top of page

அதிகாரம் 13 – வெளிப்படுத்தின விசேஷம்

“நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார்”. அட, வைராக்கியம் நமக்குள்ளே வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவருக்குமா? ஓ நோ. ட்டூ மச்.

ஆனால் இதுதான் உண்மை. உங்களுக்குள் வாசம்பண்ணும் ஆவியானவர், இயேசு என்னும் மணவாளனுக்குக் காத்திருக்கும் மணவாட்டியை ஆயத்தம்பண்ணும் அத்தியாவசியமான செயலில் தீவரமாக ஈடுபட்டிருக்கிறார். இந்த மணப்பெண் மணமகனுக்கு எவ்விதத்திலும் பொருத்தமானவளாக இருக்கவேண்டியது அதிமுக்கியம் அல்லவா?

மணவாளன் சொல்வதை கேளுங்கள்: ‘நீ ஆரம்பத்தில் என்மேல் கொண்டிருந்த அன்பு இப்பொழுது இல்லை. அன்றைக்கு நீ இருந்த நிலை உன்னதமானது. இதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த செயல்களைச் செய். நீ மனந்திரும்பாத பட்சத்தில், உன்னை என் மணவாட்டியின் அங்கமாகவே ஏற்றுக்கொள்ள மாட்டேன். உதறித் தள்ளி விடுவேன்.

நான் உனக்கு அளித்துள்ள உன்னதத்தின் ஆசீர்வாதங்களை நீ உன்னுடையதாக்கிக் கொள்ளாமல் தரித்திர நிலைமையில் இருப்பது ஏன்? உனக்குள்ளே வேஷம் போட்டு அலைகிற சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன். உன் பாடுகள் மத்தியிலும் கடைசி வரை உண்மையாய் இரு.

என்னுடைய மாம்சத்திலும் இரத்தத்திலும் பங்குகொள்ளாமல், அசுத்தமானவைகளிலிருந்து ஜீவனைத் தேடிப்போகவும், என்னை விட்டுவிட்டு உலக சிற்றின்பங்களை நாடிப்போகவும் ஏதுவான இடறலை என் ஜனங்களுக்கு முன்பாகப் போடுகிறவர்களும், நான் வெறுக்கும் மத சம்பிரதாயங்களை சபையில் கைக்கொள்ளுகிறவர்களும் மனந்திரும்பாவிட்டால் நான் சீக்கிரமாய் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.

தங்களை தீர்க்கதரிசிகள் என்று பொய்யாய் சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டம் என் ஊழியர்களையே கவிழ்த்து உலகத்துக்குள் தள்ளிவிடுகிறார்கள். அவர்கள் மனந்திரும்பும்படியாய் தவணைகொடுத்தும் தங்கள் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவர்களுக்கு விருப்பமில்லை. அவர்களையும் அவர்கள் பிள்ளைகளையும் அவர்களோடு விபசாரம் செய்த இவர்களையும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பேன்.

உயிருள்ள சபை என்று பெயர்கொண்டிருந்தும் செத்த ஒரு கூட்டமாக உள்ள நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து. உன் செயல்கள் தேவனுக்குமுன் அரைகுறையாய் இருக்கிறது. ஆகையால் மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், நீ நினையாத நாளிகையிலே வருவேன்; என் வருகையின் பாக்கியத்தை இழந்துபோவாய்.

உன் வேறுபாட்டின் ஜீவியம் மூலமாக உலகத்தாரை ‘சுருக்‘ என்று உணர்வடையச் செய்யும் வகையில் தனி விசேஷித்தவளாக நீ வாழவில்லை. நீ நிர்ப்பாக்கியமுள்ளவள். பரிதபிக்கப்படத்தக்கவள். தரித்திரமும் குருடும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறாய். உலகத்தார் போலவே உலக செல்வங்களில் திருப்தி அடைந்தும் பெருமைபாராட்டியும் வாழ்கிறாய். என்னையோ வெளியே தள்ளிவிட்டாய். நீ மனந்திரும்பாவிட்டால், நான் உன்னை வாந்திபண்ணிப்போடுவேன். ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு’.

bottom of page