top of page

அத்தியாயம் 5 – இயேசு 33 வயதில்

இதுமட்டுமா? இயேசு வீண் பக்தியை காட்சிப்படுத்தும் மதவாதிகளை கண்ணில் விரல்விட்டு ஆட்டிவிடுவார். எப்போதுமே அவர்களுக்கு அவர் ஒரு சிம்மசொப்பனமாக இருந்தார். இன்னும் இதோ...

“மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ” (7 முறை); குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ (2 முறை); மதிகேடரே, குருடரே! (2 முறை) குருடரான வழிகாட்டிகளே (2 முறை); குருடனான பரிசேயனே!; சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்? “இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்”. இவை அனைத்தும் ஒரே சமயத்தில் இயேசு சொன்னவை. மத்தேயு 23ஆம் அதிகாரத்தில். ஆனாலும் இவ்வளவு கோபம் ஆகாதப்பா! உண்மையாகவேவா?

அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள். தாங்களும் வேதம் வாசிப்பதில்லை, அதில் பிரியமாயிருப்பதில்லை, அதை தியானிப்பதில்லை. விசுவாசிகளையும் இவைகளைச் செய்ய அறிவுறுத்துவதில்லை. மூளைச்சலவை செய்து தாங்கள் நம்பிக்கொண்டிருக்கும் துருபதேசங்களை இவர்களையும் நம்பவைக்கும் முயற்சி சமையம் கிடைக்கும் போதெல்லாம் நடக்கும்.

அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். ‘நெடுமுழங்காலில் நின்று அதிகாலை ஜெபம் பண்ணுங்கள். தவறாமல் வேதம் வாசியுங்கள். வாரம் ஒருமுறையாவது உபவாசம் செய்யுங்கள். எளிமையான வாழ்க்கை வாழ்ந்து பழகுங்கள். தாராளமாக காணிக்கை கொடுங்கள். பணவிஷயத்தில் நேர்மையாய் இருங்கள். கவர்ச்சிப்படம் பார்க்காதீர்கள். இதெல்லாம் நாங்கள் செய்கிறோமா என்பதைக் குறித்து நீங்கள் எங்களைக் கேட்கக் கூடாது. நாங்கள் கர்த்தரிடத்திலே கணக்கு கொடுத்துக்கொள்வோம்’. இவர்களைப் பார்த்து இக்காலப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு மாதிரியாக நடவாமல், பிள்ளைகளைமட்டும் இதை செய் அதை செய்யாதே என்று ரூல்ஸ் போட்டு பிள்ளைகளை மனச்சோர்வடைய செய்கிறார்கள்.

இயேசு: “தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்.

மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறார்கள்; அவர்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை. கர்த்தருக்கேற்ற பயம் குறித்து போதிக்கிறவர்களை கேலி செய்து, தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கிறவர்களை அவமானப்படுத்தி, தங்கள் பிள்ளைகள் திருந்துவதற்கு தடையாய் இருக்கிறார்கள்.

பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறார்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவார்கள். தனிமையிலிருக்கும் விதவைகளின் வீடுகளுக்கு ஆண் ஊழியர்கள் அடிக்கடி சென்று நீண்ட நேரம் ஜெபம் செய்வது இன்று வழக்கத்தில் உள்ளது.

ஒருவனை தங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறார்கள்; அவன் அவர்கள் மார்க்கத்தானானபோது அவனை அவர்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறார்கள். உலகப்பொருள் கிடைக்கும் என்று சுண்டியிழுத்து ஏமாற்றுகிறார்கள்.

எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறார்கள். எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? நம்முடைய பொருள் தேவனுக்கு வேண்டாம். நாம்தான் வேண்டும். நான் உங்களுடையதை அல்ல, உங்களையே தேடுகிறேன் என்று பவுல் அப்போஸ்தலன் சொன்னது நாம் விழிபுணர்வு அடையத் தானோ?

மேலும், எவனாகிலும் பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறார்கள். எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? காணிக்கையைவிட நம்முடைய முழு சரீரத்தையும் ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்பது புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நமக்குத்தானே?

ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டார்கள், (பழைய உடன்படிக்கையின் காலத்திலுள்ளவர்கள்) இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே. கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறார்கள். தசமபாகம் செலுத்துவது கொசுவை வடிகட்டுவதற்கு சமம். நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிடுவது ஒட்டகத்தை விழுங்குவதற்கு சமம். நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறார்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்க வேண்டுவது அவசியம்.

மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப்போலிருக்கிறார்கள், அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் தெரியாதிருக்கிறது வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறார்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறார்கள். வெள்ளை வேஷ்டி , ஜிப்பா, வெள்ளைப்புடவை, மணிக்கட்டு வரை ஜாக்கெட், இவைகளைவிட உள்ளத்தில் பரிசுத்தம் முக்கியம். காமமும், பொறாமையும், வீண்பெருமையும், கபடும், வம்புசண்டையும் மேலோங்கி நிற்கிறதே! மனுஷனோ முகத்தைப் பார்க்கிறான். தேவனோ இருதயத்தைப் பார்க்கிறார்.

தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து: எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறார்கள். ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறார்கள் என்று அவர்களைக்குறித்து அவர்களே சாட்சிகளாயிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புகிறார்கள்”. “நாங்கள் நல்லவர்கள்தான்” என்று மற்றவர்கள் மீது பழிபோடுவது இயல்புதானே?

bottom of page