top of page

அதிகாரம் 12 - யூதா

நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் ஆக்கினைக்குள்ளாவார்கள். 2022இல் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு கிறிஸ்தவ மேடைப் பேச்சாளர் மரித்துப் போனார். அவருடைய மரணத்துக்குப் பின் அவரைக் குறித்து சர்ச்சைகள் பல எழும்பி அவர் உயிரோடிருந்த காலத்தில் அவர் பண்ணின காமலீலைகளும் வெட்ட வெளிச்சம் ஆனது. இவரோடு இன்டர்நேஷனல் ஊழியத்தில் இருந்த பலர் இவைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இவரை மைய்யமாகக் கொண்டுதானே ஃபண்ட் வருகிறது! நமக்கருகில் இப்படிப் பலர் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். விபச்சார மயக்கத்தினால் நிறைந்த கண்களையுடைய ‘அண்ணன்’மார் இருக்கத்தான் செய்கிறார்கள். பக்க வழியாய் நுழைந்த இவர்கள் திருடர்கள்தானேயொழிய மேய்ப்பார்கள் அல்லவே அல்ல. நாம் கிருபையின் காலத்தில்தான் வாழ்கிறோம் என்றாலும், கிருபை பெருக்கும்படிக்குப் பாவத்தில் நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. பவுல்தான் சொல்லுகிறார்.

சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள். இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள். ‘இயேசு உங்களைக் காதலிக்கிறார்’. ‘தேவன் உங்களை விசிலடித்து அழைக்கிறார்’. ‘மாசிலா உண்மைக் காதலே மாறுமோ பாவம் வந்த போதிலே?’ ‘பத்து இட்லியில் ஒரே ஒரு இட்லியை கர்த்தருக்குக் குடுங்கள்’. இவர்களுக்கு ஐயோ!

இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள். சபிக்கப்பட்ட நிலத்தின் கனியை கர்த்தருக்கு காணிக்கையாக்கக் கூடாது. திருடின பணத்திலும், சாராயம் புகையிலை போதை மருந்து விற்ற பணத்திலும், லஞ்சப் பணத்திலும், கொள்ளையடித்த பணத்திலும், பொய்க்கணக்கு காண்பித்த பணத்திலும், வரி ஏய்த்த பணத்திலும், வட்டிக்கு விட்ட பணத்திலும், பொல்லாத தொழில் செய்து ஈட்டிய பணத்திலும் (விபசாரம் சினிமா, சீரியல், கந்துவட்டி, கொள்ளை லாபம், கருக்கலைப்பு, மசாஜ் சென்டர், விக்கிரகக் கோயில் கட்டி, பங்கு சந்தையில் சூதாட்டம்), பந்தையப் பணம், பணையப் பணம் போன்றவைகளிலுமிருந்து, காணிக்கை கொண்டு வருகிறவர்கள் காயீனின் வழியில் நடக்கிறவர்களே. இரட்சிக்கபடாத, பொறாமை வண்கண்ணுடைய, துன்மார்க்கனுடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது.

பாவம் செய்யும்படியாக இடறல்களை விதைக்கிறவர்களும், இதைத் செய்ய ஆலோசனை சொல்லி தூண்டுபவர்களும், உலகப்பொருள் கிடைக்கும் என்கிற ஆசையில் தேவ சத்தத்துக்கும் சித்தத்திற்கும் விலகி ஒடுபவர்களும் பிலேயாமின் வஞ்சத்தில் விரைந்தோடுபவர்களே.

தேவனுடைய மெய்தாசர்களுடைய (ஊழியர்கள் என்ற பெயரில் அட்டூழியம் செய்து ஊரை ஏமாற்றுகிறவர்கள் அல்ல) எச்சரிக்கையின் வார்த்தைகளுக்கு எதிர்த்துப்பேசி அவர்களுடைய அழைப்பையே கேள்வி கேட்டு, தங்கள்பக்கம் அநீதிக்கு ஒத்துஊதும் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொள்பவர்கள் கோராகின் பாவத்துக்குள்ளாகிறவர்களே.

இவர்கள் யாவரும் கெட்டுப் போனவர்களே.

இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள். சுயநலவாதிகள், பெருந்திண்டிகள், வயிரே தெய்வம் என்றிருப்பவர்கள். நன்றாய் உண்டபின் குறை சொல்லிப் போகிறவர்கள். ஒரு வேளை உணவுக்காக பொய் சொல்லவும், எதையும் செய்யவும் துணிவுடையவர்கள். இவர்களுக்கு மேய்ப்பன் வேண்டாம்!

இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ்செத்து வேரற்றுப்போன மரங்களும், தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள். ஆசீர்வாதம், சந்தோஷம், சமாதானம் என்று மேடையில் நின்று உரத்து ஒலிக்கச் செய்யும் இவர்கள் வெத்துவேட்டுக்களே. காற்று எப்பக்கம் வீசுகிறதோ அப்பக்கம் திரிந்து, திரும்பவும் உயிர்ப்பிக்கப்பட கொஞ்சம்கூட சாத்தியமே இல்லாத பிணங்கள். வெட்டிப்பேச்சு பேசி தங்களுடைய அவமானங்களை பெருமையாக பறைசாற்றுகிறவர்கள். (நான் இரட்சிக்கப்பாடுவதற்கு முன் என்னவெல்லாம் செய்தேன் தெரியுமா? நான் கடவுளுக்கு காணிக்கை கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து எனக்கு என்னவெல்லாம் ஆசீர்வாதம் கிடைத்துள்ளது தெரியுமா?) தாங்கள் போகிற வழி இன்னதென்று தெரியாதிருந்தும் மற்றவர்களுக்கு வழி சொல்லுபவர்கள்.

இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப் பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள். திருப்தி அற்றவர்கள். எப்போதும் குறைப்பட்டுக்கொண்டே இருப்பவர்கள். எல்லாவற்றைக் குறித்தும் குறை சொல்லிக் கொண்டே இருப்பவர்கள். இச்சை பாவம் என்று பலர் ஏற்றுக் கொள்ளுகிறது இல்லை ஆனால் பவுலோ இதை பாவம் என்று அப்பட்டமாகச் சொல்கிறார். Envy, jealousy, lust, covetousness, stomach burn இவை எல்லாமே இச்சைதான். அடுத்தவன் வீட்டில் உள்ள கார், அடுத்தவன் மனைவி, அவன் தட்டில் இருக்கும் சிக்கன் பீஸ்! இவர்களோ தங்கள் இச்சையைத் தீர்த்துக்கொள்ள என்னவேண்டுமானாலும் செய்யத் துணிபவர்கள். (மொதல்ல அனுபவிப்போம். அப்பறம் பார்த்துக்கலாம். மன்னிப்பு கேட்டுவிட்டால் போகுது!). பெருமை, வீம்பு, இறுமாப்பு, மேட்டிமை – வாயைத் திறந்தாலே இதுதான் வருகிறது. மற்றவர்கள் தங்களை பெரியவர்கள் என்று எண்ணவேண்டும் என்பதற்காக முன்நிற்பவர்களை குஷிப்படுத்தி துதி பாடும் கூட்டம் சபைகளில் இன்று உண்டே. இந்த பிரதர் எவ்வளவு நல்லவர் தெரியுமா என்று பொதுவிலே அறிவித்தால் அந்த ப்ரதர் முன்னே வந்து தனக்காக ‘சாட்சி’ சொல்லுவார். என்னா டெக்னிக்!

கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள். தங்கள் இச்சைகளின் படி நடக்கும் இவர்களுக்கு ஒத்துப் போகாதவர்களை பொதுவிலே அவமானப்படுத்தி, வேடிக்கைப்பொருள் (காமெடி பீஸ்) ஆக்கிவிடுவார்கள்.

இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே. கட்சி கூட்டுகிறவர்கள், அரசியல் செய்பவர்கள், தங்களுக்கு என்று சொல்லி கூட்டம் சேர்த்துக் கொள்பவர்கள். பிரிவினைவாதிகள். ஒற்றுமையைக் குலைப்பவர்கள். சகோதர சிநேகத்தை முறிப்பவர்கள். உணர்ச்சிகளால் ஆளப்பாடுபவர்கள். பரிசுத்த ஆவியினாலல்ல, உடலால் ஆட்டுவிக்கப்படுபவர்கள். மனிதம், மெய்யுணர்வு, இரக்கம், அக்கறை இல்லாதவர்கள். செத்தவர்கள்.

bottom of page