top of page

பாஸ்டரம்மாவா, பாஸ்டரா?

Updated: Oct 5, 2022

பெண்கள் தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்திலும் அவருடைய நித்திய நோக்கத்திலும் மிக முக்கிய பங்கு வகிப்பவர்களே

  1. இயேசுவே ஸ்திரீயின் வித்தாக வருவார் என்று ஏதேன் தோட்டத்திலேயே முன்னறிவிக்கப்பட்டவர்தான். (ஏவாள் முந்தி தேவனுக்குக் கீழ்படியாமல் போனாலும் ஆதாம்தான் குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டான்! இயேசு என்னும் பிள்ளையை பெற்று எடுத்ததினாலே 'பிள்ளைபேற்றினாலே' அவளும் 'இரசிக்கப்படுவாள்' என்று வேதம் சொன்னது).

  2. பழைய ஏற்பாட்டிலே சொல்லப்படும் பல பெண்மணிகள் தேவனுடைய நோக்கத்திலே பயன்படுத்தப்பட்டவர்களே. தாமார், ராகாப், உரியாவின் மனைவி போன்றவர்கள் மட்டுமல்லாது, சாராள், தெபோராள், ரூத், எஸ்தர் போன்றோரும் இந்த பட்டியலில் உண்டு.

  3. தேவன் மாம்சத்திலே இயேசுவாக அவதரித்தது மரியாள் என்னும் ஒரு பாக்கியவதியின் கர்ப்பத்திலேதான். தூதனுக்குப் பின் இந்த மரியாளை முதலாவது மனதார வாழ்த்தினது எலிசபெத்து என்னும் பெண்மணிதான்.

  4. இயேசு பூமியிலே நன்மை செய்கிறவராகவே சுற்றித் திரிந்தபொழுது அவரோடு கூட உதவியாக பெண்களும் இருந்தார்கள்.

  5. லாசாருவினுடைய சகோதரிகளாயிருந்த மார்த்தாளும் மரியாளும் அவருக்கு பலமுறை பணிவிடை செய்தவர்கள்தான்.

  6. இயேசுவினுடைய உயித்தெழுதலின் நற்செய்தியை சீஷருக்கே அறிவிக்கும்படியாக முதலில் கட்டளை பெற்றவள் மகதலேனா மரியாள் என்கிற ஒரு பெண்மணிதான்.

  7. பவுல் ஊழியம் செய்தபொழுது லீதியாள் போன்ற பெண்கள் உதவி செய்தார்கள்.

  8. பிலிப்பு என்னும் ஒரு ஊழியக்காரனுடைய நான்கு மகள்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தார்கள்.

  9. ஆட்டுக்குட்டியானவருடைய மணப்பெண்ணாகவும் கிறிஸ்து என்னும் தலையானவருக்கு அவருடைய உடலாகவும் சித்தரிக்கப்பட்டவளே அவருடைய சபைதான். இவளுக்காகத்தான் அவர் தன்னுடையவைகள் யாவையும் மட்டுமல்லாது தன்னையே கொடுத்துவிட்டார்.

  10. இயேசுவோடு என்றென்றுமாய் அவருடைய மனைவி என்னும் இடத்திலே அவருடைய சகலத்தையும் மகிழ்ச்சியோடு அனுபவிக்கப் போகிறவளும் இந்த மணவாட்டியே.

கிறிஸ்தவ விசுவாசிகளாகிய பெண்களும் தேவனுடைய ராஜ்ஜியத்திலே ஆண்களுக்குக் குறைவானவர்களாக அல்லாமல் ஆண்களைப்போலவே சம உரிமை உடையவர்கள்தான் என்பதினாலேயே அவர்களும் தேவனுடைய குமாரராக எண்ணப்படுகிறார்கள். நித்தியத்திலும் அப்படியே.

பெண்களுக்கு இப்படி மேன்மையான நிலை கிறிஸ்தவ மார்க்கத்தில் இருக்கிறது முற்றிலும் உண்மை. (மதங்களிலே இந்த மேன்மை இல்லை!). ஆனால், இதற்கும் ஒருபடி மேலே சென்று தாங்களும் ஆண்களைப் போலவே சரி நிகர் சமானமாக உள்ளோம் என்றும் நாங்களும் பாஸ்டர் ஆவோம் மந்தையை மேய்ப்போம் சபைக்கு போதனை செய்வோம் என்று உரிமை கோருவது:

  1. இயேசு கிறிஸ்துவின் தாழ்மையான சிந்தைக்கு ஒத்தது அல்ல. "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்".

  2. தேவன் நியமித்த தெய்வீகமான விவாக ஒழுங்குக்கு ஏற்றது அல்ல. “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன். மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்”.

  3. தேவன் விதித்த புதிய ஏற்பாட்டு சபையின் ஒழுங்குக்கு அமைந்தது அல்ல. “சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது. அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே” "உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும். என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்".

  4. புதிய ஏற்பாட்டு அப்போஸ்தல சபையில் இந்த மாதிரி இல்லை. தலையாகிய கிறிஸ்துவானவர் சபைக்குத் தந்தருளிய ஊழியர்களாகிய வரங்கள் அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், சுவிஷேசகர், போதகர் மற்றும் மேய்ப்பர் ஆவர். இவர்களில் பெண்கள் அப்போஸ்தலர்களாகவோ போதகர்களாகவோ மேய்ப்பர்களாகவோ இருந்ததாக எங்கும் இல்லை. பெண்கள் உதவிக்காரிகளாக இருந்ததை மட்டுமே வாசிக்கிறோம். பிரிஸ்கில்லாள் தன்னுடைய புருஷனாகிய ஆக்கில்லாவோடு சுவிஷேச ஊழியம் செய்தாள். பிலிப்புவின் குமாரத்திகள் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். வயதில் மூத்த பெண்கள் இளம்பெண்களுக்கும் மனைவிகளுக்கும் போதனை செய்யலாம். அவ்வளவே.

  5. பெண்கள் இயற்கையிலேயே பெலவீன பாண்டம்தான் என்பதை மறுக்கும் முயற்சியே. அவர்களுடைய உடலும் மனதும் ஆண்களைவிட முற்றிலும் வித்தியாசமானதுதான். அவர்களால் மட்டுமே செய்யக்கூடிய பல செயல்கள் ஆண்களால் செய்ய இயலாது என்பது அவர்களுக்குறிய விசேஷம். பிள்ளை பெறுதல், பாலூட்டுதல், தகப்பனை அடையாளம் காண்பித்தல், மனச்சுமைகளையும் வருத்தங்களையும் ஏமாற்றங்களையும் சகித்தல், பேரிழப்புகளையும் சந்தித்தல் போன்றவை அவர்களுடைய உறுதியான மனோநிலைக்கு உதாரணமாக சொல்லலாம். ஆனால் அதுவே அவர்களுடைய பெலவீனம் ஆகும் என்பதும் உண்மையே. ஆகவே அவர்கள் ஆண்களுக்கு துணை நிற்கலாமே தவிர தலைமைதாங்க அல்லது போதிக்க முடியாது.

  6. விக்கிரக ஆராதனையின் ஒரு வெளிப்பாடே. பெண் தெய்வங்களை வணங்குபவர்கள் விக்கிரக ஆராதனை செய்கிறார்கள். விக்கிரகங்களுக்குத்தான் பெண் பூசாரிகள் இருக்கிறார்கள். இந்த வழக்கம்தான் இவர்கள் பெண்களை ஆண்களுக்கு சமமாக எண்ணும்படியாகச் செய்கிறது. இந்த மனப்பான்மைதான் கிறிஸ்தவ மதத்துக்குள்ளும் ‘பெண் போதகர்கள்”, ‘பெண் பாஸ்டர்கள்’ என்கிற வஞ்சகத்தை நுழையச் செய்தது.

  7. ஆண்களுக்கு சரி நிகர் சமானம் என்கிற புதிய உலக கொள்கையை அமலாக்கும் செய்கையே. நியூ ஏஜ் என்கிற புதிய யுகம் என்பதில் சாத்தனுடைய தந்திரமான வஞ்சகம் பெண்களை ஆண்களுக்கு நிகராக நிறுத்த விளையும் முயற்சியே. அரசியல், அதிகாரம், வேலைவாய்ப்பு போன்றவைகளில் 50% அல்லது அதற்கும் மேல் என்று பெண்கள் கோருவது இன்றைய நிலை. இது வேதத்தின்படியானது அல்ல. எனவே பெண்கள் தேவனுடைய சபையில் அப்போஸ்தலராகவும் போதகர்களாகவும் மேய்ப்பர்களாகவும் நிற்க முயற்சிப்பது பேய்த்தனம்.

  8. இச்சையை தூண்டி இடறல் உண்டாக்கும் கண்ணியே. பெண் பாஸ்டர்கள் போதிக்கும்படியாக முன்னிற்கும்போது அவர்களுடைய நடை, உடை, ஒப்பனை, பாவனை இவை யாவும் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் இழிவான இச்சையை மனதில் உண்டாக்கும். அவர்கள் எவ்வளவுதான் ஜாக்கிரதையாக இருக்க முயற்சித்தாலும், அவிசுவாசிகளுக்கும் விசுவாசிகளுக்கும் இடறலாக இருப்பது மறுக்க முடியாத உண்மை. எனவேதான் பவுல் ஒரு நிருபத்தில் பெண்கள் வீட்டில் தரித்திருக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். ‘ஆண்கள் ஏன் அந்த கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும்?’ என்று விதண்டாவாதம் செய்பவர்கள் அன்பை விதைக்கவில்லை. இச்சையையே விதைக்கிறார்கள்.

  9. வேதாகமம் பரிந்துரைக்கும் அலங்காரத்தை அசட்டை பண்ணுகிறார்கள். ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும். ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.

  10. வேதாகமம் கலாச்சார சூழலுக்குள் எழுதப்பட்டது என்று பொய்யாய் பறைசாற்றுவதே. உலகெங்கும் உள்ள எல்லா கலாச்சாரத்துக்கும் பொருந்தும் வகையில்தான் தேவ வசனம் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்துக்கு ஏற்ப வேத வசனங்களை புறக்கணிக்கவோ, சேர்த்துக்கொள்ளவோ, மாற்றிக்கொள்ளவோ, மாற்று அர்த்தம் கற்பிக்கவோ கூடாது. அப்படி செய்ய ஆரம்பித்தால், பிறகு இதற்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விடும். எதை வேண்டுமானாலும் நம்முடைய வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளலாமே. ஒரு அளவுக்குமிஞ்சி போனால் சாத்தானையே தேவனாக்கிவிடவும் சாத்தியம் ஆகிவிடும்!

பெண்கள் சபையில் அமர்ந்து ஜெபிக்கலாம். வேதாகம வசனங்களைச் சார்ந்து தீர்க்கதரிசன வார்தைகள் உரைக்கலாம். (குறி சொல்லுவது அல்ல). பாடல்கள் பாடலாம். ஞாயிறு பள்ளி நடத்தலாம். பெண்கள் கூட்டத்தில் ஆலோசனைகள் சொல்லலாம். முதிர்வாயதுள்ள பெண்கள் இளம்வயதினருக்கு போதிக்கலாம். ஒரு தனி நபருக்கோ ஒரு கூட்டத்துக்கோ சுவிசேஷம் அறிவிக்கலாம். ஊழியக்காரர்களுக்கு ஊழியத்தில் மட்டும் உதவியாக இருக்கலாம். (அவர்களின் இச்சைகளுக்கு இடம்கொடுக்கக் கூடாது!).இவை யாவும் செய்யும் சமயம் முக்காடிட்டுக்கொள்வது அவசியம். (சபைக்கு கிறிஸ்து தலையாயிருக்கிறார் என்பதை ஆமோதிப்பதே பெண்கள் அணியும் முக்காடு).


பெண்கள் காணிக்கை எடுக்க சபைவலம் வரக்கூடாது. திரைப்பட நடிகைகள் போல ஒப்பனை செய்துகொண்டு பாடல்கள் பாடுவதோ பிரசங்கம் செய்வதோ வீடியோ வெளியிடுவதோ கூடாது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலம் ஆக முயற்சிக்கக் கூடாது. கிறிஸ்தவ பாடல்களுக்கு பிறர் இச்சித்துப் பார்க்கிறமாதிரி மேடைகளில் நடனம் (choreography) ஆடவே கூடாது. (கோலாட்டம், கும்மி போன்றவை கலாச்சார கொண்டாட்டங்களாக தேவனை மகிமைப் படுத்த பெண்கள்கூட்டமாக கவர்ச்சி அல்லது காட்சிப் பொருளாக இல்லாதபடி ஆடலாம்.)

81 views0 comments

Комментарии


bottom of page