top of page

நற்செய்தியை எப்படியெல்லம் அறிவிக்கலாம்...

கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். பரலோகம் ஏறிச்சென்ற அவர் திரும்ப வருவார். (யோவான் 14:3). அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். (1 கொரி 15:3,4, 23). இதுவே நற்செய்தி.

சுவிசேஷம் சொல்லுபவர்கள் முந்தி இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டும். பரிசுத்தஆவியின் ஆளுகை அவசியம். ஊழியர்கள் மட்டுமல்ல, விசுவாசிகள் யாவருமே நற்செய்தியை அறிவிக்கும்படியாக கட்டளை பெற்றிருக்கிறோம். (சபையில் பிரசங்கிக்க அல்ல!)

நற்செய்தியை அறிவிக்க நாம்தான் மக்களைத் தேடிப் போக வேண்டும். அவர்கள் சபைக்கு வரட்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. (சபை விசுவாசிகளாலானது, அவிசுவாசிகள் வெளியே தான் இருக்கிறார்கள்). நம்முடைய அயலகங்களிலும், பள்ளி கல்லூரிகளிலும், வேலை செய்யும் இடங்களிலும் இருந்து ஆரம்பிக்க வேண்டும். (அப் 1:8).

கேட்பவரின் மொழியிலேயே நற்செய்தி அறிவித்தால் கேட்பவர்கள் காதுகொடுத்துக் கேட்கத் தூண்டும். கவனிப்பார்கள். (அப் 22:2). அவர்களுக்கு நம்முடைய கல்வி, மொழியறிவையும் திறமையையும் காண்பிக்கவேண்டிய அவசியம் இல்லை.

கிறிஸ்துவின் பெயரை இயேசு என்று அரமேய மொழியில் சொல்லுவதைவிட ஈசன் என்று தமிழிலோ, ஈஷ் என்று வடமொழியிலோ, ஈசா / ஈசு என்று உருதுவிலோ உச்சரிப்பது நல்லது. அப்பொழுது கேட்பவர்கள் சரியாக தாங்கள் கேட்பதை தங்களுடைய கலாச்சாரத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். தாங்கள் வணங்குவது தவறான காரியம் என்றும், கிறிஸ்துதான் யாவருக்குமுள்ள ஒரே தேவன் (கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல) என்றும் அறிந்துகொள்வார்கள்.

கேட்கிறவர்களை நீங்கள், உங்களுக்கு, என்று சொல்லாமல், நாம், நமக்கு என்று சொல்லுவோமாகில் கேட்கிறவர்களை மாத்திரமே குற்றப்படுத்துகிறோம், குறைசொல்லுகிறோம் என்கிற உணர்வை ஏற்படுத்தாது. (அப் 17:29). நாங்களும் உங்களைப்போலத்தான். பாடுள்ள மனுஷர் என்று அவர்களோடு நம்மை இணைத்துச் சொல்லும்போது, கேட்பதற்கு ஆர்வம் உண்டாகும். (அப் 14:15; 17:26). கேட்கிறவர்களுடைய அறியாமையே அவர்களின் இந்த நிர்பந்தமான நிலைமைக்கு காரணம் என்று சொன்னால், நேர்மறையாய் கேட்பார்கள். (அப் 3:17; 13:27). கேட்கிறவர்களின் நற்குணங்களை குறிப்பிடும்போது இன்னும் நம்முடைய செய்தியை ஆவலாய் கவனிப்பார்கள். (அப் 13:16, 26; 17:22).

வேதாகமத்தை அறிந்தவர்களுக்கு அதிலுள்ள வசனங்களை மேற்கோள் காட்டி, திருஷ்டாந்தப்படுத்தி நற்செய்தியை அறிவிக்கவேண்டும். (அப் 2:14). அறியாதவர்களுக்கு, வசனத்திலிருந்து அவர்கள் புரிந்துகொள்ளும்படியாக அவர்களுடைய வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும். வெறும் வசனம் மட்டும் சொன்னால் போதாது. (அப் 17:31). வசனங்களை (பழையஏற்பாட்டிலிருந்து) சொன்னால் அவர்களுக்கு புரியாது என்பதால் அவைகளை தவிர்க்க வேண்டும். (அப் 10:43, 44).

பொதுவாக சமுதாயத்தின் குறைகளை சுட்டிக்காட்டலாமே தவிர தனிநபரைத் தாக்குவதை தவிர்க்க வேண்டும். (அப் 2:40). சாதி நிறம் மற்றும் மொழி வித்தியாசமில்லாத சமுதாயம்தான் கிறிஸ்தவம் என்றும் (அப் 10:28, 35; 13:47) இது ஒரு மதமல்ல, ஒரு வாழ்க்கையின் மார்க்கம் என்று வித்தியாசப்படுத்தி காண்பிக்கவேண்டும். (அப் 18:23) கேட்பவர்களோடு கூடி உணவருந்தினால் நம்மை அதிகம் நம்புவார்கள்.

சுவிசேஷம் எப்பொழுதும் இயேசுவண்டைக்குதான் மக்களை ஈர்க்க வேண்டுமே தவிர, சொல்லுகிற நம்மை முன்னிறுத்தும்படியாக சொல்லவே கூடாது. (அப்போ 3:12). நம்முடைய இரட்சிப்பின் அனுபவத்தை சாட்சியாக தாழ்மையோடு சொல்லலாம். (அப் 22:5).

நற்செய்தி சொல்லும்போது மனுஷரை கண்டு பயந்தோ, அவர்களில் சிலரை திருப்திப்படுத்தவோ செய்தியை சமரசம் செய்யவோ கூட்டவோ குறைக்கவோ கூடாது. (அப் 4:20). அதிகாரிகளுக்கு முன் பேசவேண்டிய வார்த்தைகளை முன்னமே சிந்தித்து வைக்கவேண்டிய அவசியம் இல்லை. சமயத்துக்கேற்ப வார்த்தைகளை (அம்புகளை) அவரே தருவார். (அப்போ 2, 22, 25; வெளி 6:2) கேட்கிறவர்களுக்கு இடைஞ்சல் செய்யும் எவரையும் அங்கேயே கடிந்துகொள்வதில் தவறில்லை. (அப்போ 13:10-12).

நம்மைக் கேட்கிறவர்களிடம் பொதுவாக பேசும் காரியத்திலிருந்தோ, பழக்கவழக்கங்களிலிருந்தோ சுவிசேஷத்தை சொல்ல முடியுமானால் உடனே அவர்கள் நம் செய்தியை சம்பந்தப்படுத்திப்பார்க்க இயலும். (அப் 8:35; 17:23). கேட்பவர்களின் மத மற்றும் சமூக வழக்கங்களை அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். (அப் 17:23). புற மதத்தினரின் தெய்வங்களை ஏளனம் செய்யக்கூடாது. (அப்போ 18:24-29). கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு அவர்கள் அறிந்த இலக்கியங்களிலிருந்து (குரான், திருக்குறள், திருவுந்தியார்...) மெய் தேவனைக் குறித்த குறிப்புகள் இருந்தால், மேற்கோள் காட்டலாம். (அப் 17:28).

இயேசுவையே எப்பொழுதும் விவரித்துச் சொல்லி அவர் நாமத்தையே மகிமைப் படுத்த வேண்டும். நம் தேவன் என்பவர் எப்படிப்பட்ட மேன்மையுள்ளவர், சிருஷ்டிகர், யாவுமறிந்தவர், எதையும் எதிர்பாராதவர், என்று வித்தியாசப்படுத்தி சொல்லவேண்டும். (அப் 17:24).

இந்த சுவிசேஷம் கேட்பவரிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் வரவேண்டும். (1 தெச 1:5). வெறும் வார்த்தையாய் இருந்து பயனில்லை. அதிகாரத்தோடும் (தயக்கத்தோடும் வெட்கத்தோடும் அல்ல), தேவ ஆவியின் உதவியோடும் தைரியமாக அறிவிக்கப்பட வேண்டும். (அப்போ 2:14). வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று இயேசு சொல்லியிருக்கிறார் அல்லவா? (மத் 28:18). சொல்லுகிற நாமே முதலில் அவருடைய வாக்கையும் நற்செய்தியை முழுமையாக நம்பினால்தான் இப்படிப் பேசவே முடியும்.

நற்செய்தியை சொல்லி முடிக்கும்போது ஒரு வேளை இந்த செய்தியை கேட்கிறவர்கள் நிராகரித்தால் என்ன நேரிடும் என்பதையும் எச்சரிப்பாய் சொல்லிவிடுவது அவர்களை மறுபடியும் யோசிக்கச் செய்யும் (அப் 13:41). ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், சோர்ந்துபோகாமல், அடுத்த இடத்திற்கு நகர்ந்து செல்லவேண்டும். (அப்13:51). நாம் சொல்லும் வார்த்தை விசுவாசத்திற்கு உரியது என்பதால் எதையும் நிரூபிக்க அவசியமில்லை.(அப் 17:33). காணாததைத்தானே விசுவாசிக்க வேண்டும்? ஆவிக்கு (இருதயத்துக்கு) தான் செய்தி; வீணான சிந்தைக்கு (மூளைக்கு) அல்ல.

சுவிசேஷகர்களை மக்கள் மேன்மைப்படுத்த முயற்சி செய்யும்போது, உடனே அவர்களின் வீண்செயல்களுக்கு இடங்கொடுக்காமல் தாங்களும் அவர்களில் ஒருவர்தானென்று அடையாளப்படுத்த வேண்டும். பணிந்துகொள்ளுதலை நிராகரிக்க வேண்டும். (அப் 14:15).

ஜனங்களுடைய கலாச்சாரம் நம்முடைய விசுவாசத்திற்கு மாறாக இருப்பதினால், நற்செய்தி சொல்ல தடையாயிருப்பின், அவர்களுடைய கலாச்சாரத்துக்கு ஏற்ப (பாவக் கிரியைகளுக்கு அல்ல) கொஞ்சம் விட்டுக்கொடுப்பது தவறாகாது. விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டது (ஆராதனை), வேசித்தனம், இரத்தம், நறுங்குண்டு செத்தது – இவைகளுக்கு ஒருபோதும் ஒத்துப்போகக் கூடாது. அசைவ உணவு தவிர்த்தல், செருப்பு போடாதிருத்தல், வேஷ்டி சேலை தாலி கட்டுதல், போன்ற மேலோட்டமான சிறு காரியங்களுக்கு சமரசம் செய்யலாம். (அப் 16:3).

தனிமனுஷனுடைய இரட்சிப்பு என்பதைவிட, குடும்பமே இரசிப்புக்குள் நடத்தப்பட வாஞ்சிக்கவேண்டும். (அப் 16:31). இது பிற்பாடு குடும்பத்தில் குழப்பங்களை தவிர்க்க உதவும்.

சுவிசேஷம் சொல்லும்போது, வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது. ‘வாயாடி’ என்றோ அல்லது வேறு ஏதோ அவமானமாய் சொல்லி ஏளனம் செய்தாலும், பொருட்படுத்தாமல் செய்தியை பிரசங்கிக்க வேண்டும்.

நற்செய்தி அடங்கிய கைப்பிரதியையோ வேதாகமமோ மட்டுமே கொடுப்பது சுவிசேஷ ஊழியம் ஆகாது. (முழு வேதாகமத்தை விட புதிய ஏற்பாடு மட்டுமே முதலில் கொடுப்பது நல்லது). பொதுமக்களோடு பேசுவதற்கு முயலவேண்டும். (அப் 17:17). ஆயிரம் கைப்பிரதிகளோ நூறு புதிய ஏற்பாடு பிரதிகளோ வினியோகிப்பதைவிட ஒரு ஆளிடத்தில் பேசுவது மிகவும் பயனுள்ளதாகும். பல லட்சம் கைப்பிரதிகளும் பல்லாயிரம் வேதாகமங்களும் குப்பைதொட்டிக்கே போகின்றன. சில நூறு, புத்தக அலமாரிக்கு போய்ச்சேருகின்றன. வாசிக்கப்படுபவை வெகு சிலதே. பலர் தியாகம் செய்து கொடுக்கும் பணம் கொண்டு அச்சிடப்படும் இவை அனைத்தும் மிதிக்கப்படுவதிலும் வீணாகப் போவதிலும் நம்முடைய பங்கும் இருக்குமே! தேவ நாமம் தூஷிக்கப்படுவதற்கு நாமும் ஒரு காரணமாகிவிடக் கூடாது. வசனம் அறிவிப்பதுதான் விதை விதைப்பது; கைப்பிரதி கொடுப்பது அல்ல.

நற்செய்தியை அறிவித்தபின் ஜெபிக்கலாமா என்றோ, உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன் என்று கேட்கவோ, மேடைக்கு அழைக்கவோ கூடாது. அவர்களாகவே இருதயத்தில் குத்துண்டு அடுத்தது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால், பாவ மன்னிப்புக்காக எப்படி வேண்டிக்கொள்வது என்று சொல்லிக்கொடுக்கலாம். கிளிப்பிள்ளைபோல் வார்தைகளை திரும்ப சொல்லுவாதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். நாம் செய்யும் ஜெபம் ஒரு மந்திரமாக அவர்கள் நினைத்துவிடக் கூடாது.

திரித்துவம், ஞானஸ்நானம், ஆவியின் அபிஷேகம் குறித்து முதலிலேயே சொல்லக் கூடாது. கேட்கிறவர்கள் ஆர்வத்தோடே இன்னும் கேட்க விரும்பினால், சுவிசேஷத்தையும் கடந்து கீழ்ப்படிதலுக்கு ஏதுவான மற்ற காரியங்களையும் சொல்லலாம்.

இன்றைய சூழ்நிலையில் பெண்களோடு பேசும்போது, தனி ஒரு ஆண் என்பதைவிட, தாய், மனைவி, அல்லது சகோதரியோடு இருத்தல் நல்லது. தனிமையில் உள்ள பெண்களிடம் ஆண்கள் பேசுவதை முடிந்த அளவுக்கு தவிர்த்து விடுதல் நல்லது.

நற்செய்தியை எப்படியெல்லம் அறிவிக்கலாம்...
Topic
Gospel sharing methods
Category
Gospel
bottom of page