top of page

கல்யாணத்துக்கு ரெடியா?

ஏனுங்க, கல்யாணத்துக்கு ரெடியா?

அட, இப்படி பொத்தம்போதுவா கேட்டா எப்படி? யாரோட கல்யாணம்? எங்கே? எப்போ? மாப்பிள்ளை யாரு? பொண்ணு யாருன்னு தானே கேக்கறீங்க?

வாங்க, ஒண்ணொன்னா சொல்றேன். அதுக்குமுன்னாடி கொஞ்சம் சொல்லவேண்டி இருக்குங்க. அத மொதல்ல சொல்லிடறேன். ஓகேவா?

இந்தக் கல்யாணம்ங்கிற ஐடியாவே மனுஷனா பாத்து உண்டாக்குனது இல்லீங்க. கடவுள் மனுஷன படைச்சப்போ ஆணும் பெண்ணுமா படச்சாருங்க. ஒரு ஆணுக்கு ஒரு பொண்ணு – இதுதாங்க அப்பிருந்தே. (இதுக்கும் மீறி வேற ஏதாவது இருந்தா கண்டிப்பா தப்புங்க). அந்த பொண்ணு புருஷனுக்கு ஏற்ற துணையா இருக்கோணுங்கிறதுதான் கடவுள் அவள அவனுக்கு குடுத்ததற்கான நோக்கம்ங்க. ஆனா இந்த புருஷன்-மனைவிங்கிற மாடல் அவரு சொர்கத்திலேயே வடிவமச்ச மாடல்தாங்க. கடவுளுக்கு தன்னுடைய தலைசிறந்த படைப்பாகிய மனுசர்களோட எப்போமே இருக்கவேணுமிங்கிறது அவரோட ஓயா விருப்பம்ங்க. அதுக்காகவே தான் மனுஷரையே படச்சாருங்க.

கடவுள் தன்னோட அன்ப மனுசன் மேல வச்சாருங்க. மனுஷரும் அவர் மேல அன்பு வைக்கணுமின்னு சொல்லி, அவர்களுக்கு ஒரு சுயாதீன சித்தமும் குடுத்தாருங்க. அதாவது, நன்மை வேணுமா, தீமை வேணுமான்னு நம்ம விருப்பம்போல நாமே முடிவெடுத்துக்கலாம்ங்க. ஒரு பொம்மலாட்ட கைப்பாவையா அவர்கள ஆட்டிவைக்க அவர் விரும்பலங்க. அவங்க அவர்மேல மனசார அன்பு வைக்கணும்ங்கறதுக்காக ஒரு ஆழ்மனசையும் குடுத்தாருங்க. அவரோட எப்பவுமே தொடர்பு கொண்டிருக்கணும்ன்னு அவங்களுக்கு உள்ள ஒரு ஆவியையும் வச்சாருங்க. ஆக, மனுசன், வெறும் உடல் மட்டுமில்லங்க. நமக்கெல்லாருக்கும் ஆத்துமாவும் ஆவியும் இருக்குங்க. நாம சத்தியமா பரிணமித்த மிருகங்கள் இல்லீங்க.

கடவுளுக்கும் மனுஷருக்கும் இடையில உள்ள இந்த அன்பு, எல்லாத்துலேயும் தலை சிறந்ததுங்க, உடல்ரீதியான அன்பையும் கடந்து, உள்ளத்த ஊடுருவி இணைப்பதுங்க. உன்னதமானதுங்க. புருஷனுக்கும் மனைவிக்குமிடையில இப்படிப்பட்ட அன்பு இருக்கணும்ங்கிறதுதான் கடவுளோட நோக்கம்ங்க. இதுதாங்க தெய்வீக மாடல்!

நமக்கோ, கடவுளோட கட்டுப்பாட்டுக்கு கீழ இருக்க விருப்பமில்ல. அவர்மேல அன்புவெக்காம, அவரு மனுஷனுக்கு அனுபவிக்கக் குடுத்த பொருட்கள் மேல அன்புவெச்சுக்கிட்டு இருக்கோம்ங்க. தற்பிரியராவும், பணப்பிரியராவும், சுகபோகப்பிரியராவும் ஆயிட்டோம்ங்க. கடவுளோட பயமும் பக்தியும் உள்ளயிருந்தாலும், மெய் தேவன விட்டுட்டு நமக்கு விருப்பம் போல தெய்வங்கள உண்டாக்கிக்கிட்டோம்ங்க. நாம இந்த பூமியில சுகநலத்தோடு வாழறதுக்கு அவசியமான எல்லாத்தையும் தாராளமா குடுத்த உண்மைக் கடவுள்மேல அன்பு வெக்க மறுத்துட்டோம்ங்க. ஒளியாகிய கடவுள தள்ளீட்டு இருள பற்றிக்கிட்டோம்ங்க. நன்மைய வெறுத்திட்டு தீமைய தெரிஞ்சுக்கிட்டோம்ங்க. உயிர பகச்சுக்கிட்டு சாவ தழுவிக்கிட்டிருக்கோம்ங்க. கடவுள எதிர்த்துக்கிட்டு அவரோட எதிராளிகூட சேந்துக்கிட்டோம்ங்க. இது துரோகத்தின் உச்சம்தானேங்க?

நம்மளோட கடைசி மூச்சுவர அவருகிட்ட திரும்ப வரலைன்னா, கடவுள் தன்னோட பகைஞருக்காக ஒதுக்கியிருக்கிற நரகத்துக்கு தான் போவோம்ங்க. இது நமக்கு நாமே வருவிச்சுக்கிட்ட தண்டனைதானே?

கடவுளோ, நம்மமேல அவர் வச்சிருக்கிற அன்ப வெளிப்படுத்த, பூமியில தெய்வமகன்ங்கிற உருவில மனுஷனாகவே வந்து பிறந்தாருங்க. இந்த ஈசன் உங்களையும் என்னையும் போலவே வாழ்ந்தாருங்க. நமக்கு எல்லாருக்கும் கிடைக்க வேண்டிய ஞாயமான மரண தண்டனைய அவரே ஏத்துக்கிட்டாருங்க. அவர் தன்னோட இரத்தத்தை முழுசுமா சிலுவை மரத்தில சிந்தி உயிரையே குடுத்தாருங்க.

கடவுளாகவே பாத்து வகுத்துக் குடுத்த இந்த வழிய நம்பி, இந்த இயேசுங்கிற ஈசன், எனக்காகத்தான் தன்னையே தியாகமா கொடுத்தாருன்னு விசுவாசிச்சு அவர்கிட்ட வர்ற எல்லாரையும் அவர் மன்னிச்சு ஏத்துக்குவாருங்க. பழைய, அவருக்கு துரோகம் பண்ணின வாழ்வுக்கு முடிவுகட்டுறேன்னு மனந்திரும்பி நம்மயே அவர்கிட்ட ஒப்புக்கொடுத்தா, மரிச்சு மூணாம் நாள் உயிரோட எழுந்த இந்த தேவ குமாரன், நமக்கு புது வாழ்வு தருவாருங்க. பழசெல்லாம் ஒழிஞ்சிரும்ங்க.

இப்பிடித் தங்களையே கடவுளுக்கு அர்ப்பணித்த எல்லாரையும் ஒரு மணப்பெண்ணாகவும், தேவகுமாரனே அவளுக்கு மாப்பிள்ளையாகவும், கடவுளுடைய வார்த்தையாகிய வேதாகமத்தில அழகா சித்தரிக்கப்பட்டிருக்காங்க. பாருங்க, அவருதான் தன்னோட மணப்பெண்ணுக்காக தன்னையே குடுத்தாரே. அவ்ளோ அன்புங்க.

இந்த இயேசுதான் உயிர்த்தெழுந்ததுக்கு பிறகு தன்னுடய மணப்பெண்ணின் ஒரு பகுதியாக உருவான அவருடைய சீடர்கள்கிட்ட சொன்னாரு: “நான் உங்களை திக்கற்றவர்களா விட்டுட்டு போக மாட்டேன். உங்களுக்காக ஒரு இடம் ரெடி பண்ணப் போறேன். மீண்டும் திரும்பி வருவேன். அதுவரைக்கும் உங்களோட எப்போமே இருக்கும்படியா கடவுளோட உயிர்மூச்சாகிய தூய ஆவியையே உங்களுக்குள்ள அனுப்பித் தருவேன். அவரு உங்களுக்கும் உங்களுக்குப் பின்னாடி என்னை விசுவாசிக்கிறவங்களுக்கும் என்னைப்பத்தி எடுத்து சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருப்பாரு. அப்போ நீங்க என்னை இன்னும் நல்ல தெரிஞ்சுக்குவீங்க. நான் அவர்மூலமா உங்கள நாளுக்கு நாள் தூய்மை ஆக்கிக்கிட்டே இருப்பேன். என்னை விசுவாசிக்கிற கடைசி ஆளும் இந்த மணப்பெண்ணின் பங்கு ஆகிறவரைக்கும் நான் அவளை என்னுடைய சபையாக உருவாக்கிக்கிட்டே இருப்பேன். அவள அப்பழுக்கு அற்றவளாக எனக்கு முன்னே நிறுத்திக் கொள்ள கடவுளுடைய வார்த்தையினால் தொடர்ந்து உங்களை சுத்திகரிச்சுக்கிட்டே இருப்பேன். அதனால் நீங்க போய் இந்த நல்ல செய்திய உலகெங்கும் சொல்லுங்க. நான் இந்த உலகத்தோட முடிவுவரைக்கும் எல்லா நாளும் உங்க கூடவே இருப்பேன்”.

இயேசு பரலோகம் ஏறிப்போன பத்தாவது நாள் கடவுளோட ஆவியானவர் நிச்சயத்தாம்பூலமா கொடுக்கப்பட்டுட்டாருங்க. மணப்பொண்ணுக்காக மாப்பிள்ளையாகிய அவர் திரும்ப வருவாருங்கறதுக்கு இவர் கேரன்டீங்க. இனி கல்யாணத்துக்காக மணப்பெண் தன்னை ரெடி பண்ணவேண்டியதுதான் மிச்சம்ங்க.
மாப்பிள்ளையாகிய இயேசு இன்னும் சொல்லராருங்க: “கவலைப் படாதீங்க. நான் வந்து என் மணப்பெண்ணை எப்போமே என்கூடவே இருக்கும்படியா கூட்டீட்டு போர அந்த நாள் சீக்கிரம் வரணும்னு எனக்கு ஆவலா இருக்கு. பரிசுத்தமாக இருக்கிறவங்க இன்னும் பரிசுத்தமாகட்டும். நீதி செய்யறவங்க இன்னும் நீதி செய்யட்டும். இதோ சீக்கிரமா வர்றேன்”.
இதுமட்டுமில்லீங்க, அநியாயம் செய்யறவங்களும், அசுத்தமா இருக்கிறவங்களும் தண்டனை அடைவாங்க. முடிவில்லா அழிவுதான் அவங்களுக்கு கிடைக்கும்ன்னும் அவரு சொல்லி இருக்காருங்க.

சொர்க்கத்தில இந்த கல்யாணம் சீக்கிரமா நடக்கப் போகுதுங்க. மாப்பிள்ளையாகிய இயேசு உங்கள அவர் இருக்கிற இடத்துக்குக் கூட்டிக்கிட்டு போக அவரு ரெடிங்க. அவரோட மணப்பெண்ணின் ஒரு பங்காக ஆக, அவரை உங்க தலையாக ஏத்துக்கிட்டு, அவருடைய உடலாக மாறி அவரோடு போக, உங்களுக்கு ஆவல் இருக்கா?

இந்த கல்யாணத்துக்கு நீங்க ரெடியா?

இதப்பத்தி இன்னும் நீங்க தெரிஞ்சுக்க விரும்பினா எங்களையோ இல்ல உங்க பக்கத்தில இருக்கிற ஈசானோட விசுவாசிகளையோ கேளுங்க; உதவி செய்வோம்!

கல்யாணத்துக்கு ரெடியா?
Topic
Gospel with Wedding theme
Category
Gospel
bottom of page