ஆனா, கமாலியேல் போல படிச்சு டாக்டர் ஆவது ரொம்ப கஷ்டம். நீண்ட காலம்வேற ஆகுமா. அதனால இந்த டாக்டர் பட்டம் சுருக்கு குறுக்கு வழியில வாங்கறதுக்கு இங்க உள்ளவங்க ஒரு யுக்தி வச்சு இருக்காங்க. ஒரு நூறு பணம் கட்டி ரெஜிஸ்டர் பண்ணிட்டா போதும். அடுத்த பட்டமளிப்பு விழாவுல டாக்டர் பட்டம் குடுத்துருவாங்க. உங்குளுக்கும் வேணுமின்னா இன்னைக்கே பதிவு செஞ்சிட்டு போங்க. க்யூ கொஞ்சம் நீளமாத்தான் இருக்கு. ஆமா, நீங்க என்ன படிச்சிருக்கீங்க? அட, அது இப்போ முக்கியமில்ல. போங்க போங்க. ஃபீஸ் ஏத்திடப்போறாங்க. உங்க புள்ளைகளுக்கும் இப்பவே முன்பதிவு செஞ்சுக்கங்க. (அக்கிரமம் என்னன்னா, கொஞ்சம் பேரு இதுகூட செய்யாம, பேருக்கு முன்னாடி டாக்டர்ன்னு, பிஷப்ன்னு, ரெவரெண்ட்னு போட்டுக்குறாங்க. காப்பு நாடாவ பெருசு பண்ணிக்கராங்க. சந்தைவெளியில வந்தனம் வேணுமில்லையா?

ஆலயத்துல பிரசங்கம் பண்ணும்போது பாமர மக்களுக்குத் தெரியாத மொழியில பண்ணினா எங்கள ரொம்ப படிச்சவங்கன்னு நெனச்சிருவாங்க. அந்த மொழி கத்துக்கட்டும்னே அவங்க கொழந்தைங்கள இங்க அனுப்பர பெற்றோரும் உண்டு. பிரசங்கம் கேக்க இல்லைங்க. அவ்வளோ அக்கரையெல்லாம் கெடையாது.

(ஆலோசனை சங்கத்தில நிக்கோதேமுன்னு ஒரு போதகர் இருக்காரு. பணக்காரரு. ரொம்ப தமாஷா பேசுவாரு. ஆனா முக்கியமான நெறியாக் காரியங்கள் அவருக்கு புரியவே புரியாது. ஒருதடவ ஒரு போதகர்கிட்ட ஏதோ கேள்வி கேட்டு வசம்மா மாட்டிக்கிட்டாரு. அப்பறமா அவரு முழிச்ச முழியப் பாக்கணுமே. அதனாலதானோ என்னவோ அந்த புது போதகரு “”உங்கள யாரும் ரபீன்னோ, குருன்னோ, ஃபாதர்ன்னோ கூப்பிட விரும்பாதீங்க. பரலோகத்திலுள்ள பிதா மட்டுந்தான் உங்க போதகரும் ஃபாதரும்” ன்னு சொல்லீட்டாரு. அதெல்லாம் இப்ப யாரு கேக்குரா? ரோம மதத்திலிருந்து இங்க வந்தவங்க தங்கள ஃபாதர்ன்னு சொல்லிக்கரதுல இன்னும் பெருமப்படராங்கதானே).

தேவனோட புள்ளைங்க எல்லாம் ராஜாவின் பிள்ளைகள் போல வாழணும்னு பிரசங்கம்பண்ணி ஒரு பெரிய கூட்டத்தோட கண்ணுல மண்ண அள்ளி வீசீட்டு இருக்கற ஒரு கூட்டம் ஆசாரியர்களும் எங்களுக்குள்ள இருக்கராங்க. ஆனா அவங்களே தலைக்குமேல வெள்ளம் போற மாதிரி கடன்ல இருக்குறாங்க. செழிப்பப் பத்தி மேடைக்கு மேடை பேசரதுல மட்டும் சளைக்கறதே இல்ல. பாவம் அப்பாவி ஜனங்க. அவங்களோட பேச்ச நம்பி அவங்கள வாழவச்சிக்கிட்டுதான் இருக்காங்க. தாங்க செழிப்பாக வாழ்ரது ஒரு பகல் கனவாத்தான் போயிட்டு இருக்கு.

இந்த வருஷம் எப்புடி? இந்த மாதம் எப்புடி? இந்த வாரம் எப்புடி? இந்தா வாக்குதத்தம் புடி. போன வருசமே தோல்சுருள்கள்ல எழுதி வச்சிருக்கோம். இதோ சுவர்ல தொங்கவிட ரெடியா இருக்கு. கவர்லமட்டும் இந்த மாசக் காணிக்கைய மறக்காம போட்டுருங்க. ஏங்க எல்லாருக்கும் ஒரே வாக்குதத்தமா? இது பழைய ஏற்பாட்டில வேற யாருக்கோ தேவன் குறிப்பிட்டுச் சொன்னதுதானே? போனமுறை சொன்ன வாக்குதத்தம் இன்னும் நிறைவேறவே இல்லையே? – இப்பிடியெல்லாம் கேக்காதீங்க. அப்பறம் இந்த வாக்குதத்தம் பலிக்காமப் போயிடும்.

அப்பப்போ 3 நாள், 7 நாள், 21 நாள், 40 நாள் உபவாசத் திருவிழா, ஜெப விழா இப்படியெல்லாம் நடத்துவோம். நீங்க எல்லாம் ஸ்டிரிக்டா உபவாசம் இருக்கணும். நாங்க கூட்டம் நடத்தரவங்க. எனர்ஜி வேணுமில்ல. எடையில ஜுஸ் ரெண்டு மூணு தடவை குடிச்சுக்குவோம். பிட்ஸா பர்கர் எல்லாம் இப்போ சாப்பிட மாட்டோம்.கொஞ்சம் தக்காளி சாதம் தயிர் சாதம் மாத்திரம் சாப்பிடுவோம். (நீங்க கொஞ்சம் அந்த சைடு திரும்பிக்குங்க). சாயங்காலம் எப்பவும்போல ஒரு ஃபுல் கட்டுதான். நீங்கதான் வீட்டுக்குப் போயிருவீங்களே. போறதுக்கு முன்னாடி அங்கங்கே காணிக்கை பொட்டி வச்சிருக்கோம். மறக்காம காணிக்கை போட்டுட்டு போங்க.

“நீங்க எங்க வீடு வாங்கணும்? (கடன் வாங்கித்தான்!); (அட, நாங்களே உங்கள நம்பித்தான் காசுக்காரர்கிட்ட லோன் வாங்கி ஜெப ஆலயம் கட்டுறோம்). தேவனிடத்தில் நாங்க கேட்டு சொல்லுவோம்”. “கார், பைக், பங்களா போட்டோ வச்சி தொட்டு தொட்டு ஜெபம் பண்ணுங்க. கெடச்சாச்சுன்னு பாசிடிவ் கன்ஃபெஷன் பண்ணுங்க. கெடச்சிரும். உங்களுக்காக ஊக்கமா வேண்டுதல் செய்யற எங்கள கொஞ்சம் கவனீங்க.

தர்சு, ரோமாபுரி, கொரிந்து பட்டணம் புலம் பெயர்ந்து போகலாமா? போவது எப்போ? கரெக்டா சொல்லுவோம். போனபின் எங்கள மறந்துறாதீங்க. (நீங்க போனா எங்களுக்கும் லாபம் வரணுமில்லையா?)

“அற்புத சுகம் கெடைக்கலன்னா கவலப்படாதீங்க. உங்களுக்கும், சீலோவோம் குளத்தில எறங்கி சுகம் பெற்றுக்கொள்ள முடியாதவங்களுக்குமின்னே எக்ஸ்க்லூசிவா மருத்துவமனை கட்டுறோம். உங்க பங்களிப்பு அதில் வேண்டாமா? அதிலே ஒரு படுக்கைக்கு உங்க பேர வச்சிடலாம். எங்களுக்குமட்டும் கொஞ்சம் ஜோரம்னா நாட்டுலேயே பெரிய மருத்துவமனைக்குப் போய்டுவோம். நாங்க அதிக நாள் உயிரோடிருந்தாதானே இன்னும் கொஞ்சம் அட்டூழியம் பண்ண முடியும். நாங்க உயிரோடிருக்கறது அனேகருக்கு அவசியமில்லையா? உங்களுக்கு ஆண்டவர் அற்புதம் செய்வார். எங்களுக்கெல்லாம் மருந்துதான்”.

அங்கங்கே ஓட்டலும் வேற கட்டி வச்சிருக்கோம். இங்க சாப்பிடறவங்களுக்கு வியாதியெல்லாம் சொகம் ஆயிடுமின்னு பொய்யெல்லாம் சொல்லமாட்டோம். ஆனா இங்க கெடைக்கிற வருமானத்தில பத்தில ஒரு பங்கு சத்தியமா ஆண்டவருக்குத்தான். வழியில வேற எங்கையும் சாப்பிட்டுறாதீங்க. ஓ கேவா?

அங்க பாருங்க… சங்கீதங்களும் கீர்த்தனைகள் பாடரவங்க, கீத வாத்தியங்கள் வாசிக்கிறவங்க நெறையா மேடையில. அவங்க எப்போமே இங்க இருக்க மாட்டாங்க. வெளிய பாகால் கச்சேரிக்கு போய்டுவாங்க. நீங்க கச்சேரி வச்சா கூப்பிடுங்க. என்ன, மொதல்லயே புக் பண்ணனும். அங்க குடுக்கரமாதிரியே குடுக்காட்டியும், கொஞ்சம் கொறைவா குடுத்தாலும் வாங்கிக்குவாங்க. இவங்க மட்டுமில்லே, நடிகர்களும் இயக்குனர்களும் கூட இப்பிடி இருக்காங்க. அங்க அட்டூழியமும் இங்க ஊழியமும் பண்ணுவாங்க. பொய்சாட்சி சொல்லுவாங்க. தேவன் நல்லவர் நல்லவர்ன்னு சொன்னா நல்ல வருமானம். இவங்க ரட்சிக்கப்பட்டதா கூட்டம் நடத்தரவங்க அங்கீகரிக்கிறதுனால, இவங்க உண்மையா ரட்சிக்கப்படறதே இல்ல. தங்களையே ஏமாத்திக்கிட்டு நேரடியா நரகம் போறாங்க.

இப்ப இப்படிப்பட்ட பலரும் அப்பாவி கொழந்தைங்க வாலிபருக்கு ஹீரோ, மெண்டர் ஆயிட்டாங்க. அவங்களமாரியே இப்போ இவங்களும் பாடரதும், ஆடரதும், விசில் அடிக்கிறதும், நடிக்கரதும் ஸ்டைலா இசைக்கருவி வாசிக்கிறதும் – அப்பப்பா, ஒரே கூத்துதான். இப்பெல்லாம் பாட்டு தேவனை மகிமைப்படுத்தரதவிட நல்ல பீட்டு, பாப் டிஸ்கோ ராப் குத்தாட்டம் போட பொருத்தமான, ஆனா அர்த்தமற்ற, பழசையே திரும்ப திரும்ப அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்னு மாத்தி எழுதிவுடுர பாட்டாதான் வருது. இப்படி பண்றவங்களத்தான் மேடையில ஏத்தி ஷோகேஸ் பண்ணி ஏத்தி ஏத்தி விடுவோம். லைக்ஸும் ஃபாலோயர்ஸுந்தான். ஒருசிலருக்கு கிளிக் ஆயிடுது. அனேகருக்கு ஏமாற்றம்தான். ஆனா தொடர்ந்து ட்ரை பண்ணிக்கிட்டே இருக்காங்க.

ஹை இன்கம் க்ரூப்ல இருக்கரவங்களுக்கின்னே ஊழிய அழைப்பு பெற்ற சிலர் எங்ககூட இருக்காங்க. டாப் எண்ட் ஆடியோ, வீடியோ மியூசிக்கோட கேட்ஜெட்ஸ், பிராண்டெட் சூட் வாச் ஷூ சகிதமா மேடையில வந்து நின்னா அப்பிடியே ஒரு கம்பெனியோட சீ ஈ ஓ மாதிரி கெத்தா மாஸா இருக்கும். அதான் லட்சக் கணக்குல தசமபாகமும், காணிக்கையும், பர்த்டே, வெட்டிங்அனிவர்சரி காண்ட்ரிபியூஷனும் (குடுக்குறவங்க சம்பாதிக்கிரதைவிட பலமடங்கு) வருதில்ல. அவரும் சிறுமையும் எளிமையுமானவர்கள்ள ஒருத்தர்னா பாத்துக்கங்களேன். மாடர்ன் ட்ரெண்டிஅப்ரோச். அவ்வளவுதான். வேற ஒண்ணுமில்ல.

இந்த லைன்ல நிக்கரவங்க யாரு தெரியுமா? மனசுல தோன்றத எல்லாம் சத்திய வாக்குன்னு புக் எழுதரவங்க. பொய்யும் புரட்டும் சேத்து வசனத்த எழுதும் படைப்பாளிகள். விசுவாசிகள் பலர் இவங்க எழுதரத வேதவாக்குன்னு நம்பி பெரிய வெல குடுத்து வாங்கி பெஸ்ட் செல்லர் ஆக்கிடுவாங்க. பைபிளை ஓரங்கட்டீருவாங்க. அனேகமா எல்லாப் பிரசங்கியாரும் இதுகள்ள இருந்து ஏதோ ஒரு சாப்டர் படிச்சு பிரசங்கத்தப் பண்ணி முடிச்சிருவாங்க. கேக்கரவங்க பக்திவிருத்தி அடஞ்சாங்களா? அட, காணிக்கைப்பெட்டீல அமெளண்ட் விருத்தி அடஞ்சா பொதும்ங்க.

யூடியூப்ல சேனல் ஆரம்பிச்சு, சுவிசேஷம் தவிர மற்ற எல்லாத்தையும் ஒளறிக்கொட்டிக்கொண்டிருக்கும் இன்னொருகூட்டம் அவங்க பக்கத்திலேயே நிக்கராங்க பாருங்க. பணம் பேர் புகழ்தான் குறிக்கோளே.

மேடையில டான்ஸு ஆடி, நாடகம் நடிச்சு, மிமீக்ரீ பண்ணி, கொஞ்சம் ஜோக்கடிச்சு சிரிக்கவச்சு, எமோஷனலா கொஞ்சம் அழவச்சு, கடைசியில காசையும் அழவச்சிருவோம். அப்பப்போ நகையெல்லாம்கூட காணிக்கையா போடச்சொல்லுவோம். (கொஞ்சம் ஏமாந்தவங்க வீடு சொத்தெல்லாம்கூட எங்களுக்கு எழுதிவச்சிருவாங்க).

இங்க உள்ள எல்லாரையும் ஒதுக்கி வச்சிட்டு தனியா டிரம் அடிச்சு கைதட்டி ஒரு ஆவியில நெறையர கூட்டம் அங்க மூலையில பாத்தீங்களா? அவங்கள்ல ஊழியம் பண்றவங்க கல்யாணமே பண்ணிக்க மாட்டாங்க. லச்சத்தி நாப்பத்திநாலாயிரம் பெருல இவங்களுமாம். நேரடியா சீயோனாம். மீதி எல்லாம் புதிய எருசலேமோட நின்னுடுவாங்களாம். எல்லாரும் வெள்ளைதான் உடுத்தணும்னு வர்ப்புறுத்துவாங்க. மீசை தாடி வைக்கக் கூடாதாம். மூப்பரை மீறி ஏதாவது செஞ்சா ஆறு மாசம் தள்ளி வச்சிருவாங்க. மூப்பர்கிட்ட பாவ அறிக்கை பண்ணனும். அதுக்கப்புறம் பொது மன்னிப்பு கோரணும். அப்பறம்தான் சேத்திக்குவாங்க. ஆனா காணிக்கை தசமபாகம் எல்லாம் தடையில்லாம வாங்கிக்குவாங்க. ஊழியம் தடைபடக்கூடாதில்ல!

இன்னிக்கு தேவன்பேரச்சொல்லும் வியாபாரிகள் கூட்டம் கொஞ்சம் கம்மி. ஏன்னா, கொஞ்சம் பேரு ஹாலிடே எஞ்சாய் பண்ண கிரேத்தா தீவுக்குப் போய்ட்டாங்க. கொஞ்சம் பேரு கப்பல்ல ஆதிரேயா கடல்ல உல்லாசப் பயணம் போய்ட்டாங்க. ஒருத்தருக்கு ரதம் ரிப்பேரு. நாலு பேருக்கு ஹை எண்ட் ரதம் புக் பண்ணி இன்னும் டெலிவரி ஆகல. ரெண்டு பேருக்கு உப்புக்கடல்ல புத்துணர்வூட்டும் இயற்கை மருத்துவம் நடக்குது. சிலர் இன்னும் தூங்கியே எந்திரிக்கல. இல்லன்னா நீங்க இங்க நிக்கவே முடியாது. எதுக்கும் உங்க பணப்பை பத்ரம்!

(அடுத்த வாரம் இயேசு கல்வாரி சிலுவைக்குப் போகும் வாரம்); அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத்தொடங்கி காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து, ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டுபோகவிடாமல்: என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள் என்றார். கடவுள் பேரைச் சொல்லி பண்டம் சேகரித்து எடுத்துச்செல்லும் கூட்டம்!

bottom of page