top of page

விசுவாசிகளுக்கு நற்பலன் கிடைக்கும்

நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும்

நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தேவன் சொன்னபடி எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது. இதற்கேற்ப இப்பொழுது கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார். பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.. அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே மரித்தோரை உயிர்ப்பிப்பார். இப்படி மரணம் ஜீவனாலே ஜெயமாக விழுங்கப்படும் என்பதற்காகவே விசுவாசிகளும் வாஞ்சித்துக் காத்திருக்கிறார்கள். தேவன் சீக்கிரமாக இவர்களுடைய காலின்கீழ் சாத்தானை நசுக்கிபோடுவார்.

தேவகுமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களும், அவர் சொன்னபடி அவர் மாம்சத்தைப் புசித்து, அவர் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவர்களும், (அவரிடத்திலிருந்து அனுதினமும் ஜீவன் பெற்றுக்கொள்ளுகிறவர்களும்) நித்தியஜீவனை அடைவார்கள்; இவர்களை அவர் கடைசிநாளில் எழுப்புவார்.

கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; எக்காளம் தொனிக்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். சாவுக்கேதுவான அவர்கள் சரீரங்களை உயிர்ப்பிப்பார்.

அற்பமான ஜென்மசரீரம் ஆவிக்குரிய சரீரமாக அழிவில்லாததாய், மகிமையுள்ளதாய், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்; அழுகிப்போன மாம்சம் தோல்முதலானவை உயிர்பெற்று, உறுப்புகள் செயல்படும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும். இதை தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். எழுப்பப்பட்டவர்கள் வானவருடைய சாயலை அணிந்துகொள்வார்கள். இது இவர்களுடைய அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரமாக இருக்கும். அந்தச் சுதந்தரம் இப்பொழுது பரலோகத்தில் இவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது இவர்களுக்கு இது புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். இதுவே கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்பு.

அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? என்கிற வெற்றி முழக்கம் கேட்கும். பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.

இயேசு சொல்லியிருக்கிறார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்”.

இயேசு வரும்போது பூமியில் ஒருபக்கம் பகல் இன்னொரு பக்கம் இரவு மறுபக்கம் காலை அல்லது மாலை நேரமாக இருக்கும். வேலை நேரமோ ஓய்வு நேரமோ, இயேசுவின் வருகைக்காய் காத்திருக்கும் தம்முடையவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். தேவக் கோபாக்கினையின் நிகழ்வுகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, அவருடைய சீஷர்களின் மீட்பு சமீபமாயிருப்பதால், அவர்கள் நிமிர்ந்து பார்த்து, அவர்கள் தலைகளை உயர்த்தவேண்டும்.

கடைசி எக்காளமாகிய ஏழாம் எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, உயிரோடிருக்கிற விசுவாசிகள் மறுரூபமாக்கப்படுவார்கள். தேவன் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களைப் பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார். இனிச் சம்பவிக்கப்போகிறவைகளுக்கெல்லாம் அவர்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்பார்கள்.

கிறிஸ்தவர்களின் ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, அவர்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவார்கள். அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே விசுவாசிகளாகிய பரிசுத்தவான்கள் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்பார்கள். தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி இவர்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.

இதன் பின்னர், “இங்கே ஏறிவாருங்கள்” என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டாகும் பெரிய சத்தம் கேட்டு, இவர்கள் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மரித்து உயிர்த்தவர்களோடே மேகத்தில் ஏறி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, மேகங்கள்மேல் வானத்திற்குப் போவார்கள்; அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்ப்பார்கள். இயேசு, “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” என்பார். இவ்விதமாய், கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் இவர்களுக்கு பரிபூரணமாய் அளிக்கப்படும். இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்பார்கள்.

இவர்களுடைய மீட்பர் உயிரோடிருக்கிறார், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார்.

மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூடவும் ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட வருவார்; அப்பொழுது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்; தேவன் அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். “நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது”.

சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்த; ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய பரிசுத்தவான்களாகிய ஜனங்கள், வெற்றி பெற்றவர்களாக கடவுளுக்கு முன்பாக நின்று ஆர்ப்பரிப்பார்கள்.

நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் நீதியின் கிரீடத்தைத் தந்தருளுவார்; நன்மாதிரியாய் வாழ்ந்தவர்கள் மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவார்கள். சோதனையைச் சகித்தவர்கள் உத்தமரென்று விளங்கினதினால் ஜீவகிரீடத்தைப் பெறுவார்கள்.

bottom of page