top of page

அத்தியாயம் 3 – யெகூ

இதோ வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டிலிருந்து இன்னொரு சம்பவம். இதுவும் ஏறக்குறைய 2800 ஆண்டுகளுக்கு முன்பு சம்பவித்தது: (இதுவும் கற்பனை அல்ல. சம்பவித்தபடியே எழுதியுள்ளேன்).

யெகூ. இவன் இஸ்ரவேல் நாட்டின் படைகளுக்கு தளபதி. ராஜகுடும்பம். சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடே பண்ணின யுத்தத்திலே ஜெயித்தபின், ராமோத்திலே அவனோடு சில சேனாபதிகளும் உட்கார்ந்து இருக்கிறார்கள்.

இஸ்ரவேல் நாட்டு ராஜா யோராம். போரில் ஏற்பட்ட காயம் ஆறும்படியாக யெஸ்ரயேலில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான். யூதா நாட்டு ராஜா அகசியா இவனுடைய நண்பன். காயம்பட்ட இவனைக் காண வந்திருக்கிறான்.

தீர்க்கதரிசியாகிய எலிசாவால் அனுப்பப்பட்ட ஒரு ஆள் வேகமாக ஓடி வருகிறான். “தளபதி, உங்களோடு தனியாகப் பேசவேண்டும்”. இருவரும் உள்ளே போகிறார்கள். கையில் இருந்த அபிஷேகத் தைலத்தை தளபதியின் தலையில் ஊற்றுகிறான். “கர்த்தருடைய வார்த்தையின்படி இஸ்ரவேலுக்கு ராஜாவாக உம்மை அபிஷேகம் பண்ணுகிறேன்”. யோராமின் தகப்பனாகிய ஆகாபும் அவன் மனைவியாகிய யேசபேலும் பண்ணின எல்லா அக்கிரமங்களினிமித்தமும் அவனுடைய சந்ததியையும் அவளுடைய பாகாலின் கூட்டத்தையும் முற்றிலும் சங்காரம் பண்ணுவது கடவுள் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொறுப்பு. சுவற்றில் சிறுநீர் கழிக்கும் ஒரு நாய்கூட மிஞ்சக்கூடாது”. வந்த வேகத்திலேயே திரும்பி ஓடிப்போய்விடுகிறான்.

நண்பர்கள் யெகூவைக் வினவுகிறார்கள்: உள்ளே என்ன நடந்தது? அந்தப் பயித்தியக்காரன் என்ன சொல்லிவிட்டுப் போகிறான்? “உங்களுக்குத்தான் தெரியுமே!” - இது யெகூ. “தெரியாது” - இது தளபதிகள். இப்பொழுது யெகூ:“உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறேன்”. உடனே அவனோடிருந்த தளபதிகள் தங்கள் சால்வைகளை கழற்றி அவன் கால்களின் கீழே படிக்கட்டுகளில் போட்டு, அவனை கனப்படுத்தி, “யெகூ ராஜாவானான்” என்று எக்காளம் ஊதுகிறார்கள். “யோராமுக்கு இதை யாரும் அவசரமாகச் சொல்லிவிடக்கூடாது” -யெகூ.

யெகூ தன்னுடைய ரதத்தை வேகமாகக் கிளப்புகிறான். அவனோடு எல்லோரும் கிளம்புகிறார்கள். ஆகாபின் மகனாகிய தற்போதைய இஸ்ரவேலின் ராஜா இந்த யோராம்தான் முதற்குறி.

“ராஜாவே, ஒரு கூட்டம் ரதங்கள் நம்மை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கின்றன”. கோபுரத்தில் நிற்கிற ஜாமக்காரன் அறிவிக்கிறான். “ஒரு குதிரை வீரனை என்னவென்று அறிந்துவர சீக்கிரம் அனுப்பு”- இது யோராம் ராஜா சொல்வது.

“தளபதி, எல்லாம் சமாதானமா?” “உனக்கு அதைப்பற்றி என்ன? என் பின்னே வா”.

“ராஜாவே, போனவன் திரும்பி வரவில்லை. அந்தக் கூட்டத்தோடே இணைந்துகொண்டதுபோல் தெரிகிறது”.

“இன்னொருவனை அனுப்பிவை” –. யோராம்

“தளபதி, எல்லாம் சமாதானமா?” “உனக்கு அதைப்பற்றி என்ன? என் பின்னே வா”.

“ராஜாவே, போன இவனும் திரும்பி வரவில்லை. அந்தக் கூட்டத்தோடே இணைந்துகொண்டான்போல”. “அதுமட்டுமல்ல. வருகிறது யெகூ போலத் தெரிகிறது. ரதத்தை வெகுவேகமாக ஓட்டுகிறான்”.

“யெகூவா? உடனே எனக்கு ஒரு ரதத்தை ஆயத்தம் பண்ணுங்கள்”.

“நானும் வருகிறேன்” – இது அகசியா.

நாபோத் என்பவனை கொன்று (இது யேசபெல் பயன்படுத்திய யுக்தி) அவனிடத்திலிருந்து ஆகாப் அபகரித்துக்கொண்ட திராட்சத்தோட்டத்தின் நிலத்திலே சந்திப்பு நிகழ்கிறது.
“யெகூவே, சமாதானமா?”

“உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லிசூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது?”

உடனே திருப்பு ரதத்தை! அகசியாவே, இது சதி!

யெகூவின் ஒரே அம்புதான். யோராமின் நெஞ்சு பிளந்தது.

“தூக்கிப்போடுங்கள் அவனை அந்த நாபொத்தின் நிலத்திலே. திரும்பி வரும்போது மீதியிருந்தால் பார்ப்போம்”!

அகசியா குறுக்குவழியாய் தப்பி ஓடுகிறான். “அவனையும் வெட்டிப்போடுங்கள்”. அவனும் தப்பமுடியவில்லை!

யேசபெல். மையிட்டு சீவி சிங்காரித்து யெகூவை காண ஜன்னலில் கவர்ச்சிகரமாக வந்து நிற்கிறாள். சம்பந்தமே இல்லாத சம்பாஷணையை ஆரம்பிக்க முயல்கிறாள்.

யெகூ: “என் பட்சத்தில் இருப்பது யார்யார்? இரண்டு மூன்று பிரதானிகள் எட்டிப் பார்க்கிறார்கள். “அவளைக் கீழே தள்ளுங்கள்”. தலைதெறிக்க விழுந்து செத்தாள். அவளை மிதித்து உள்ளே போனான். கொஞ்ச நேரத்தில் அவளுடைய மண்டையோடு, கால்கள் உள்ளங்கைகள் தவிர வேறு ஒன்றும் மிஞ்சவில்லை. நாய்கள் தின்றுபோட்டன.

ஆகாபினுடைய எழுபது குமாரர் (யோராமின் பங்காளிகள்) சமாரியாவிலே வளர்க்கப்பட்டு வந்தார்கள். “வருகிறீர்களா சண்டைக்கு?” அவர்களை வளர்த்தவர்கள் சொல்லுகிறார்கள்: “நாங்கள் உம் அடியார்கள், நீங்கள் எங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்வோம்; உங்கள் பார்வைக்கு எது சரியோ அதையே செய்யுங்கள்”. அவன் சொற்படி அவர்கள் ராஜாவின் குமாரராகிய எழுபதுபேரையும் பிடித்து வெட்டி, அவர்கள் தலைகளைக் கூடைகளில் வைத்து, யெஸ்ரயேலிலிருக்கிற யெகூவினிடத்திற்கு அனுப்புகிரார்கள். தலைகள் இரண்டு குவியல்களாக காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

“யோராமைக் கொன்றது நான்தான். இவர்களையோ நான் கொல்லவில்லை. ஆனாலும், கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாருக்கு விரோதமாகச் சொன்ன கர்த்தருடைய வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழவில்லை. கர்த்தர் சொன்னதைச் செய்தார்”.

ஆகாபின் குடும்பத்தாரில் மீதியான யாவரையும், அவனுக்கு இருந்த எல்லா மந்திரிகளையும், அவனைச்சேர்ந்த மனுஷரையும், அவனுடைய ஆசாரியர்களையும், அவனுக்கு ஒருவரையும் மீதியாக வைக்காதபடிக்கு, யெகூ கொன்றுபோட்டான்.

சமாரியாவுக்குப் போகிற வழியிலே யோராம் யேசபெல் மரணத்தின் நிமித்தம் தூக்கம் விசாரிக்கச் சென்ற நாற்பத்திரண்டுபேரைக் கண்டு அவர்களையும் வெட்டிப்போட்டார்கள்.

யெகூ வழியிலே தன் நண்பனான யோனாதாபை சந்தித்து ரதத்திலே ஏற்றிக்கொள்கிறான். “நீ என்னோடே கூடவந்து கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார்”.

யெகூ சமாரியாவிலும் ஆகாபுக்கு மீதியான யாவரையும் அழித்துப்போடுகிறான்.

சமாரியாவிலே பாகாலின் சகல தீர்க்கதரிசிகளையும், அவனுடைய சகல பணிவிடைக்காரரையும், அவனுடைய சகல ஆசாரியரையும் அவனிடத்தில் அழைப்பிக்கிறான். “ஒருவனும் குறையலாகாது”; “நான் பாகாலுக்குப் பெரிய பலியிடப்போகிறேன்; வராதவன் எவனோ அவன் உயிரோடிருப்பதில்லை” என்ன தந்திரம்!

பாகாலின் கோவில் நாற்சாரியும் நிறைந்திருக்கிறது. “உள்ளே கர்த்தரின் ஊழியக்காரன் ஒருவனும் இருக்கக்கூடாது”.

யெகூ தன்னுடைய ஆட்கள் எண்பது பேரை கோவிலுக்கு வெளியில் நிறுத்துகிறான். “ஒருவனையும் தப்பவிடக்கூடாது. விட்டால் தொலைந்தாய்”.

இவர்கள் பட்டயக்கருக்கினால் அவர்களை வெட்டி எறிந்துபோட்டு, பாகால் கோவிலைச் சேர்ந்த ஸ்தலம் எங்கும் போய், பாகால் கோவில் விக்கிரகங்களை வெளியே எடுத்துவந்து, அவைகளைத் தீக்கொளுத்தி, பாகாலின் சிலையைத் தகர்த்து, பாகாலின் கோவிலை இடித்து, அதை மலஜலாதி இடமாக்கினார்கள்.

இப்படியே யெகூ பாகாலை இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப்போட்டான்.

கர்த்தர் யெகூவை நோக்கி: “என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தாய்”.

பாகாலையும் பாகால் கோயிலையும் பாகாலின் தீர்க்கதரிசிகளையும் பூஜாசாரிகளையும் சங்கரித்த யெகூவிற்கு அன்றிருந்த அந்த தேவ வைராக்கியம் இன்று, பரிசுத்தாவியைப் பெற்ற விசுவாசிக்களாகிய நமக்கு நம்மைச் சுற்றி பன்மடங்கு அதிகரித்து இருக்கும் துன்மார்க்கத்துக்கு விரோதமாக ஏன் வருவதில்லை? அறியாமையோ? நிர்விசாரமோ? சுயநலமோ? மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள், நமக்கேன் வம்பு என்று தப்பித்துக் கொள்ளும் மனப்பான்மையோ?

bottom of page