top of page

தந்தானைத் துதிப்போமே

தேவன் நம்மோடு இருக்கும்படியாக தம்முடைய ஒரே பேறான குமாரனையே நமக்குத் தந்தார். தேவ குமாரன் தன்னையே நமக்குத் தந்தார். தேவன் நமக்குள் என்றென்றும் இருக்கும்படியாக தம்முடைய பரிசுத்த ஆவியையே நமக்குத் தந்தார். இப்படி நமக்கு தந்த தேவனை துதிப்போமே.


தந்தானைத் துதிப்போமே – திருச்

சபையாரே கவி – பாடிப்பாடி

தந்தானைத் துதிப்போமே

விந்தையாய் நமக்கனந்தனந்தமான

விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக (2) – தந்தானை


நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கும் மிஞ்சி, நமக்கு அளவில்லாமல் முடிவில்லாத நன்மைகள் தந்துள்ள தேவனை சபையாகிய நாம் எவ்வளவுதான் பாடல் பாடிப் பாடி துதித்தாலும் நம்மால் விளக்கி சொல்லி முடியாது. இவ்வளவும் தந்தவரை விலைமதிப்புமிக்க சபையாகிய நாம் துதிப்போமாக.


1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும் மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து ஒய்யாரத்துச் சீயோனே ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் (2) – தந்தானை


சீயோனாகிய திருச்சபையே, உன்னைத் தலைநிமிர்ந்து நடக்கச்செய்த கனத்துக்குரிய ஈசனை உண்மையாக சந்தோஷப்பட்டு உன்னையே ஒப்புக்கொடுத்து கையைக்கூப்பி வணங்கி மகிழ்ச்சி கொள்வாயாக.


2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக் காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து கண்ணாரக் களித்தாயே எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே (2) – தந்தானை


எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைகளையும் அதற்கு மேலும் உன்மீது தங்க மழைபோல் பெய்யச்செய்த அந்த அருமையான நன்மை காட்சியை கண்ணாரக் கண்டு மட்டுமல்ல, ருசித்து அருந்தி மகிழ்ந்தவள் நீயே. இவை யாவையும் தந்த அவரை துதிப்போமாக.


3. சுத்தாங்கத்து நற்சபையே – உனை முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து சுத்தாங்கத்து நற்சபையே சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்

ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் (2) – தந்தானை


இயேசுவை தலையாகக் கொண்ட சுத்த சரீரமாகிய (உடலாகிய) நல்ல சபையே, உன்னை முற்றிலுமாய் தனக்குரியவளாக கொள்ளும்படியாக பரத்திலிருந்து இப்பூமிவரையும் வந்து பின்பு இப்பூமியிநின்று திரும்பவும் பரத்துக்கு சென்றவர் (அலைந்தவர்) இப்பூமியில் வரும்படி தன்னுடைய பரலோக மேன்மை (தெய்வத்துவம்) துறந்து, பாவத்தினாலே அழிந்துபோன உன்னை பாவமன்னிப்பு ஈந்து (பரிசுத்த ஆவியினாலே) பெலனுள்ளவளாக்க இப்பூமியில் பிறந்து நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்து இறுதியில் தன்னுடைய இரத்தத்தை சிந்தி தன்னுயிரை தந்து உனக்கு உயிர் தானமாக அளித்த அவரை துதிப்பாயாக.


4. தூரம் திரிந்த சீயோனே – உனைத் தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி தூரம் திரிந்த சீயோனே ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நின்னை அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! (2) – தந்தானை


சீயோனாகிய சபையே, நீ உன் தேவனைவிட்டு தூரம் திரிந்து சோரம் போனவள்தானே? ஆழத்தில் விழுந்துகிடந்த உன்னை தூக்கியெடுத்து, கைகளில் ஏந்தி, ஆபரணங்கள் அணிவித்து, அலங்கரித்து, அந்த பரம மணவாளன் உன்னை தன் மணவாட்டி ஆக்கிக்கொண்டாரே! என்ன சொல்லுவாய்!


5. சிங்காரக் கன்னிமாரே – உம் அலங்காரக் கும்மி அடித்துப் படித்து சிங்காரக் கன்னிமாரே மங்காத உம் மணவாளன் இயேசுதனை வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் (2) – தந்தானை


அலங்காரமாக கும்மியடித்துப் பாடி மகிழும் அழகான பெண் பிள்ளைகளே, சபையினுடைய மணவாளன் இயேசுவின் மகிமை மங்காதது, குறையாதது. அவரை வாழ்த்தி வாழ்த்தி புகழ்ந்து அவரை பணிந்திடுங்கள்.

28 views0 comments

Comments


bottom of page