top of page

அத்தியாயம் 1 – எலியா

இதோ வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டிலிருந்து ஒரு சம்பவம். ஏறக்குறைய 2800 ஆண்டுகளுக்கு முன்பு சம்பவித்தது: (இது கற்பனை அல்ல. சம்பவித்தபடியே எழுதியுள்ளேன்).

எலியா. ஏல்இயாஹ். கர்த்தரே தேவன். இஸ்ரவேலிலுள்ள கீலேயாத்தின் குடிகளிலே ஒரு திஸ்பியன். இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் காலத்திலே வாழ்ந்த ஜீவனுள்ள தேவனுடைய தீரிக்கதரிசி.

ஆகாப். தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். வடபகுதியாகப் பிரிந்துபோன இஸ்ரவேல் ராஜ்ஜியத்தின் ராஜாவான யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜகுமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், (இவள் கர்த்தரின் தீர்க்கதரிசிகளை பெரிதளவிலே சங்கரித்தவள்) அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு, தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தை எடுப்பித்தான். ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்துவந்தான்.

எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

கர்த்தர் அவனை கேரீத் ஆற்றண்டையிலே போய் ஒளிந்துகொள்ளச் சொன்னார். காகங்கள் அவனுக்கு காலையும் மாலையும் அசைவ உணவு கொண்டுவந்து கொடுத்தன. தாகத்துக்கு கேரீத் ஆற்றுத்தண்ணீர். ஊரே பஞ்சத்தில் வாடும்போது இவனுக்கு நல்ல ஆகாரம்!

ஆற்றுத்தண்ணீர் வற்றவே, கர்த்தர் அவனை சாரிபாத் ஊரில் வாழ்ந்த ஒரு விதவையின்மூலம் போஷித்தார். (எலியாவின் வாக்குப்படி அவள் வீட்டில் வெகுநாளைக்கு மாவும் எண்ணையும் குறையவே இல்லை).

அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார்.

ஒபதியா. ஆகாபின் அரமனை விசாரிப்புக்காரன். கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவன். எலியா, ராஜாவைக் காணும்படியாக வரும் வழியில் இவனை சந்திக்கிறான்.

“நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்குச் சொல்”.

“ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படிக்கு, நீர் உமது அடியானை அவன் கையில் ஒப்புக்கொடுக்க நான் என்ன பாவம் செய்தேன்? நான் உம்மை விட்டுப்போனவுடனே ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் உம்மை எடுத்து, நான் அறியாத இடத்திற்குக் கொண்டுபோவார்; அப்பொழுது நான் ஆகாபிடத்திற்குப் போய் அறிவித்த பின்பு, அவன் உம்மைக் காணாவிட்டால், என்னைக் கொன்றுபோடுவானே”.

எலியா: “இன்றைக்கு என்னை அவனுக்குக் காண்பிப்பேன் என்று சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்”.

ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடனே, ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான்.

ஆகாப்: “இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா?”

எலியா: “இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்”.

“கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும்”.

வந்தார்கள்.

எலியா: “நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள்”.

தேவனா அல்லது உலகப்பொருளா? இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது”. சும்மாவா சொன்னார் இயேசு?

ஊஹூம், இந்தக்காலத்துக்கு இந்த பேச்செல்லாம் ஒத்துவரவே வராது; இந்த யுக்தி இன்றைய மக்கள்மத்தியில் எடுபடாது. இயேசு உங்களை நேசிக்கிறார்; உங்கள் கண்ணீர் யாவையும் துடைப்பார்; உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்; இப்படிச் சொன்னால்தான் மக்கள் நமக்கு செவிகொடுப்பார்கள்.

பரிசுத்த ஆவியானவர் பிரசங்கியார் மூலம் பாவத்தைக்குறித்தும், நீதியைக் குறித்தும், வரப்போகும் ஞாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்தினால் மக்கள் சுவிசேஷக் கூட்டங்களுக்கே வரவேமாட்டார்கள்! லைக்ஸே கிடைக்காது! ஃபாலோ பண்ணவே மாட்டார்கள்! (பேஸ்புக் யூடியூப் வருமானம், காணிக்கை தசமபாகம், பில்டிங் ஃபண்ட், இதெல்லாம் வராமல் போய்விடுமே!)

எலியா ஜனங்களை நோக்கி: “கர்த்தரின் தீர்க்கதரிசிகளில் மீந்திருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ நானூற்றைம்பதுபேர்.

இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடத்தில் கொண்டுவரட்டும்; ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு, அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைக்கக்கடவர்கள்; நான் மற்றக் காளையை அப்படியே செய்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைப்பேன்.

நீங்கள் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன். “அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம்””

ஜனங்களெல்லாரும்: “இது நல்ல வார்த்தை”.

“நீங்கள் அநேகரானதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம்பண்ணி, நெருப்புப்போடாமல் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்”.

தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி, “பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும்”. காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறுஉத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்.

மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி, “உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும்”.

அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.

மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலி செலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறுஉத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.

எலியா: “என் கிட்டே வாருங்கள்”.

சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு, இஸ்ரவேல் கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து, அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் ஒரு பெரிய வாய்க்காலை உண்டாக்கி, விறகுகளை அடுக்கி, ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின்மேல் வைத்தான்.

“நீங்கள் நாலுகுடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள்”. “மறுபடியும் அப்படியே ஊற்றுங்கள்”. மூன்றாந்தரமும், “அப்படியே ஊற்றுங்கள்”. தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான்.

அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, எலியா வந்து: “ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும்”.

“கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும்”.

அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.

ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: “எலியா! எலியா! கர்த்தரே தேவன்! கர்த்தரே தேவன்!”

எலியா: “நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள்”.

எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்.

ஏ டபள்யூ டோஜர் எழுதுகிறார்:

தேவனுடைய எலியாக்கள் இன்று எங்கே?

தேவனுடைய ஜனங்கள் நெறிதவறிப் போகும்போது, தேவமனுஷன் அமைதலாக இருக்கமாட்டான். நடுநிலை வகிக்கமாட்டான். திடீரென்று காட்சிக்குள்ளாக வருவான். தேவனுடைய வைராக்கியத்தை செயலில் காண்பித்து துன்மார்க்கத்துக்கு ஒரு முடிவு கட்டாதவரை ஓயமாட்டான். இவனால் பரிசுத்தாவியானவரின் வைராக்கியத்தை குழாயை அடைப்பதுபோல் அடைத்துவிடமுடியாது.

இவனால் பலருக்கு அதிர்ச்சி, கிலி, பதட்டம். ஒன்றிரண்டல்ல ஒரு ஜனமே இவனுக்கு எதிராக எழும்பும் என்றாலும், அதைப்பற்றி கவலைப்படவே மாட்டான். ‘சுவிசேஷ’க்கூட்டம் முடிந்தவுடன் ஆர்கனைசர் கூட்டத்தோடு கும்மாளம் அடிக்கும் பிரசங்கியாருக்கு இவனைக்கண்டால் மிகவும் நெருடலாகத்தான் இருக்கும்!

வழிதப்பிப்போகிறவர்களும், வழிதப்பிப்போகச்செய்கிறவர்களும் இப்படிப்பட்டவனை கடுமையானவன், அன்பில்லாதவன், தீவிரவாதி, வெறிபிடித்தவன், பைத்தியக்காரன், என்று முத்திரை குத்திவிடுவர். ஆனால் இவனோ பயமற்றவன். மனிதர்களுடைய அங்கீகாரம் தேடாதவன். இவனுக்கு நண்பர்கள் அநேகம் இருக்கமாட்டார்கள்.

ஜீவனுள்ள தேவனுக்கு முன்பாக நிற்கும் தனியொருவன் இவன்!

bottom of page