top of page

வேதாகமம் அறிவுக்கா ஜீவனுக்கா?

விசுவாசிகளே, கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கும் உங்களுக்கு விடை தெரியுமா?


1) மனுஷன் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று இயேசு யாரிடம் கூறினார்?

2) பரிசுத்தாவியானவர் அருளப்பட்ட நாளின் பெயர் என்ன?

3) இனி நான் அல்ல, கிறிஸ்துவே என்னில் ஜீவிக்கிறார் என்று சொன்னது யார்?

4) நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். இந்த வசனம் எங்கு உள்ளது?

5) “நீங்கள் உலகமெங்கும் ....” இந்த வசனத்தை மனப்பாடமாக சொல்லவும்.


உங்களுக்கு இதில் நான்கு கேள்விகளுக்காவது பதில் தெரிந்திருந்தால் நீங்கள் நிச்சயமாக வேத அறிவு உடையவர்களே.


இன்னும் ஐந்து கேள்விகள் முயற்சித்துப் பார்ப்போமா?


1) நீங்கள் மறுபடியும் பிறந்து இருக்கிறீர்களா? (முழுக்கு ஞானஸ்நானம் அல்ல)

2) உங்களுக்குள் பரிசுத்தாவியானவரின் நிறைவு உண்டா? (அந்நியபாஷை அல்ல)

3) கிறிஸ்துவை நீங்கள் நாள்தோறும் வெளிப்படுத்துகிறீர்களா? (கிறிஸ்தவ பெயர் அல்ல)

4) இயேசுவின் இரண்டாம் வருகைக்கு நீங்கள் ஆயத்தமா?

5) கிறிஸ்துவின் சுவிசேஷத்தை தைரியமாக உங்கள் அருகிலுள்ளவர்களுக்காவது அறிவித்து உள்ளீர்களா?


உங்களுக்கு மேலுள்ள ஐந்து கேள்விகளுக்கும் பதில் உறுதியாகத் தெரியவில்லை என்றால் நீங்கள் வேத அறிவுடையவர்களேதவிர ஜீவனுடையவர்கள் அல்ல. நீங்கள் ஆதாம் ஏவாளைப் போல அறிவின் மரத்திலுள்ள கனியைதான் இன்னும் புசித்துக்கொண்டிருக்கிறீர்கள்; ஜீவவிருட்சத்துக்கு அருகில்கூட போகவில்லை. உங்கள் வேதாகமம் நன்மை தீமை அறியத்தக்க அறிவைத் தரும் விருட்சமாகவே இருந்துகொண்டிருக்கிறது; ஜீவன் அருளும் விருட்சமாக இல்லை. வேதத்திலிருந்து ஜீவன் உண்டென்று அறிந்துள்ளோமே தவிர ஜீவனை அடைந்துகொள்ளவில்லை.


இன்னும் ஒரு பயிற்சி செய்து பார்ப்போம். மேற்சொன்ன கூற்று உங்களுக்கே உறுதியாகிவிடும்.

1) பிறர் பொருளையாவது, வீட்டையாவது, மனைவியையாவது இச்சிக்கலாமா?

2) ஒரு பெண்ணையோ ஆணையோ இச்சையோடு பார்க்கலாமா?

3) புருஷனானவன் மனைவியை எல்லா சூழ்நிலையிலும் நேசிக்க வேண்டுமா?

4) மனைவியானவள் புருஷனுக்கு எல்லாவற்றிலேயும் கீழ்ப்படிய வேண்டுமா?

5) வேதவாசிப்பும், ஜெபமும் உபவாசமும் ஒரு விசுவாசிக்கு அவசியமா?


உங்களுக்கு இந்தக் கேள்விகளுக்கான பதில் நிச்சயமாக தெரிந்திருக்கும். ஆனால் இவைகளின்படி செய்கிறோமா? நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் நம்மிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ நம்மிடத்திலில்லை. ஆதலால் நாம் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறோம். ஒழுக்க நெறிகளை கற்றுக்கொண்டிருக்கிறோமே தவிர, வாழும் திறனை பெற்றுக்கொள்ளவில்லை. அறிவைச் சேர்த்துக்கொண்டிருக்கிறோமே தவிர ஜீவனை அடைந்துகொள்ளவில்லை.


கிறிஸ்தவ பெற்றோர்களாகிய நாம் நம் பிள்ளைகளுக்கும் ஒழுக்க நெறிகளை கற்றுக்கொடுக்கிறோம்; அவைகளை கைகொள்வதெப்படி என்று சொல்லித்தர இயலாதவர்களாக இருக்கிறோம். காரணம், நாமே கைக்கொள்வதில்லையே! கீழ்ப்படியாத பிள்ளைகள் என்று நம்முடைய குழந்தைகளை நாமே திட்டி தண்டிக்கிறோம். உண்மை என்ன? அவர்களால் அந்த ஒழுக்க நெறிகளின்படி வாழ இயலாது. ஒரு குறிப்பிட்ட வயதுவரை தாக்குப்பிடிக்கும் இவர்கள் அதன்பின்னர் பெற்றோரை எதிர்த்துக்கொள்ள ஆரம்பிக்கின்றனர். அல்லது, பெற்றோருக்கு தெரியாமல் பொல்லாத செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை சொல்லி குற்றம் இல்லை!


இந்தக் காலத்து கிறிஸ்தவ ஊழியர்களும் எழுதாளர்களும் இந்த ஜீவன் இல்லாதவர்களே. தங்கள் பிரசங்கங்கள் மூலமும் புத்தகங்கள் மூலமும் நன்மை தீமைக்குரிய அறிவை போதிக்கிறார்கள்; அவைகளின்படி எப்படி நடப்பது என்பதை போதிக்கிறதில்லை. தங்களுக்கே அனுபவம் இல்லையே!


அன்று மதங்களை நிறுவினவர்களும் சரி, இன்றைய ஆன்மீக குருக்களும் சரி, இப்படிப்பட்ட பேச்சிலே திறமைசாலிகள்தான். சாக்ரடீஸ் தொடங்கி இன்றைய ரிக் வாரன் வரை எல்லாரும் தத்துவ ஞானிகளே தவிர வேறல்லர்.


நிலைமை இப்படியிருக்க, இந்த ஜீவனை பெற்றுக்கொள்வது எப்படி? நன்மை தீமை பற்றிய அறிவு மட்டுமல்ல, நன்மையை ஏற்றுக்கொண்டு தீமையை வெறுக்கும் ஜீவனையும், அந்த ஜீவனின் பெலனையும் பெற்றுக்கொள்வது எங்ஙனம்? ஆழமாக யோசிக்கவேண்டிய கேள்விதான்.


அது சரி, நான் ஜீவிக்கிறேன்தானே? ஜீவன் எனக்குள் இல்லையா என்ன? உயிரோடுதானே வாழ்கிறேன்? இப்படிக் கேட்கத் தோன்றுகிறதா?


உடலிலே உயிரோடு வாழ்வது என்பது ஒன்று. ஆவி ஆத்துமா சரீரம் இவை அனைத்திலும் ஜீவனுடையவர்களாய் வாழ்வது என்பது வேறு. அதனால்தான், நானே ஜீவன், நித்திய ஜீவனை அளிப்பேன் என்ற வாக்கை இயேசு தன்னைக் கேட்டுக்கொண்டிருந்த உயிருள்ள மக்களிடம் பண்ணினார்! “நானோ என் ஆடுகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அந்த ஜீவன் பரிபூரணப்படவும் வந்தேன்” என்று உயிருடன் வாழ்ந்துகொண்டிருந்த ஆடுகளைப்பற்றிதான் அந்த மேய்ப்பன் சொன்னார்! “நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று தம்மைக் கேட்டுக்கொண்டிருக்கிறவர்களிடத்தில் சொன்னார் அல்லவா?


நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்றும், நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்றும், குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன் என்றும் தம்மைப்பற்றி இயேசு சொல்லி இருக்கிறார். அப்படியானால், நமக்குள் ஜீவன் வேண்டுமானால் அவர் நமக்குள் வரவேண்டும். அவர் நமக்குள் வரவேண்டுமானால் நாம் நமக்குள் சாகவேண்டியது அவசியம். நம்முடைய ஜீவனை முதலில் இழக்கவேண்டும். நம்முடைய சித்தத்துக்கும் விருப்புவெறுப்புகளுக்கும் முடிவுகட்ட வேண்டும். நம்முடைய இருதயமாகிய ஆவியையும், ஆழ்மனம் என்கிற ஆறாவது அறிவாகிய ஆன்மாவையும், ஐந்தறிவுகளுடைய நம்முடைய சரீரத்தையும் மரிக்கிறதற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.


அப்படி தன்னை ஒப்புக்கொடுத்த அப்போஸ்தலனாகிய பவுலினுடைய அறிக்கையை கேளுங்கள்: “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்”.


இயேசு சிலுவையில் சிந்தின இரத்தம் என்னை பாவங்களின் தண்டனையிலிருந்து விடுவிக்கிறது. இயேசுவின் சிலுவை மரணமும் நான் அவரோடு மரிக்கிறதும் என்னை பாவத்திலிருந்தே விடுவிக்கிறது. அவருடைய மரணத்தின் சாயலில் இணைக்கப்பட்டிருந்தால் அவருடைய உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.


பாவமன்னிப்பும் இரட்சிப்பும் பெற நான் அவரை விசுவாசித்து அவரிடம் மனம்திரும்பிவந்தால் போதும். இலவசமாக அவருடைய கிருபையினால் இரட்சிக்கப்படுகிறேன். ஆனால் கிறிஸ்தவனாக வாழ நான் என்னையே அவருக்கு ஒப்புக்கொடுப்பது அவசியம். இதற்கு நான் செலுத்தவேண்டியது என்னையேதான். “தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்”.


நான் இரட்சிக்கப்படும்பொழுது பிதாவாகிய தேவனும், அவருடைய வார்த்தையாகிய கிறிஸ்துவின் ஜீவனும் அவர் மீதுள்ள பரிசுத்த ஆவியானவரும் எனக்குள்ளே வருகிறார்கள். நான் தேவாலயமாகிறேன். நான் என்னை முழுமையாக பிதாவின் சித்தத்திற்கு அர்ப்பணிக்கும்போது பரிசுத்த ஆவியானவராலே அபிஷேகிக்கப்படுகிறேன். அவர் என்னை ஆட்கொள்ளும்போது அவர் கிறிஸ்துவினுடையவைகளை எனக்குள்ளிருந்து வெளிப்படுத்துவார். கிறிஸ்துவின் ஜீவன் என்னிலிருந்து வெளிப்படும். பாவத்தைக் குறித்தும் நீதியைக் குறித்தும் அதாவது தீமை இன்னது என்றும் நன்மை இன்னது என்றும் கண்டித்து உணர்த்துவார். மாத்திரமல்ல, தீமையை வெறுத்து நன்மையை பற்றிக்கொள்ளவும் பெலன் தருவார். உன்னதத்திலிருந்து வந்த பெலன் இவரல்லவா!


நான் என்னை அவரிடத்தில் நிறைவாக படைக்கும்போது நான் அவர் அளிக்கும் அவருடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறேன். (மரித்தவர்களின் கல்லறையில் RIP என்றுதானே எழுதுவார்கள்!) நான் அமர்ந்திருந்து அவரே தேவன் என்று அறிந்துகொள்ளுவேன். நான் அவர் மீது நம்பிக்கையாய் இருப்பேன். அவர் பார்த்துக்கொள்வார். யெகோவா யீரே.


சிலுவையில் அவரோடு மரித்தபின், என் சுயத்துக்கு உயிர் இல்லாததினால் என்னை நெருக்கும் காரியங்களோ சூழ்நிலைகளோ என்னை பாதிக்காது. “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்”. கோபம், வைராக்கியம், விரோதம், பொறாமை, பெருமை, இச்சை, பொருளாசை போன்ற மாம்சத்தின் தன்மைகளும் செயல்களும் செயலற்றுப்போகும். உணர்ச்சிகள் என்னை ஆட்டிப்படைக்காது. “அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்”. கிறிஸ்துவின் ஜீவன் எனக்குள் இருப்பதால் அவருடைய அன்பும், சந்தோஷமும் சமாதானமும் ஆவியானவருக்குரிய மற்ற தன்மைகளும் என்னில் வெளிப்படும்.


இரட்சிப்பின் நாளிலே என்னை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த தேவன் எனக்கு சுயாதீன சித்தத்தை திரும்ப நிலைநாட்டிக் கொடுத்துவிடுகிறார். அப்பொழுதிலிருந்து நான் ஆவிக்கோ மம்சத்திற்கோ எதற்கு அடிமையாக ஒப்புக்கொடுக்கிறேனோ அதற்கே அடிமையாய் இருப்பேன். நான் சுயாதீனத்திற்கு (தெரிந்துகொள்வதற்கான உரிமை பெற்றவனாய்) அழைக்கப்பட்டிருக்கிறேன், இந்தச் சுயாதீனத்தை நான் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாதிருப்பேனாக.


இந்த ஜீவன் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து அனுபவிக்க வேண்டியதாகும். ஜீவ விருட்சமாகிய அவரிடத்திலிருந்து ஜீவனை தொடர்ந்து புசித்துக்கொண்டே இருக்க வேண்டியது அவசியம். அவருடைய மாம்சத்தை புசித்து அவருடைய இரத்தத்தை பானம்பாண்ணிக்கொண்டே இருக்க வேண்டும். நன்மை தீமை இன்னது என்கிறதை அவர் எனக்கு சொல்லட்டும். எனக்கு ஓரளவுக்குத்தான் தெரியும். அவருக்குத்தான் ஆரம்பத்திலேயே முடிவு இன்னது என்பது தெரியுமே!


அதே போல, நான் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன் என்கிற உண்மையும் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கப்பட வேண்டியதே. அதனால் தான் இயேசு அவருக்குப்பின்செல்லும் சீஷன் அனுதினமும் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அவர் பின்னே வரவேண்டும் என்று சொன்னார். ஒவ்வொரு நாளும் ஆவிக்கும் மாம்சத்துக்கும் இடையில் போராட்டம் இருக்கத்தான் செய்யும். “நான் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது”. ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவருக்கு ஒப்புக்கொடுக்கும்போது மாம்சத்தை ஜெயிக்க ஆவியானவர் பெலன் தருவார்.


சரி. இப்பொழுது நம்முடைய பிள்ளைகளைப் பற்றி வருவோம். அவர்களுக்கு ஒழுக்க நெறிகள் கற்றுக் கொடுக்க வேண்டாமா? வேண்டும். அதே நேரம், அவர்கள் தேவனைப் பற்றிய விசுவாசத்திலும் வளரும்படியாக இயேசுவைக்குறித்தும் அவருடைய பண்புகளைக்குறித்தும் தேவன்மீது சார்ந்திருப்பதெப்படி என்கிற நடைமுறை கிறிஸ்தவ வாழ்வைக் குறித்தும் போதிக்க வேண்டியது விசுவாசப் பெற்றோர்களின் முழுமுதற் கடமையாகும். நம்முடைய சொந்த வாழ்க்கையே அவர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக இருக்கட்டும். நம்மிடத்திலிருந்து கேட்பதைவிட நம்மிடத்தில் காண்பதை அவர்கள் அதிகமாக நம்புவார்கள்.


ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்? பாவத்தோடு போராடி போராடி தோற்றுப்போய்க்கொண்டே இருக்கும் சோர்ந்துபோன விசுவாசிகளுக்கு கிறிஸ்துவின் ஜீவனை அடைந்து வாழ்வது எப்படி என்பதை போதிக்க ஆரம்பிப்போம். சபை கூடுகையை நன்னெறி அல்லது நீதி போதனை வகுப்பாக மாற்ற வேண்டாம். நம்முடைய பிரசங்கங்களும் புத்தகங்களும் ஒழுக்க நெறி போதிப்பவைகளாக ஆக்கிவிட வேண்டாம். தேவ வார்த்தையும் வார்த்தையானவரும் நமக்கெல்லாருக்கும் ஜீவ விருட்சம் ஆகட்டும். ஜீவனாகிய இயேசுவை விசுவாசிகள் அடைந்துகொள்ள உதவிசெய்வோம்.


-பிரகாஷ் அகத்து என்னும் பிரைட் அகஸ்டஸ்

For more articles and books for Spiritual growth, Christian Life, and Godly lifestyle:

20 views0 comments

Comentarios


bottom of page