top of page

சாவே, நீ சாவாய்!

சாவே, நீ சாவாய்.

சாவே, உனக்கேனிந்த வீம்பு? வலியவனோ நீ? பயங்கரமோ?
இல்லை, நீ இல்லவே இல்லை. அகம்பாவம் கொள்ளாதே;
யார்யாரை விழுங்க நீ நினைத்தாயோ -அவர் யாரும்
செத்தேவிடவில்லை; சாவதில்லை நானும். நீதான் பரிதாபம்!
துயில் என்றும் தூக்கம் என்றும் வர்ணிக்கப்படும் இந்நிலைக்கு
அனுப்பினாயோ? இது முடிவல்ல; மரணம் முடிவல்ல!
இன்னலையும் கடந்து இன்னும், முடிவிலா ‘இன்’னும் உண்டு.
எம்முடையோர் பற்பல பேர் பயணித்து போனாலும் -அவர்
உடலுக்கு ஓய்வு; மனதுக்கு அமைதி; விடுதலை தந்தாயோ?
விதி விபத்து அரசர் நீசர்க்கு அடிமையன்றோ நீ? கேவலம்!
விஷம், வியாதி போர் – இவை அவமிக்க உன் உறைவிடம்?
மெல்லமைதி ஈகும் மருந்து தரும் உறக்கம் அதி சிறப்பே!
உனக்கேன் இக்கர்வம்? கொஞ்சம் பொறு! -இதோ எழுவோம்
மீண்டும் வாழ! மீண்டு வாழ! சாப சாவே, நீ சாவாய்!

-ஜான் டண் (கி.பி 1572-1631)
(தமிழாக்கம் – பிரகாஷ் அகத்து)

கவிஞரும் கடவுளின் பணியாளருமான ஜான் டண் தன் மனதில் குடிகொண்டிருந்த நீங்கா நம்பிக்கையை இக்கவிதையின் மூலம் வெளிப்படுதினார். கடவுளின் முடிவில்லா நோக்கத்தை அறிந்து, அதற்கு தம்மை ஈந்தவர் அனைவரின் எதிர்பார்ப்பும் இதுவே. உங்களுக்கும் இந்த நம்பிக்கை உண்டா? இல்லையேல் இனிவரும் செய்தி உங்களுக்குத்தான். நீங்களும் காலனை வெல்லலாம்.

மரணம் யாரையும் விட்டுவைப்பதில்லை. கைம்பெண்கள் என்றோ அனாதைகள் என்றோ இரக்கம் காண்பிப்பதில்லை. வாழ்க்கையையே புரட்டிப்போடும் வலிமைகொண்டது சாவு.

நமக்குஅன்பான ஒருவரை நாம் இழந்து தவிக்கும்போது நமக்கு யார் எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அமைதி அடைவது அவ்வளவு சுலபம் அல்ல. இயேசுவும் பெத்தானியாவிலே சகோதரனை இழந்து தவித்த சகோதரிகளுக்கு ஆறுதல் சொன்னவர்தானே! நிச்சயமாக யாரும், எதுவும் இந்த பேரிழப்பை ஈடுகட்ட முடியாது. நம்முடைய வாழ்விலும், மனதிலும் நீங்காத இடம் பெற்றுக்கொண்ட நம்முடைய தந்தையோ, தாயோ, மனைவியோ, கணவரோ, மகனோ, மகளோ, நெறுங்கிய உறவினரோ, யாராக இருந்தாலும், அவருடைய மரணம் நமக்குள் ஆழமான வெற்றிடத்தை உருவாக்கிவிடும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

மரித்தவர், உயிரோடு இருக்கையில் கடவுளிடம் மனந்திரும்பி பாவ வாழ்க்கைக்கு முடிவுகட்டி, கடவுளுக்கு தன் புதுவாழ்வை அர்ப்பணித்து, கடவுளின் சித்தம் செய்தவராக வாழ்ந்திருந்தால், அவருக்கும் கவிஞர் ஜான் டண்ணுக்கு இருந்த நம்பிக்கை இருந்திருக்கும். சீக்கிரம் ஒரு நாள் அவரும் மரணத்தினின்று எழுவார். மீண்டும் வாழ. மீண்டு வாழ. ஏனெனில் இயேசுவே அவருடைய மீட்பர்; நித்திய அழிவினின்று காப்பாற்றும் இரட்சகர். அவர் கடவுள் வகுத்த வழியாகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு சத்தியமாகிய இவரை பின்பற்றி ஜீவனான இவரை வாழ்ந்து காட்டி, அனேகருக்கு ஒரு நன்மாதிரியாயும், பலருக்கு பயனுள்ளவராயும் இருந்திருப்பார்.. சாவை வெல்வேன் என்ற நம்பிக்கையோடு சென்றிருப்பார்.

இவர்களைக்குறித்துதான்: “கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது” என்று வேதாகமம் சொல்லுகிறது. (சங்கீதம் 116:15). இவர்களுக்காக நாம் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கிக்கவேண்டியது இல்லை. (1 தெச 4:13). இயேசு சொன்னது என்ன? என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 5:24). மரணம் ஒரு மதில் அல்ல; அது ஒரு வாயில்தான். இம்மையிலிருந்து மகிமையான மறுமைக்கு வழிதிறக்கும் ஒரு பெரும் கதவுதான்!

யாரொருவர் தன்னுடைய வாழ்நாளில் கிடைத்த நல்வாய்ப்பை தவற விட்டு, தன் அக்கிரமங்களில் உழன்றுகொண்டிருக்கும்போது, பாவமன்னிப்பு பெற்றுக் கொள்ளாமல் மரித்தால், இந்த நம்பிக்கை அற்றவராக நம்மைவிட்டு கடந்து போவார், அவரும் ஒருநாள் கடவுளுக்குமுன் கணக்கொப்புவிக்க மீண்டும் எழும்புவார். மீண்டு வாழ அல்ல; செய்த பாவங்களுக்கும் தீமைகளுக்கும் அநியாயங்களுக்கும் ஏற்ற பலனை அடைய; அந்தக் கடவுள் என்னும் நீதியுள்ள நியாயாதிபதி முன் இப்படிப்பட்டவர்கள் நிற்கத்தான் வேண்டும். இவர்கள் கடவுளற்ற எரிநரகத்துக்கு நிரந்தரமாக போவார்கள் என்றும் இயேசு எச்சரித்துள்ளார்.

ஒருவரும் இப்படிக் கெட்டுப்போவது அன்பாகிய கடவுளின் விருப்பமல்ல. எனவேதான், கடவுள்தாமே இந்த இயேசுவின் வடிவில் மனிதனாக இவ்வுலகத்திற்கு வந்து, நம்முடைய பாவங்களுக்காக நாம் அடியவேண்டிய தண்டனையை தாமே ஏற்றுக்கொண்டு, சிலுவையில் மரித்தார். மூன்றாம் நாள் உயிருடன் எழுந்து, தாம் தெய்வம் என்று நிரூபித்தார். மரணத்தை வென்ற மார்க்கண்டேயன் இவரே. மனுக்குலத்தை மரணத்தினின்று விடுவிக்கும்படியாக வந்தாவர் இவர்தான்!

இந்த இயேசுவை அண்டிக்கொள்ளுகிற யாவரும் புதுவாழ்வு அடைந்து நீடூழி வாழும் வரம் பெற்றுக் கொள்கிறார்கள். நிறைவான வாழ்வை இப்பூமியிலும் முடிவில்லா வாழ்வை மறுமையிலும் பெற்று வாழும் பாக்கியம் இவர்களுக்குத்தான். கடவுளோடு இவர்கள் பயணம் இங்கிருந்தே ஆரம்பிக்கிறது. கடவுளுடைய கையிலிருந்து இவர்களை யாரும் பறித்துக்கொள்ள முடியாது. அவர் நியமித்த நாளில், இங்கு மரித்தாலும் அவர்கள் ஆன்மா அவரண்டை செல்லும். மகிமையான உடலில் இவர்கள் மீண்டும் எழவும், உயிரோடுள்ளவர்கள் மரிக்காமலேயே மறுவுருவடைந்து அவரோடு செல்லவும், தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.

இயேசுவை விசுவாசிக்கும் இவர்கள் யாவரும் புனிதர்களே. இவர்களை தம்மோடு கூட்டிச் செல்ல கிறிஸ்து இயேசு திரும்பவும் வருவேன் என்று வாக்குப் பண்ணிப் போயிருக்கிறார். பரலோகத்திலிருந்து சீக்கிரம் வருவார். அவர் வருகையின் அடையாளங்கள் அவர் சொன்னபடியே இன்றும் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. சாவை வென்றவர்களாக புனிதர் யாவரும் மீண்டெழுவார்கள். அவர் வரும் அந்த நாளில் மனுக்குலத்தின் கடைசி எதிராளியாகிய சாவுக்கு எரிநரகத்தில் சாவு நேரிடும்.

நீங்களும் சாவை வென்று வாழ விரும்புகிறீர்களா? சாவை ஜெயித்தவரின் ஜீவன் உஙகளுக்குள் இருந்தால் இது சாத்தியமே. ஒன்றான மெய்தேவனாகிய அவரையும் அவர் அனுப்பினவராகிய (தேவ குமாரனாகிய) இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (யோவான் 17:3). குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். (1 யோவான் 5:12).

உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும் இவைகள் எழுதப்பட்டுள்ளன.

சாவே, நீ சாவாய்!
Topic
Gospel with Life as theme
Category
Gospel
bottom of page