top of page

இயேசுவின் வருகையின்போது – இனிமேல்

இயேசுவானவர் மறுபடியும் வருவார்.

வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இயேசுவானவர் எப்படி தம்முடைய சீஷர்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார். அப்பொழுது, இந்த மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும்.

கிறிஸ்து தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் தரிசனமாகும்பொழுது (முதல்முறை இரட்சகராக ஏறக்குறைய 2020 வருடம் முன்பு வந்தார்) மின்னல்போல மிகவும் பிரகாசமாகவும், வேகமாகவும், மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும், மேகத்தின்மேல் வருவதை கிழக்கிலிருந்து மேற்குவரை உலகமெங்குமுள்ள மக்கள் யாவரும் காண்பார்கள். இதை அவருடைய மகிமையின் பிரசன்னமாகுதல் என்றும் வர்ணிக்கலாம். இந்த நிகழ்வு கிறிஸ்தவர்கள் நம்பி எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற ஆனந்தபாக்கியம் என்றும் மீட்பு என்றும் விவரிக்கப்படுகிறது.

வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போகும். சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாகும்; சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும். சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்து அந்தகாரப்படும்; சந்திரன் இரத்தம் போலாகி ஒளியைக் கொடாதிருக்கும்; வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, நட்சத்திரங்கள் வானத்திலிருந்து பூமியிலே விழும்; (இயேசு உவமையாகச் சொன்னபடி அத்திமரம் இஸ்ரவேல் என்றால், இவர்கள் தங்களுடைய ஏவுகணைகளை செலுத்தி வானத்திலிருந்து சரமாரியாக விழச்செய்வார்கள்). மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாகும்.

பூமி மிகவும் அதிரும். பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.. சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோகும். புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழும். பர்வதங்கள் காணப்படாமற்போகும்.

மனுஷரில் ஒரு பெருந்திரள் பூமியதிர்ச்சியினால் அழிவார்கள்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; 75 பவுண்ட் / 35 கிலோ நிறையான பெரிய கல்மழையும் (மீட்டியோர் ஷவர்) வானத்திலிருந்து மனுஷர்மேல் விழும்; (ஆஸ்டெராய்டு அபோஃபிஸ் 2027இல் வருகிறதாமே? இதற்கு முன்னர்கூட விழலாம். இதுபோன்ற பூமியைத் தாக்கும் எரிகட்கள் வருவதை சரியாகக் கணிக்கவும் இதிலிருந்து மனுக்குலத்தை தப்புவிக்கவும் தொழில்நுட்பம் இதுவரை நம்மிடத்தில் இல்லை!) அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷிப்பார்கள்.

பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் ஏற்கனவே இருதயம் சோர்ந்துபோயிருக்கும் பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், தாங்கள் அடைக்கலமாக மலைபோல் நம்பிக்கொண்டிருக்கும் தங்களுடைய ஆஸ்தி (பணம், செல்வம், சொத்து), வங்கி இருப்பு, பொன் வெள்ளி, கல்வி, வேலை, பதவி, அந்தஸ்த்து, இவைகள் அந்த நாளில் முற்றும் பயனற்றதாகிவிட்டதால் அங்கலாய்ப்பார்கள்.

சாவைத்தேடினாலும் (தற்கொலைக்கு முயன்றாலும்) சாவு வராது. அவ்வளவு சுலபமாக மரித்துவிட முடியாது. தேவ கோபாக்கினையை சந்தித்தே ஆகவேண்டும்!

மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்துவார்கள்.

இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்; பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்.

bottom of page