top of page

விசேஷக் குறிப்புகள் (2)

கிறிஸ்து மத்திய ஆகாயத்திலே வரும்போதே

கிறிஸ்து மத்திய ஆகாயத்திலே வரும்போதே விசுவாசிகள் அவருக்கு எதிர்கொண்டுபோவார்கள். சந்திப்பு அங்கு நடந்தாலும், அப்பொழுதே அவரோடு பரிசுத்தவான்கள் பூமிக்குத் திரும்ப வருவார்கள்.

பூமியில், பலன்கள் அருளும் நிகழ்வும், ஞாயத்தீர்ப்பு அளிக்கும் நிகழ்வும் அடுத்தடுத்து நடக்கும். விழுந்துபோன தூதர்களும் விசுவாசிகளால் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவார்கள்.

ஆட்டுக்குட்டியானவரின் வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்ட மணவாட்டியான பரிசுத்தவான்கள் அவரோடு பரலோகம் சென்றடைந்து முறைப்படி அவருடைய மனைவியாவார்கள். (மனைவிகள் அல்ல).

அழிவுக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த பூமிதான் அக்கிரமம் நிறைந்த சோதோம் என்றும் அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும் நகரம்; (புதிய பூமிதான் நமக்கு நிலையான நகரம்).

கர்த்தர் சிலுவையில் அரையப்பட்ட இந்த பூமி மூன்று பங்காகப் பிரிக்கப்படுள்ளது - யூதர், புறஜாதியினர் / கிரேக்கர், தேவனுடைய சபை. இயேசு என்னும் அடைக்கலப்பட்டணத்திற்குள் ஓடி வர?

பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள், புத்தியுள்ள கன்னிகைகள் போல ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களே. யோவான்ஸ்நானன் சினேகிதனே.

ஆண்களும், பெண்களும், உடற்கூரின்படி (மனத்தின்படி அல்ல) மூன்றாம்பாலினத்தவரும் அடங்கிய மீட்கப்பட்டோரே பரிசுத்தவான்கள். இவர்களே கிறிஸ்துவின் மனைவியாகப்போகும் மணப்பெண்.

கிறிஸ்துவின் தூய்மையான தெய்வீக அன்பும் சகல உரிமைகளும் பெற்றனுபவிக்கப்போகிற இந்த விசுவாசக் கூட்டத்தார் அவரோடு உன்னத உறவுக்குள்ளாக வந்தவர்களேயல்லாமல் பாலுறவுக்குள் அல்லவே அல்ல.

கர்ப்பவதியின் சிசுவும், நன்மைதீமை வரையறுக்கத் தெரியாத சிறுபிள்ளைகளும், பிறப்பிலேயே இப்படி சிந்திக்கும் திறன் இழந்தவர்களும், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட மாட்டார்கள்.

பரிசுத்த ஆவியினாலே உணர்த்தப்பட்டு இரட்சிக்கப்பட்டும், சந்தர்ப்ப சூழ்நிலையினால் ஞானஸ்நானம் எடுக்க முடியாதவர்கள் (துணிந்து மறுப்பவர்கள் அல்ல) வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.

‘திருடன் வருவதுபோல்’ என்பது மனுஷர் எதிர்பாராத நாளும் நேரமும்தானேயொழிய வேறல்ல. விசுவாசிகள் காத்து எதிர்பார்த்து இருக்கிறதுபோல மற்றவர்கள் இருக்க மாட்டார்கள்.

சூரியன் அந்தகாரப்பட்டு, சந்திரன் இரத்தமாக மாறி, வானங்கள் சுருட்டப்பட்ட சுரருள்போல் ஆவதால், காலம் என்பது முடிந்துபோகும். கடைசி நாள் 24 மணிநேரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. (தேவன் இந்த பூமியை மறுசீரமைப்பு செய்தபொழுது சூரியனும் சந்திரனும் நான்காம் நாளில்தான் உண்டாக்கப்பட்டன. எனவே, முதல் மூன்று நாட்களாவது இப்படி இருந்திருக்க வேண்டும்).

நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் வரப்போகும் அழிவைப்பற்றி எச்சரிக்கப்பட்டும் தங்கள் சரீர இச்சைகளை மட்டுமே தீர்த்துக்கொண்டிருந்தார்கள். ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.

லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாள்வரைக்கும் ஜனங்கள் வரப்போகும் அழிவைப்பற்றிக் கவலைப்படாமல் அன்றாட தொழில் செய்துகொண்டு இருந்தார்கள். வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.

இரட்சிப்பும் அழிவும் இரண்டும் கடைசியான ஒரே நாளில் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். விசுவாசிகளாகிய நீதிமான்களுக்கு மகிழ்ச்சியான மீட்பு. துன்மார்க்கருக்கோ பேரழிவு.

கடைசி எக்காளம், மற்ற எக்காளங்கள் போலவேதான்; காது கேட்கும்படியாக ஒலிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது தேவனால் தெரிந்துகொள்ளபட்ட ஒரு மனுஷனாகக்கூட இருக்கலாம்.

ஆயிரம் வருட (நீண்டகால) அரசாட்சி இப்பொழுது நடக்கிறது. இயேசு இப்பொழுதும் அரசாளுகிறார். (a thousand என்பது சங்கீதம் 50ன்படியும் 91ன்படியும் ஒரு எண் அல்ல; அதுபோலவே a thousand years என்பது நீண்ட காலம்; 999க்குப் பின் வரும் ஒரு எண் அல்ல. இல்லையேல், thousand என்றே எழுதப்பட்டிருக்கும்).

வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய சீஷர்கள் அவருடைய ஆட்சியையும் அதிகாரத்தையும் இந்த பூமியில் அமலாக்கவேண்டியது அவசியம். சாத்தானோ, ஆளுகை தனக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் ஆயிரம் வருட அரசாட்சிக்கு விசுவாசிகள் காத்திருக்க வேண்டும் என்றும் அவர்களை நம்பவைத்துள்ளான்.

சீஷர்கள் பிசாசுகளை துரத்தினதாகச்சொல்லி ஆச்சரியப்பட்ட பொழுது இயேசு, சாத்தான் தாழ விழுந்ததை தான் கண்டதாக கூறினார் அல்லவா? சாத்தான் தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, இயேசுவாகிய அந்த ஆண்பிள்ளையைப்பெற்ற யூத விசுவாசிகளைத் துன்பப்படுத்தினான்.

யூத விசுவாசிகள் சாத்தானின் பிடியிலிருந்து விலகி பிழைக்கும்படி ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் (கிமு 552லிருந்து கிபி 1948 வரை 2500 வருடங்கள்) போஷிக்கப்படத்தக்கதாய் துன்பம்நிறைந்த தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி தேவனாலே சிறகுகள் கொடுக்கப்பட்டது.

சாத்தான் அந்த யூத விசுவாசிகளை அள்ளிக்கொண்டுபோகும்படி, தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்ட ‘தேவன் கடவுள் அல்ல; நானே கடவுள்’ என்னும் கொடிய வஞ்சகத்தை வாந்திபண்ணினான். அவன் பரப்பின பெரும் வஞ்சகத்தை பூமியில் வாசம்பண்ணும் மக்களனைவரும் நம்பி விழுங்கினார்கள். ‘நானே கடவுள்’ தான் ‘அஹம் பிரம்மாஸ்மி’.

சாத்தான் யூத விசுவாசிகள்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய புதிய ஏற்பாட்டு சபையோடு யுத்தம்பண்ணப்போனான்.

மரித்து உயிர்த்தெழுந்தபின் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவரான இயேசு, பாதாளத்திற்குரிய திறவுகோலை ஒரு தூதனிடம் கொடுத்தனுப்பி அவன் சாத்தானை பிடித்து, ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோடச் செய்தார்.

சாத்தான் அடைக்கப்பட்டதிலிருந்து புறஜாதிகள் அவனுடைய வஞ்சகத்திலிருந்து விடிவடைந்து இரட்சிக்கப்படவும், கிறிஸ்துவின் சபையில் சேர்த்துக்கொள்ளப்படவும் புறஜாதிகளின் காலம் துவங்கியது.

சாத்தான் அடைக்கப்படும்வரை தானியேலுக்கு சொல்லப்பட்ட யூதர்களின் காலம் 490 (ஏழு எழுபது) வருடங்கள். கடைசி வாரத்தின் நடுவில் மேசியா சங்கரிக்கப்பட்டார். அவருடைய இரத்தத்தினாலாகிய புதிய ஏற்பாடு / உடன்படிக்கை அவரால் உண்டாகி அமலாக்கப்பட்டது.

தம்முடைய ஒரே மரணத்தின் மூலமாக பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணின சமாதானப்பிரபுவின் ஜனங்கள், பழைய எருசலேம் நகரத்தையும் அங்கு இருந்த தேவாலயத்தின் பரிசுத்த ஸ்தலத்தையும் இவைகளின் அவசியமின்மையால் அழித்துப்போட்டார்கள்.

புரஜாதிகளின் காலத்தின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும். திறந்த வாசலையுடைய பிலதெல்பியா சபையின் காலத்தில் பல்லாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டு சபையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

bottom of page