top of page

எது நற்செய்தி அல்ல?

(இந்த செய்தி எவரையும் புண்படுத்தும்படியாக எழுதப்பட்டதல்ல. இவ்வுலகத்தின் கடைசி காலத்தில் வாழும் நாம், எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்கும்படியாக எழுதப்பட்டதே).

இதுதான் நற்செய்தி:

கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு பிறந்திருக்கிறார். இதுவே எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி. (லூக்கா 2:10, 9). இது ஏன் நற்செய்தி? இயேசு தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார். அதனால்தான். (மத்தேயு 1:21). எப்படி? கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். பரலோகம் ஏறிச்சென்ற அவர் திரும்ப வருவார். (யோவான் 14:3). அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். (1 கொரி 15:3,4, 23).

மனந்திரும்புதலை உண்டாக்கும் மேற்சொன்னவை தவிர வேறு எதுவுமே நற்செய்தி அல்ல. இவைகளில் ஒன்றையோ, சிலவற்றையோ மட்டுமே கொண்டுள்ள செய்தி பூரண சுவிசேஷமல்ல. இவை எதுவுமே கொண்டிராமல் வேறு காரியங்களை உள்ளடக்கமாகக் கொண்ட எந்த செய்தியும் நற்செய்தி அல்லவே அல்ல. இதில் குறிப்பிட்டவைகளையும் மீறி வேறு எதுவும் சேர்த்துச் சொல்லப்படுவது விஷம்கலந்த செய்தியே.

நற்செய்தி என்கிற பெயரில் மக்களைக் கவர்ந்திழுக்க அறிவிக்கப்படும் செய்திகள் யாவும் மதமாற்றத்தை தூண்டுபவையே. சில வேளைகளில் இச்செய்திகள், கேட்பவர்களை பயமுறுத்துபவையாகக் கூட இருக்கலாம். இப்படிப்பட்ட செய்திகளை வழங்குகிறவர்கள் மதவாதிகளும், ஜனங்களை மதமாற்றம் செய்ய முயற்சிப்பவர்களுமாவார்கள். குருடருக்கு வழி காட்டும் குருடர் என்று இவர்களைப்பற்றிதான் இயேசு எச்சரித்திருக்கிறார். அக்காலத்திலேயே யூத மதத்தினர் இப்படி புரமதத்தினரை தங்கள் மதத்திற்கு மாற்ற கடல்கடந்து சென்றார்களாம்! இவர்களைப்போன்றோரைத்தான் சமுதாயம் எதிர்க்கிறது. அரசுகளும் இவர்களுக்கு விரோதமாகத்தான் சட்டங்கள் இயற்றுகின்றன. இன்று மெய்சுவிசேஷம் சொல்லும் நற்செய்திப் பணியாளர்களுக்கு இவர்கள் விளைவிக்கும் ஊறு சொல்லிமுடியாதது. இவர்கள்நிமித்தமாகவே மெய் கிறிஸ்தவர்களுக்கு அவப்பெயரும் கிறிஸ்துவின் நாமத்துக்கு தூஷணமும் உண்டாகிறது.

இக்காலத்திலே நற்செய்தி என்ற பெயரில் “தேவஊழியர்களால்” சொல்லப்படும் அரைகுறை செய்திகளின் ஒரு தொகுப்பு இதோ:

(இவர்கள் சொல்லும் அருள்நாதர் வேதாகமத்தின் இயேசு அல்ல!):

• உங்களுடைய வியாதியை சுகமாக்குவார்
• உங்கள் கண்ணீர் யாவையும் துடைப்பார்
• உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
• உங்கள் கவலைகளையெல்லாம் மாற்றுவார்
• உங்களுக்கு சமாதானம் அருளுவார்
• கஷ்டத்திலிருந்து, கடனிலிருந்து உங்களை இயேசு விடுவிக்கிறார்
• வேலை தேடித்திரியும் உங்களுக்கு நல்ல வேலை தருவார்
• இப்போதிருக்கும் வேலையில் உங்களுக்கு பதவி உயர்வு தருவார்
• பரீட்சையில் வெற்றியும் முதலிடமும் தருவார்
• தொழிலில் முன்னேற்றமும் விருத்தியும் தருவார்
• வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் தருவார்
• நீங்கள் செழித்தோங்கும்படி பெருகச்செய்வார்
• உங்கள் மனதின் விருப்பம் எல்லாம் நிறைவேற்றுவார்
• நீங்கள் கேட்பதையெல்லாம் கொடுப்பார்
• மலட்டு கர்ப்பத்தை மாற்றி உங்களுக்கு பிள்ளைவரம் ஈவார்
• திருமணமாகாத உங்களுக்கு சீக்கிரம் நல்ல வரன் தருவார்
• காணிக்கை கொடுத்தால் பன்மடங்கு திருப்பித் தருவார்
• தசமபாகம் கொடுத்தால் உங்கள் வருமானத்தை பெருக்குவார்
• சீக்கிரம் வெளிநாடு சென்று நிறையப் பணம் சம்பாதிக்கச் செய்வார்
• வாடகை வீட்டில் வசிக்கும் உங்களுக்கு சொந்த வீடு தருவார்
• இப்பொழுது உள்ள வீட்டிலும் பெரிய வீடு கட்டச் செய்வார்
• நடந்துபோகும் உங்களுக்கு இருசக்கர வாகனம் தருவார்
• பைக் ஓட்டும் நீங்கள் சீக்கிரம் கார் வாங்க உதவிசெய்வார்
• நீங்கள் விசுவாசித்தால் என்னவேண்டுமானாலும் தருவார்
• விசுவாச வார்த்தையை சொல்லச்சொல்ல அதை பலிக்கச்செய்வார்
• நேர்மறையான சிந்தை கொண்டிருந்தால் அப்படியே தந்தருளுவார்
• வடஇந்திய மிஷனரிகளை பணத்தால் தாங்கினால் ஆசீர்வதிப்பார்
• நீங்கள் ஜெபக்குறிப்பு அனுப்பினால் எங்கள் ஜெபத்தை கேட்பார்
• நாங்கள் உங்களுக்காக வேண்டிக்கொண்டால் உடனே பதிலளிப்பார்
• மரித்துபோன என் தகப்பன் வேண்டிக்கொண்டால் மனதிளகுவார்
• வேதம் வாசித்து ஜெபித்தால் உங்களுக்கு ஆசீர்வாதம் அருளுவார்
• நெடுமுழங்காலில் நின்று ஜெபித்தால் பலன் அதிகம் தருவார்
• உபவாசித்து ஜெபித்தால் ஏதுவேண்டுமானாலும் கொடுத்துவிடுவார்
• ஆலயத்துக்கு தவறாமல் போனால் ஆசீர்வதிப்பார்

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து முதன்மையாக ஆழ்மனத்தில் (ஆத்துமாவில்) சுகம் தரவே வந்தாரேயன்றி சரீர சுகம் அளிக்க அல்ல. ஆவி, ஆத்துமா, சரீரம் இவை முழுமைக்குமே அவர் இரட்சகர்; சரீரத்துக்கு மட்டும் அல்ல. அவர் தேவ குமாரன் என்று மக்கள் விசுவாசிக்கும்படியாகத்தான் அனேகருக்கு சரீரத்திலே அற்புத சுகம் அளித்தார். அப்படி சுகம் பெற்றவர்கள் பாவத்திலே தொடர்ந்து வாழக் கூடாது, மனந்திரும்பி குணப்படவேண்டுமென்று எச்சரிக்கவும் செய்தார்.

உள்ளத்தில் மெய்மாற்றம் ஏற்படாதவரை துக்கம் நீங்காது. பாவம் குடிகொண்டிருந்தால் அமைதி வராது. மெய் தேவனை அண்டிக்கொள்ளாதவர்க்கு கவலை நீங்காது. தீமையான பழக்கவழக்கம் உள்ளவர்களுக்கு வேதனை நீங்காது. இயேசுவிடம் மனந்திரும்பி பாவ மன்னிப்பு பெற்றுக்கொண்டவரின் கண்ணீரையோ நிச்சயம் துடைப்பார்.

இயேசுவை தங்கள் ஆண்டவராக ஏற்றுக்கொண்டவர்களை அவர் பரலோகத்திலுள்ள சகல ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும் ஆசீர்வதித்திருக்கிறார். பூமிக்குரியவைகளால் அல்ல. (உண்ண உணவும் உடுக்க உடையும் போதும் என்றிருக்கக்கடவோம் என்று வேதம் அறிவுறுத்துகிறது). நாம் இராஜாவின் பிள்ளைகளாக சகல வசதிகளோடும் வாழ அவர் சொல்லவில்லை. அவருக்கே தலை சாய்க்க இடமில்லாதபோது யாருக்கும் சொந்தவீடு தருவேன் என்று வாக்குப் பண்ணமாட்டார். நம்மை பணக்காரர் ஆக்கும்படியாக அவர் ஏழ்மைரூபம் எடுக்கவில்லை. ஐசுவரியவான்கள் அவருடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது அரிது என்று சொன்னார். உலகப்பொருளை சேவிக்கிறவர்கள் தேவனை சேவிக்கமுடியாது என்றும் சொன்னார். பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது!

கடன்பட்டிருக்கிறவர்கள் தங்கள் ஆடம்பர, பெருமைகாண்பிக்கும் வீண் செலவுகளை குறைத்துக்கொண்டு வருமானத்திற்கு ஏற்றபடி வாழத் தீர்மானித்தாலொழிய இயேசு ஏன் அவர்களுடைய கடன் தொல்லையிலிருந்து மக்களை விடுவிக்கவேண்டும்?

இயேசு ஒரு சமூகநல நற்செய்தியை அறிவிக்க தம்முடைய சீடர்களுக்கு கட்டளையிடவில்லை. ஆத்துமாவில் நலனுண்டாக்கும் சுவிசேஷத்தையே பிரசங்கிக்கச் சொன்னார். பள்ளிளும், கல்லூரிகளும் மருத்துவமனைகளும் கட்டும்படியாகவும், சபைக் கட்டிடங்களும் ஜெபகோபுரங்களும் எழுப்பும்படியாகவும் கல்வி அறிவு புகட்டவும் சொன்னதே இல்லை. அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிக்கச் சொல்லவில்லை. ஆத்தும ஆதாயம் செய்யவே சொன்னார். அதுவும், நாமே போய் நற்செய்தி சொல்லவேண்டும்.
மணப்பெண் அல்லது மாப்பிள்ளை கொடுப்பதும் பிள்ளைவரம் அளிப்பதும், அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தவர்களுக்கே அல்லாமல் வெறுயாருக்கும் அல்ல. தங்களுடைய விருப்பு வெறுப்புகளை தேவசித்தத்தின்கீழ் அடக்கினவர்கள் ஒருபோதும் நிபந்தனைகளை விதிக்க மாட்டார்கள். தேவன் அதனதை அந்தந்த காலத்தில் நேர்த்தியாய் செய்கிறவர் என்று நம்பி சார்ந்திருப்பார்கள்.

அதிகம் கொடுப்பவர்களுக்கு அதிகமாகவும் குறைவாகக் கொடுப்பவர்களுக்கு குறைவாகவும் கொடுப்பதற்கு இயேசு வியாபாரமோ, வங்கியோ, வட்டிக்கடையோ நடத்துபவர் அல்ல. மக்களுடைய வசதிகளை பெருக்குவது அல்ல, தம்முடைய ஜனங்களை மேன்மேலும் பரிசுத்தமாகுவாதே அவர் புதியஏற்பாட்டில் செய்வேன் என்று வாக்குப்பண்ணினது. நேர்மறையான சிந்தை அல்ல, கிறிஸ்துவின் கீழ்ப்படியும் சிந்தையே நமக்கு அவசியமானது.

புதிய உடன்படிக்கையின்படி 10% அல்ல, 100%ம் கடவுளுக்குரியதே. உங்கள் பொருளல்ல, நீங்களே அவருக்கு வேண்டும். நீங்கள் கேட்பது எதுவேண்டுமானாலும் அல்ல, அவருடைய சித்தத்தின்படி கேட்டால், தருவார். நீங்கள் பெருமை காண்பிக்க அல்ல, அவர் மகிமைப்படவே.

நமக்காக பரிந்து பேசுகிறவர் பரலோகத்தில் இருக்கிற இயேசுவும் நமக்குள் இருக்கிற பரிசுத்த ஆவியானவரும்தான். மரித்துப்போன எந்த மனுஷனும் அல்ல. நமக்குள் இருக்கும் இயேசுவே வல்லமையுள்ளவர். யாரையும் நாடி நாம் ஜெபத்திற்கோ தீர்க்கதரிசனத்திற்கோ அணுக வேண்டியதில்லை தாழ்மையோடு ஜெபித்தால் நமக்கே பதிலளிப்பார். நம்முடைய நீதியின் கிரியைகளோ, நற்கிரியைகளோ நமக்கு இரட்சிப்பை சம்பாதித்துத் தராது. நித்திய ஜீவனை விலைகொடுத்து வாங்கமுடியாது. பொல்லாதவர்களுக்கு மட்டுமல்ல, நல்லவர்களுக்கும் இரட்சிப்பு தேவை.

எது நற்செய்தி அல்ல?
Topic
The false gospel
Category
Gospel
bottom of page