top of page

பாவ விமோசனம் தேடுகிறீர்களா?

தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. -பைபிள்

நம்மைப் படைத்தவர் கட்டளையிட்ட ஒழுக்க விதிகளை புறக்கணித்து, ‘இந்த நெறிகளை மீறினால் தண்டனை உண்டு’ என்கிற அவர் வார்த்தையை நம்பாமல், நம் விருப்பம்போல செய்யும் ஒவ்வொவொரு செயலும் பாவமே. நம்மைப் படைத்த ஆவியாயிருக்கிற ஒரே கடவுளை நம்பி, கீழ்படிந்து, பணிந்துகொள்வதற்கு பதிலாக ஒரு விக்கிரகத்தை உண்டாக்குவதோ, அதற்கு ஆராதனை செய்வதோ, படைத்தவருக்கே உரிய காரணப்பெயர்களை இவ்விக்கிரகங்களுக்கும் மனிதர்களுக்கும் சூடுவதினாலே அவரை தூஷித்து பழிசொல்வதோ, கொலைபாதகமோ, விபசாரமோ, களவோ செய்வதோ, பொய் சொல்லுவதோ, பிறர் உடைமைகளை இச்சிப்பதோ, பெற்றோரை கனவீனம் பண்ணுவதோ, இது போன்று நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் பாதகம் உண்டாக்கும் எந்த செயலும் பாவமே.

பாவம் செய்கிற ஆத்துமா சாகும். இது தலையாய விதி. (பைபிள் இதை பிரமாணம் என்கிறது). சாவு உடலுக்குமட்டுமல்ல, மனுஷனுடைய ஆவிக்கும் ஆழ்மனதுக்கும்தான். கடவுளற்ற இறுதிநிலையே மரணம். கடவுள் வகுத்த நீதி நெறிமுறைகளை மீறுகிற நாம் கடவுளின் வழியை புறக்கணித்து அவரை எதிர்த்துக்கொண்டவர்களே. ஆகையால், பாவம் இழைக்கிற நாம் நமக்கு நாமே தண்டனையை தீர்ப்பாக எழுதிக்கொள்கிறோம். பின்பு, இந்த தண்டனையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள நாமே சில வழிமுறைகளையும் வகுத்துக்கொள்கிறோம். வேடிக்கையாக இல்லை?

இந்த தலைவிதியிலிருந்து விடுபட மனுஷராகிய நாம் கையாளும் யுக்திகள் பல. பக்தியுள்ளவர்கள் வேதங்களின்படி பாவப் பரிகாரம் செய்கிறோம். புனித தலங்களுக்குப் பிரயாணம் போவதும் காணிக்கை படைப்பதும் குலதெய்வக்கோயிலில் ஆடு பலி கொடுப்பதும் பக்ரிஈத் செய்வதும், தலை முடியை சிரைப்பதும், பலவிதமான நம்முடைய முயற்சிகளில் அடங்கும். நம்மில் கடவுள் இல்லை என்கிறவர்கள் கூட நம்முடைய வாழ்வில் இந்த விதி விளையாடிவிடாதபடி இதிலிருந்து தப்பிக்கும் நோக்கோடு செய்யும் தானதர்மம் பொதுநல சேவை போன்றவை நம்மை இந்த தலையெழுத்திலிருந்து விடுவிக்கிறதா? யாருக்குத் தெரியும்? அதனால்தான் ஒரு புறம் இவைகளை ஒன்று மாற்றி ஒன்றாக செய்துகொண்டே இருக்கிறோம். மறுபுறம் அக்கிரமமும் சாபமும் நாம் கணக்கில் சேர்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்.

சரி, இந்த தலையாய விதியை விதித்தது யார்? மனிதன் எப்படி வாழவேண்டும் என்று மனிதனுக்கு இன்னபிற விதிகளை விதித்தவரேதான்! மனிதனை படைத்தவருக்குத்தானே மனிதனுக்கு சிறந்தது எது? நம்மை சுற்றி உள்ள சமுதாயத்துக்கும் மற்ற படைப்புகளுக்கு சாதகம் எது? பாதகம் எது? என்பது தெரியும்! இதை அவர் நம்முடைய உள்ளத்திலேயே எழுதிக் கொடுத்துள்ளார். அதனால்தான் மனுஷன் அடிப்படையில் ஒரு ஒழுக்கநெறி அறிந்த உயிரியாக வாழ்கிறான். Man, basically, is a moral being! கடவுளை நம்பினாலும் நம்பாவிட்டாலும் நாம் ‘மன’ சாட்சி உடையவர்களே. அதனால்தானே நாம் மனுவர்க்கம்! மனசாட்சி இல்லாதவரை மிருகம் என்று சொல்கிறோம்தானே!

பாவமன்னிப்படைய கடவுளே வகுத்துத் தந்துள்ள வழி ஒன்று உண்டு. (பாவ) மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது. எனவே, இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு இல்லை. -பைபிள்.

இதனாலேயே மனுஷர் மிருகத்தின் இரத்தத்தையோ, சைவ உணவு உண்பவர்கள் குங்குமம் பூசிய பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சை போன்றவற்றை இரத்தத்துக்கு பதிலாகவோ சிந்துகிறோம். இது எனக்காக சிந்தப்பட்டது என்று குறிக்கும்படியாக இரத்த நிறத்திலுள்ள குங்குமத்தை மற்றவர்களுக்குத் தெரியும்படியாக நெற்றியில் வைத்துக்கொள்கிறோம். பலிப்பொருள் எரிக்கப்பட்டதை குறிக்கும் சாம்பலை திருநீரு / விபூதியாக பூசிக்கொள்கிறோம். (மனைவிக்குப் புருஷன் தலை என்பதினாலே இந்திய வழக்கப்படி திருமணமான பெண் தன் கணவனுக்காகவும் சேர்த்து குங்குமம் அணிகிறாள்).
இந்த இரத்தம் சிந்தும் முறைமை இன்றிலிருந்து 2740 ஆண்டுகளுக்கு முன் சிந்துநதி தாண்டி இந்தியா வந்த ஆரியர்களால் ஒருவிதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அதற்கு முன்னமே பாரதமாகிய (கடவுளின் ‘வரதம்’) இங்கு வாழ்ந்த ‘கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி’மக்களாகிய தமிழர்களால் பின்பற்றப்பட்ட வழக்கமேயாகும். இது கடவுளே மனிதனுக்கு விதித்த வழி. ஆனால் இந்த கோரமான பலி செலுத்தும் முறைமையை கடவுள் அறிவுறுத்தியதற்கு ஒரு விசேஷமான காரணம் இருக்கிறது. அது என்ன?

எல்லாரும் பாவம் செய்தவர்களே. பாவத்தின் சம்பளம் மரணம். -பைபிள். அவனவன் பாவத்துக்கு அவனவனே இரத்தம் சிந்தி மரித்தால் இவ்வுலகில் யாருமே உயிரோடு இருக்க முடியாது. பூமியே சுடுகாடு அல்லது கல்லறை ஆகிவிடும். இது பரிகாரம் அல்ல, தண்டனைதான். இதன்பிறகு கடவுளற்ற இறுதிநிலைதான். நரக அக்கினிதான்.

இப்படி நீதியான தீர்ப்பெழுதிய கடவுள் அன்பே உருவானவர் என்பதால் தன்னையே வழியாக ஆக்கினார். அவரே மனித உருவில் வந்து, மனுக்குலத்தின் பாவத்திற்கான தண்டனையை தானே சுமந்துகொள்ள தீர்மானித்தார். மனிதன் தன்னுடைய பாவத்துக்கு பரிகாரம் தேடும்முன்பே, கடவுள் வகுத்த திட்டமாக்கும் இது. இதன்படி, பூமியிலே சரித்திரப்பூர்வமாக பிறந்து, வாழ்ந்து இரத்தம் சிந்தி மரிக்க தன்னுடைய குமாரன் என்கிற உருவில் வருவார் என்று வாக்குப்பண்ணினார். உலகத்தோற்றமுன்பே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் என்று பைபிள் இவரைக்குறித்துதான் சொல்கிறது. எனவே தான், அவர் வரும்வரை, ஒரு பாவமுமறியாத ஒரு மிருகத்தின் இரத்தம் சிந்தும்போதெல்லாம் பலி செலுத்துகிறவன் தன்னுடைய பாவம் எவ்வளவு கொடியது என்பதை நொந்துணருவது மட்டுமல்லாது, இந்தக் கடவுளே வந்து தன்னுடைய இடத்தில் மாற்றாளாக இரத்தம் சிந்தி பரிகாரம் உண்டுபண்ணுவார் என்று அவர் வார்த்தையை நம்பி செய்ய வேண்டி இருந்தது.

கடவுளுடைய கிருபைவரமோ (அவர் இரங்கி அருளும் புண்ணியமோ) இயேசு கிறிஸ்துவினால் வரும் நித்திய ஜீவன். -பைபிள் இரண்டாயிரத்து இருபது வருடங்கள் முன்னர் தேவகுமாரனாக வந்த இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியாக சிலுவையில் தன்னுடைய இரத்தம் சிந்தினார். நம்மீது இருந்த சாபத்திலிருந்து விடுதலை அளிக்க மரித்தார். அதுவரை இவர்மூலமாய் பாவபரிகாரத்தை எதிர்பார்த்திருந்தவர்களும் சரி, பாவபரிகாரம் செய்து முடித்த அவருக்கு பிறகு வாழும் நாமும் சரி, அவருடைய இந்த ஒரு பலியினாலேயே பாவவிமோசனம் பெறமுடியும்.

இயேசு சிலுவைமரத்தில் சிந்திய இரத்தத்தின் அடையாளமாக சைவர்கள் நெற்றியில் சந்தனமும் அதன்மீது குங்குமமும் வைக்கிறார்கள். வைணவர்கள் இரத்தம் சிந்துவது என்பதை காண்பிக்கும்படியாக குங்குமம் ஒழுகுவதுபோலவே அணிகிறார்கள். ஆனால் விசுவாசத்தினாலே அவருடைய இரத்தம் இருதயத்திலே பூசபட்டவர்களே பாவ விமோசனம் அடைகிறார்கள். (இந்த புனிதமான அடையாளங்களுக்கு பின்னாளில் அருவருப்பான அர்த்தம் கற்பிக்கப்பட்டது வேறு ஒரு ‘கதை’).

அப்படியானால், நாம் செய்யவேண்டுவதுதான் என்ன? இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நமக்குப் பாவம் இல்லை என்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருப்போம். சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். பூமியிலே பாவங்களை மன்னிக்க இயேசுவுக்கு அதிகாரம் உண்டு. -பைபிள். நமக்காக மரித்தவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் ஆகையால் நம்மை மன்னிக்கும் அதிகாரமும் அவருக்குத்தான் உண்டு.

ஆகவே, நாம் செய்ய வேண்டியதெல்லாம் எனக்காகவும்தான் இயேசு சிலுவையில் மாண்டார் என்று விசுவாசிப்பதே. (பூசணிக்காயையும் தேங்காயையும் நம்பிதானே உடைத்தோம்!). நான் அடையவேண்டிய தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார் என்று நம்புவதே.
இப்படி தெய்வாதீனமாக மரண தண்டனையிலிருந்து விடுதலை அடைந்தவர்கள், புதுவாழ்வு பெற்றுக்கொள்கிறார்கள். மறுபிறப்பு அடைகிறார்கள். கடவுளின் தற்சுரூபமாகிய இயேசுவே தன்னுடைய இரத்தத்தை விலைக்கிரயமாகக் கொடுத்து நம்மை மீட்டிருக்கிறார் என்பதினால் நாம் அவருக்குச் சொந்தமானவர்களாகிறோம். அவர் நம்முடைய எதிர்காலத்தை பொறுப்பெடுத்துக்கொள்கிறார். இப்பூமியில் நிறைவாழ்வு வாழவும் அவர் வாக்கின்படியே அவர் திரும்ப வரும்போது அவரோடு நம்மைக்கூட்டிச் செல்லவும் நாம் நம்பிக்கையோடே எதிர்பார்த்து காத்திருக்கலாம். இதோ சீக்கிரம் வருகிறார். ஆயத்தமா?

பாவ விமோசனம் தேடுகிறீர்களா?
Topic
Gospel about forgiveness of sins
Category
Gospel
bottom of page